உளவு பார்க்கும் ஈரான் ஹேக்கர்கள்..அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க முயற்சி.. வந்த பகீர் வார்னிங்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில், ஈரானை சேர்ந்த ஹேக்கிங் குழு ஒன்று அதில் தலையிட முயல்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் இந்த முறை கடும் போட்டி நிலவும் நிலையில், அதில் தலையிட இந்த ஹேக்கிங் குழு முயல்வதாக மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்குகிறது. இன்னும் இரு வாரங்களில் அங்கு அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

இந்த முறை கடும் போட்டி நிலவுவதால் இரு தரப்பும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களுக்குக் குறைவாகவே இருக்கும் நிலையில், பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
ஈரான் ஹேக்கிங் குழு: அதில் ஈரானை சேர்ந்த ஹேக்கிங் குழு ஒன்று அமெரிக்கத் தேர்தல் தொடர்பான இணையதளங்கள், ஊடகங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் எப்போது வேண்டுமானாலும் ஹேக்கிங் முயற்சி நடக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவே இப்படிச் செய்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.
காட்டன் சாண்ட்ஸ்டார்ம் என்று அழைக்கப்படும் இந்த ஹேக்கர்கள் ஈரான் நாட்டில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை தொடர்பைக் கொண்டவர்கள் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இழுபறி நிலவும் மாகாணங்களில் தேர்தல் சார்ந்து இருக்கும் பல்வேறு இணையதளங்களை இந்த ஹேக்கிங் அமைப்பு உளவு பார்த்துள்ளது. மேலும், கடந்த மே மாதமே இவர்கள் பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றின் இணையதளத்தை முழுமையாக ஸ்கேன் செய்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் ஆய்வாளர்கள்: இது தொடர்பாக மைக்ரோசாஃப்ட் ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், "அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், ஈரான் ஹேக்கர்களின் செயல்பாடுகள் அதிகரிக்கும் என்றே நினைக்கிறோம். இந்த ஹேக்கர்களின் கடந்த கால செயல்பாடுகளை வைத்துப் பார்த்தால் அமெரிக்க அதிபர் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தவே முயல்வார்கள். நாம் கவனமாக இருக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் ஐநாவுக்கான ஈரான் செய்தித் தொடர்பாளர் இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதில் அவர், "இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் ஆதாரமற்றவை. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எங்களுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.
காட்டன் சாண்ட்ஸ்டார்ம்: கடந்த 2020 அமெபிர் தேர்தலுக்கு முன்பும் இந்த காட்டன் சாண்ட்ஸ்டார்ம் ஹேக்கர்கள் இதுபோலவே செய்தனர். தங்களை "ப்ரூட் பாய்ஸ்" என்ற வலதுசாரி இயக்கத்தினர் போலக் காட்டிக் கொண்ட அவர்கள், புளோரிடா மக்களுக்கு மிரட்டல் இ மெயிலை அனுப்பியுள்ளனர். டிரம்பிற்கு வாக்களிக்கவில்லை என்றால் அழிவைச் சந்திக்க நேரிடும் என மிரட்டல் மெயில் அனுப்பினர். இருப்பினும், அது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே அதிகாரிகள் கூறினர்.
மேலும், 2020 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் அங்கு வன்முறையை ஏற்படுத்த காட்டன் சாண்ட்ஸ்டார்ம் முயன்றதாகவே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதனால் மைக்ரோசாஃப்ட் விடுத்துள்ள எச்சரிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த புகார்களுக்கு அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநர் அலுவலகம் இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications