கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு
வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில், தெற்கு ஈரானின் சிரிக் நகரில் உள்ள நீர்த்தேக்கங்கள் சேதமடைந்து குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கிடையே அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்காவின் அப்பாச்சி ரக நவீன ஹெலிகாப்டர் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஈரானின் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் டிரம்ப் எச்சரித்து இருந்தார். டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் இரவோடு இரவாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

அமெரிக்கா நடத்திய இரவுநேர தாக்குதலில் தெற்கு ஈரானின் சிரிக் நகரில் உள்ள இரண்டு ஏரிகள் சேதமடைந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலோர நகரின் மக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலை மனித உரிமை மீறலாக கண்டித்திருக்கும் மும்பையில் உள்ள ஈரான் தூதரகம், "சிரிக் பகுதியில் அமெரிக்காவின் தாக்குதலால் இரண்டு நீர்த்தேக்கங்கள் தாக்கப்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான நீர் உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குவது மனிதாபிமான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது" என்றது. இதற்கிடையே, ஜோர்டானில் அல்-அஸ்ராக் (Al-Azraq) நகரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் உள்ளே உள்ள நான்கு இடங்களை குறிவைத்து நீண்ட தூர ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
அந்த ஏவுகணைகள் F-35 போர் விமானங்கள் நிறுத்தப்படும் ஹேங்கர்கள் மற்றும் கட்டளை-கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட இடங்களை குறிவைத்ததாகவும், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்கு "கடுமையான மற்றும் தீர்க்கமான பதிலடி" அளிக்க தயாராக இருப்பதாகவும் ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் தீவிரமடைந்து இருக்கும் மோதலால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
ஏற்கனவே, ஹெலிகாப்டரை தாக்கியதற்கு பதிலடியாக ஹார்மூஸ் ஜலசந்தி அருகே உள்ள ஈரானிய ரேடார் தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா கடுமையான பதிலடி கொடுத்தது.
ஈரான் - அமெரிக்கா மோதலால் ஹார்மூஸ் ஜலசந்தியில் போக்குவரத்து முடங்கியிருப்பதால், சர்வதேச அளவில் எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடிகளையும் நாடுகள் எதிர்கொண்டு வரும் நிலையில், தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்து இருப்பது நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துவதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications