அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு.. 9 பேர் பலி.. சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துயரம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாண்டேரா பார்க் பகுதியில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்த மக்கள் மீது மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 9 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.
உலக வல்லரசு நாடான அமெரிக்காவிற்கு பெரும் தலைவலியாக துப்பாக்கி கலாசாரம் உள்ளது. அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இளம் வயதினர் மத்தியில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து அமெரிக்காவை அதிர வைத்து வருகிறது.

கலிபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு
குறிப்பாக இரவு நேர கிளப்கள் போன்றவற்றில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. இதனால் அந்நாடு துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், ஆசிய மக்கள் அதிகம் வகிக்கும் பகுதிகளில் ஒன்றான கலிபோர்னியாவில் நேற்று சனிக்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.

9 பேர் வரை பலி
லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மாண்டெரே பார்க் பகுதியில் சீன புத்தாண்டை கொண்டாட ஏராளமான மக்கள் நேற்று(சனிக்கிழமை) இரவு கூடியிருந்தனர். அப்போது மர்ம நபர் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் வரை உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்து இருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

நோக்கம் தெரியவில்லை
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான நோக்கமும் தெரியவில்லை. உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நிகழ்விடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் அணி வகுத்து வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம்
காயம் அடைந்த மக்களை படுக்கைகளில் வைத்து எமெர்ஜென்சி ஊழியர்கள் தூக்கி கொண்டு செல்லும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி அதிர வைத்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி கன்ட்ரோலர் கென்னத் மெஜியா தனது ட்விட் பதிவில் இது பற்றி கூறுகையில், "துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications