செனட், பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை இல்லை- ஜோ பிடனால் நினைத்ததை எளிதில் சாதிக்க முடியுமா?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போது செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை பெற முடியாத நிலையில் புதிய அதிபராகும் ஜோ பிடனால் நினைத்த திட்டங்களை எளிதாக நிறைவேற்ற முடியுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற இரு சபைகளைப் போல அமெரிக்காவின் பிரதிநிதிகள் (கீழ்சபை), செனட் சபை (மேல்சபை) உண்டு. பிரதிநிதிகள் சபையில் 435 இடங்களும் செனட் சபையில் 100 இடங்களும் உள்ளன.

பிரதிநிதிகள் சபை நிலவரம்
பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு தேவை 218 எம்.பி.க்கள் ஆதரவு. ஜோ பிடனின் ஜனநாயக கட்சிக்கு தற்போது வரை 212 எம்.பி.க்கள் ஆதரவு இருக்கிறது. டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு 198 எம்.பிக்கள் உள்ளனர்.

செனட் சபை
செனட் சபையில் பெரும்பான்மைக்கு 51 எம்.பி.க்கள் ஆதரவு ஆதரவு தேவை. ஜோ பிடனின் ஜனநாயக கட்சிக்கு 46 எம்.பி.க்களும் டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு 48 எம்.பிக்களும் உள்ளன. இன்னமும் நிரப்பப்படாத எம்.பி. இடங்கள் ஜனவரிமாதம் தான் நிரப்பப்படும்.

சமபலத்தில் குடியரசு கட்சி
இந்த நிலையில் டிரம்ப்பின் கெடுபிடி சட்டங்களை தகர்த்து தலைகீழ் மாற்றத்தை கொண்டுவரலாம் என ஜோ பிடன் வாக்குறுதிகள் அளிக்கிறார். ஆனால் செனட்டிலும் பிரதிநிதிகள் சபையிலும் வலிமையாக அல்லது ஏறத்தாழ சமபலத்தில் இருக்கும் குடியரசு கட்சியினர் அவ்வளவு எளிதாக ஒவ்வொரு நகர்வுகளையும் அனுமதிப்பார்களா? என்பது கேள்விக்குறிதான்.

ஒவ்வொரு முறையும் போராட்டம்
இதனால் என்னதான் அதிபர் தேர்தலில் ஜெயித்தாலும் ஜோ பிடனின் ஒவ்வொரு நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கும் பெரும் போராட்டம் காத்திருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம். ஆகையால் ஜோ பிடனின் ஆட்சிக் காலம் முட்கள் மீது நகர்ந்து செல்லும் பயணமாக இருக்கக் கூடும்.












Click it and Unblock the Notifications