அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை இல்லை! சீனா வர்த்தகத்துக்கு சிவப்பு கம்பளம் விரித்த டிரம்ப்!
வாஷிங்டன்: என்னதான் அமெரிக்காவுக்கு சீனா ஆகாத நாடாக இருந்தாலும், அமெரிக்காவால் டிக்டாக் செயலியை தடை செய்ய முடியவில்லை. ஆனால் தேசபக்தி உணர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் டிரம்ப், விரைவில் டிக்டாக்கை தடை செய்வார் என்று அவர் ஆதரவாளர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். இப்படி இருக்கையில்தான் தடையெல்லாம் கிடையாது என்று டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
டிக்டாக் செயலி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தை சேர்ந்ததாகும். இந்த செயலி மூலம் அமெரிக்கர்களின் டேட்டாக்கள் திருடப்படுகிறது என்று டிரம்பின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனையடுத்து டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க டிரம்ப் அரசு ஆலோசித்தது.

ஆலோசனையின்படி 6 மாதங்களுக்குள் டிக்டாக் செயலியின் அமெரிக்க பிரிவை, ஏதேனும் ஒரு அமெரிக்க முதலாளியிடம் விற்க வேண்டும். தவறும் பட்சத்தில் டிக்டாக் செயலி, அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த 6 மாத காலக்கெடு செப்.17ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டிரம்ப் பேசியிருக்கிறார்.
தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "நம் நாட்டின் இளைஞர்கள் காப்பாற்ற மிகவும் விரும்பிய ஒரு குறிப்பிட்ட நிறுவனம் குறித்து ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய வர்த்தக சந்திப்பு மிகச் சிறப்பாக முடிந்தது. இது குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் வெள்ளிக்கிழமை பேச உள்ளேன்" என்று கூறியிருக்கிறார். ஆனால், நிறுவனத்தின் பெயர் என்ன? ஒப்பந்தத்தின் விவரங்கள் என்ன? என எதையும் அவர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.
ஸ்பெயினில் நடந்த இந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்து சீன தரப்பில் எந்தவித உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. அமெரிக்காவிற்கு டிக்டாக் மிகப்பெரிய சந்தையாகும். எனவே இந்த சந்திப்பில் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் முக்கிய பேசுபொருளாக இருந்தது.
சீனா மீது வரியை வாரி இறைத்த டிரம்ப், நிச்சம் டிக்டாக் செயலியை தடை செய்துவிடுவார் என்று டிரம்ப் ஆதரவாளர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கு நேர் எதிராக டிரம்ப் பேசியிருக்கிறார். எனவே டிரம்ப் ஆதரவாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications