இந்தியர்களுக்கு சூப்பர் நியூஸ்!இனி எளிதாக அமெரிக்காவில் க்ரீன் கார்டு பெறலாம்.. காத்திருக்க வேண்டாம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் க்ரீன் கார்டு கோரி விண்ணப்பித்துக் காத்திருப்பவர்கள், கூடுதலாக ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி எளிதாகவும் விரைவாகவும் அந்நாட்டின் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய மசோதா விரைவில் அங்குத் தாக்கலாகிறது. இதன் மூலம் இந்தியர்கள் அதிகளவில் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்தும் கல்வி, வேலைவாய்ப்பு என பல்வேறு காரணங்களுக்காக லட்சக்கணக்கானோர் அமெரிக்கா செல்கின்றனர்.
இந்தியாவில் இருந்து ஐடி பட்டதாரிகள் பலரும் ஆண்டுதோறும் அமெரிக்காவுக்குச் செல்கின்றனர். இதற்காக வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு ஹெச் 1 பி விசா வழங்கப்படுகிறது.

க்ரீன் கார்டு
அமெரிக்காவுக்குச் செல்லும் வெளிநாட்டினர் அங்கேயே செட்டில் ஆகிவிட வேண்டும் என விரும்புகின்றனர். அப்படி அமெரிக்காவில் செட்டில் ஆக விரும்புவோருக்கு க்ரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை அட்டை வழங்கப்படுகிறது. இந்த க்ரீன் கார்டை பெறும் வெளிநாட்டினர் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்க முடியும். இருப்பினும், ஒருவரால் நினைத்த நேரத்தில் எல்லாம் உடனடியாக க்ரீன் கார்டுகளை பெற்றுவிட முடியாது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பணி நிமித்தமாக வந்தவர்களுக்கு 1.40 லட்சம் க்ரீன் கார்டுகள் மட்டுமே அளிக்கப்படுகிறது.

கூடுதல் கட்டணம்
அதிலும் டிரம்ப் காலத்தில் கூடுதல் கெடுபிடிகள் போடப்பட்டதால், க்ரீன் கார்டுக்கு விண்ணப்பித்து பலர் ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் சூழலும் இப்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், க்ரீன் கார்டு பெறும் நடைமுறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் புதிய சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் இயற்றப்பட உள்ளது. இதன் மூலம் கூடுதலாக 5000 டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ 3.68 லட்சம்) செலுத்தி ஒருவரால் க்ரீன் கார்ட்டை பெற்றுக் கொள்ள முடியும்.

எளிதில் க்ரீன் கார்டு பெறலாம்
இது குறித்து அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்த மசோதா மூலம் க்ரீன் கார்டு கோரி விண்ணப்பித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகக் காத்திருப்பவர்கள் கூடுதல் கட்டணமாக $ 5,000 செலுத்தி க்ரீன் கார்டு பெறலாம். EB-5 வகை விண்ணப்பதாரர்கள் (குடியேறும் முதலீட்டாளர்கள்) கூடுதல் கட்டணமாக $ 50,000 (இந்திய மதிப்பில் ரூ 36.8 லட்சம்) செலுத்தி க்ரீன் கார்டு பெறலாம். அதேபோல ஒரு அமெரிக்கக் குடிமகனால் ஸ்பான்சர் செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 2,500 டாலர் (இந்திய மதிப்பில் ரூ 1.84 லட்சம்) செலுத்தி க்ரீன் கார்டு பெறலாம்.
Recommended Video

இந்தியர்களுக்கு உதவும்
அதேநேரம் அவர் விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகள் முடியவில்லை என்றால் 1500 டாலர் (இந்திய மதிப்பில் ரூ 1.1 லட்சம்) செலுத்தி க்ரீன் கார்டு பெறலாம். இந்த கட்டணம் விண்ணப்பதாரர் செலுத்தும் நிர்வாக செயலாக்கக் கூடுதல் கட்டணமாக இருக்கும். இந்த சட்டம் வரும் 2031ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹெச்1 பி விசாவில் அமெரிக்காவுக்குச் சென்று க்ரீன் கார்டு கோரி விண்ணப்பித்து விட்டு, நீண்ட ஆண்டுகளாகக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு இது மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

சட்டமாகுமா??
மேலும், குழந்தையாக இருக்கும்போது முறைகேடாக அமெரிக்காவில் புகுந்தவர்களுக்கும் இந்த மசோதா தற்காலிக பாதுகாப்பை (Temporary Protected Status) அளிக்கிறது. அதேநேரம் குடியேற்ற அமைப்பில் நிரந்தர கட்டமைப்பு மாற்றங்கள் எதுவும் இந்த தீர்மானத்தில் இல்லை. ஆண்டுக்கு க்ரீன் கார்டு வழங்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பு எதுவும் இதில் இல்லை. இந்த மசோதா சட்டமாக வேண்டும் என்றால் முதலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறை குழுவிலும், பின்னர் இரு சபைகளிலும் நிறைவேற வேண்டும். அதன் பிறகு அதிபர் பைடன் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications