அலறும் IT ஊழியர்கள்.. 10 மாதத்தில் 1.80 லட்சம் பேர் அதிரடி பணி நீக்கம்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்
வாஷிங்டன்: 2025ம் ஆண்டு ஐடி ஊழியர்களுக்கு பெரும் சிக்கலாக மாறி உள்ளது. பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் 2025 ஜனவரி மாதம் முதல் அக்டோபர் 1ம் தேதி வரை 10 மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 94 ஐடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு வருகையால் இந்த பணி நீக்கம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை காரணமாக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு நிலைமை சரியானது. பணி நீக்கம் இருக்காது என்று ஊழியர்கள் நினைத்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட், அக்சென்ச்சர் உள்பட பல்வேறு முன்ணனி ஐடி நிறுவனங்கள் மாதந்தோறும் உலகம் முழுவதும் தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இது ஐடி ஊழியர்களை பதற்றமடைய வைத்துள்ளது. தங்களின் பணி நிலைக்குமா? இல்லையா? என்ற பல கேள்விகளை அவர்களுக்குள் எழுப்பி உள்ளது.
குறிப்பாக அக்சென்ச்சர் உள்பட பல ஐடி நிறுவனங்கள் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவை தங்களின் பணிகளுக்கு பயன்படுத்த தொடங்கி உள்ளன. இதனால் பணியாளர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை விரைந்து கற்க வேண்டும். இல்லாவிட்டால் பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படுவார்கள் என்று வெளிப்படையாக வார்னிங் செய்துள்ளது.
இந்நிலையில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் டேட்டாக்கள் வெளியாகி உள்ளன. அதாவது 2025 ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 1ம் தேதி வரை உலகம் முழுவதும் ஐடி துறையில் மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரத்து 94 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை தொடரும் பட்சத்தில் 2024ம் ஆண்டை விட 2025ம் ஆண்டில் அதிகமான ஐடி ஊழியர்கள் பணியை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை Layoff.fyi மற்றும் TrueUp உள்ளிட்ட ஐடி துறை சார்ந்த டிராக்கர்ஸ் உறுதி செய்துள்ளன.
இந்த டிராக்கர்ஸ் உலகம் முழுவதும் 413 ஐடி கம்பெனிகளின் நடவடிக்கையை கண்காணித்து டேட்டாவை வெளியிட்டுள்ளன. அதன்படி 2025ம் ஆண்டில் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவை நிறுவனங்கள் பயன்படுத்துவது மற்றும் செலவை குறைத்தல், பொருளாதாரங்கள் மீதான அழுத்தம் உள்ளிட் 3 காரணங்களுக்காக ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் Rational FX ரிப்போர்ட்டின்படி 2025 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 1ம் தேதி வரை ஒருநாளைக்கு சராசரியாக 489 பேர் என்ற அளவில் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில நாட்களில் கூடுதலாகவும் ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 2024ம் ஆண்டை ஒப்பிடும்போது இந்த காலக்கட்டத்தி்ல 1.52 ஆயிரம் மட்டுமே பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமான பணி நீக்கம் என்றால் பிப்ரவரி மாதம் 16 ஆயிரம் பேரும், ஏப்ரல் மாதம் 23 ஆயிரம் பேர் பணியை இழந்துள்ளனர். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் தான் அதிகமானவர்களை பணி நீக்கி வருகிறது. இதில் அமேசான், மைக்ரோசாப்ட், ஆரக்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். இன்டெல் இதுவரை மொத்தம் 33,900 பேரை பணியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி உள்ளது. மைக்ரோசாப்ட் 19,215 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த ஆண்டு முதல் 10 மாதத்தில் அமெரிக்க நிறுவனங்கள் 1,19,368 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இது மொத்த பணி நீக்கத்தில் 66.3 சதவீதம் ஆகும்.
அதேபோல் ஐரோப்பியாவின் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அக்சென்சர் ஐடி நிறுவனம் சமீபத்திய 3 மாதத்தில் அக்சென்ச்சர் ஐடி நிறுவனம் 11,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஏஐ ஆகும். அந்த வகையில் பார்த்தால் 2025ல் மொத்தம் 1,80,094 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதில் 50, 184 பேரின் பணியை ஏஐ தான் பறித்துள்ளது. இதனால் ஏஐயின் வருகை ஐடி ஊழியர்களின் பணிகளுக்கு பெரிய ஆப்பு வைக்கிறது என்று Rational Fx சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐடி துறையை உன்னிப்பாக கவனித்து வரும் ஆலன் கோஹன் என்பவர் கூறுகையில், ‛‛ ஏஐ பயன்பாடு அதிகரித்தது, பொருளாதார அழுத்தங்கள் உள்ளிட்டவற்றால் 2025ம் ஆண்டில் ஐடி துறையில் ஊழியர்களின் பணி நீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இன்டெல், மைக்ரோசாப்ட், டிசிஎஸ், அக்சென்ச்சர் உள்ளிட்ட நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் ஐடி துறையில் உள்ளவர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஏஐ பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவது 2026ம் ஆண்டிலும் ஐடி ஊழியர்களை அதிகமாக பாதிக்க உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications