விண்வெளியில் திடீர் வெளிச்சம்.. 7 மணி நேரம் நீடித்த மர்ம சிக்னல்.. விஞ்ஞானிகளுக்கே புரியாத அந்த ஒரு விஷயம்
வாஷிங்டன்: விண்வெளியில் யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்துள்ளது. விண்வெளியில் பொதுவாக வெடிப்புகள் நடப்பது சாதாரணம் தான் என்றாலும் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் சுமார் 7 மணி நேரம் நீடித்த ஒரு வெடிப்பு நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது.. GRB 250702B எனப்படும் இந்த வெடிப்பு நமக்கு உணர்த்துவது என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாகவே விண்வெளியில் நாம் கனவிலும் நடக்காத பல அதிசயங்கள் நடந்து கொண்டே இருக்கும். அதில் சில விஷயங்களை மட்டுமே மனிதர்களால் கண்டுபிடிக்கக் கூட முடியும். அப்படியொரு சம்பவம் தான் நடந்தது. கடந்த ஆண்டு நடந்த அந்த அதிசயச் சம்பவம் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

7 மணி நேரம் நீடித்த வெடிப்பு
வானியலாளர்கள் விண்வெளியில் இந்த அதிசயத்தைக் கண்டுபிடித்தனர். அதாவது விண்வெளியில் சுமார் ஏழு மணி நேரம் நீடித்த ஒரு வெடிப்பைக் கண்டறிந்தனர். விண்வெளியில் பொதுவாக இதுபோன்ற வெடிப்புகள் நடப்பது சாதாரணம் தான் என்றாலும் இவ்வளவு நேரம் அந்த வெடிப்பு நீடித்தது அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஜி.ஆர்.பி. 250702பி (GRB 250702B) என்று ஆய்வாளர்கள் இதைக் குறிப்பிடுகிறார்கள். பூமியில் கண்டறியப்பட்டுள்ள உயர் ஆற்றல் காமா கதிர் வெடிப்பாக இது இருக்கிறது.!
2 மடங்கு அதிகம்
நாசாவின் ஃபெர்மி காமா-கதிர் விண்வெளி டெலஸ்கோப் தான் இந்த வெடிப்பைக் கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக நாசா கோடார்ட் மைய ஆய்வாளர் எலிசா நெய்ட்ஸ் கூறுகையில், "காமா கதிர்களின் ஆரம்ப அலை குறைந்தது 7 மணி நேரம் நீடித்தது. இதற்கு முன்பு கண்டறியப்பட்ட மிக நீண்ட ஜிஆர்பியை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும். மேலும், இந்தச் சம்பவத்தில் நாங்கள் வழக்கத்திற்கு மாறான சில பண்புகளையும் கண்டறிந்தோம். கடந்த 50 ஆண்டுகளில் நாம் கண்டிராத ஒரு வெடிப்பாக இது இருக்கிறது" என்றார்.
இந்த காமா கதிர்கள் விண்வெளியில் ஒரே இடத்தில் இருந்து மூன்று முறை வந்துள்ளது. இதுபோல விண்வெளியில் ஒரே இடத்திலிருந்து வந்த மிக நீண்டகால ஜிஆர்பி இதுவாகும். இது சுமார் ஏழு மணி நேரம் அதாவது 25,000 வினாடிகள் நீடித்ததாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதிநவீன மற்றும் சக்திவாய்ந்த 5 தொலைநோக்கிகள் இதை உறுதி செய்துள்ளன.
என்ன காரணம்
இந்த மர்மத்திற்கான விடை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இதற்குச் சில காரணங்கள் இருக்கலாம் என அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.. முதலில் ஹீலியம் இணைவு. அதாவது பிளாக் ஹோல் ஹீலியம் நட்சத்திரத்தை விழுங்கி ஆற்றலை வெளியிடுவது.. அல்லது அலை சீர்குலைவு நிகழ்வு, அதாவது பிளை ஹோல் இணை நட்சத்திரத்தைப் பிரிப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இது புதிய அண்ட வெடிப்பைக் கூட குறிக்கலாம் எனச் சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மிரண்ட ஆய்வாளர்கள்
இந்த கண்டுபிடிப்பு காமா கதிர் வெடிப்புகள் மற்றும் நட்சத்திரங்கள் மரணம் பற்றிய தற்போதைய மாடல்களுக்கு சவால் விடுப்பதாக உள்ளது. இது தீவிர விண்வெளி சூழல்கள் குறித்த புதிய தகவல்களையும் நமக்கு வழங்குகிறது.
பொதுவாக விண்வெளியில் இதுபோல நடக்கும் எந்தவொரு சம்பவத்தையும் ஒரு கருவியால் முழுமையாகக் கவனிக்க முடியாது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். சாட்டிலைட்டில் இருக்கும் பல கருவிகளில் இருந்து கிடைக்கும் டேட்டாவை வைத்தே நம்மால் இதைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications