காலிஸ்தானியை கொல்ல முயன்ற ரா ஏஜெண்ட்? ஆதாரமே இல்லை! அமெரிக்கா ஊடகத்திற்கு ஒரே வரியில் இந்தியா பதிலடி
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை படுகொலை செய்ய முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி சதித் திட்டம் தீட்டியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்ட நிலையில், அதை இந்தியா முழுமையாக நிராகரித்துள்ளது.
இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் குர்பத்வந்த் சிங். கனடா மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றுள்ள இவர், காலிஸ்தான் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்

இதற்கிடையே குர்பத்வந்த் சிங் பன்னூவை அமெரிக்காவில் வைத்து படுகொலை செய்ய முயன்றதாகவும் அதில் இந்திய அரசு அதிகாரிக்குத் தொடர்பு இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.
பகீர் தகவல்: இதற்கிடையே இந்த விவகாரத்தில் கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்தியாவின் உளவு அமைப்பான ரா பிரிவில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரியான விக்ரம் யாதவ் என்பவர் தான் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய ஒரு டீமை அமைக்க முயன்றதாக அமெரிக்காவில் வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தகவல்களை இந்தியா முழுமையாக நிராகரித்துள்ளது.
நிராகரிப்பு: வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை ஆதாரமற்றது என்று கூறி வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதை நிராகரித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "குற்றவியல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா சில மாதங்களுக்கு முன்பே கவலை எழுப்பி இருந்தது. இது குறித்து விசாரிக்க இந்திய அரசு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.. விசாரணை நடந்து வரும் இந்த நேரத்தில் இதுபோல எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் வரும் ரிப்போர்ட்கள் விசாரணையைப் பாதிக்கும்" என்றார்.
கடந்த 2022இல் அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்லும் சதித்திட்டத்தை அமெரிக்கா முறியடித்ததாகவும், இந்த விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது.. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.
சிசி1: அதில் அமெரிக்க அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா என்பவருடன் சேர்ந்த இந்திய அதிகாரி ஒருவர் குர்பரவந்த் சிங்கை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், யார் எந்த இந்திய அதிகாரி என்பதை அமெரிக்க அதிகாரிகள் பொதுவெளியில் கூறவில்லை. வெறுமன "CC-1" என்று மட்டுமே குறிப்பிட்டு இருந்தனர்.
அந்த "சிசி-1" தான் விக்ரம் யாதவ் என்று வாஷிங்டன் போஸ்ட் இப்போது தெரிவித்துள்ளது. சில காரணங்களால் விக்ரம் யாதவ் மீது அமெரிக்கா நேரடியான குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை என்றும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.. வெளிநாடுகளில் இந்தியா இதுபோன்ற செயல்களில் ஈடுபடாது என்றும் இது அரசின் கொள்கைக்கு எதிரானது என்றும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும், இந்த தகல்களை விசாரிக்க விசாரிக்கக் கடந்த நவம்பர் மாதம் உயர்மட்ட விசாரணைக் குழுவை இந்தியா அமைத்தது.
அமெரிக்கா: இந்தியா இது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அதில் கிடைக்கும் முடிவுகளை வைத்து இந்திய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், "இது மிகவும் முக்கியமான விஷயம், நாங்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.
இந்தியாவும் இதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று நம்புகிறோம். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்.. இந்திய அரசு இதில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆனால், இந்த விஷயத்தை நாங்கள் விட்டுவிடப் போவதில்லை. இந்தியாவுடன் தொடர்ந்து இது குறித்துக் கேட்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications