சீறும் இயற்கை - இந்தியாவில் வெள்ளம், கிரீஸ் நாட்டில் அனல், காட்டுத்தீ, பிலிப்பைன்ஸ்சில் நிலநடுக்கம்
உலகம் முழுவதும் இயற்கையின் சீற்றம் அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் வெப்ப அலை அதிகரிக்கிறது மற்றொரு பக்கம் பெரு வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம் என இயற்கையின் கோர தாண்டவத்தால் லட்சக்கணக்கான உயிர்கள் மடிந்து வருகின்றன
வாஷிங்டன்: இயற்கையின் கோரத்தாண்டவம் உலகம் முழுவதும் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்தியாவில் மேகவெடிப்பு மழையால் பெருவெள்ளம் நிலச்சரிவு, கிரீஸ் நாட்டில் வெப்ப அலையால் எரியும் காட்டுத்தீ, பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் என உலகம் முழுவதும் இயற்கையின் சீற்றம் அதிகரித்துள்ளது.
Recommended Video
முன்பெல்லாம் உலகத்தில் ஏதாவது ஒரு பகுதியில் எரிமலை வெடிக்கும் நிலநடுக்கம் ஏற்படும். இப்போது அடிக்கடி எரிமலை தனது நெருப்புக்குழம்புகளை கக்குகிறது. பொறுமைக்கு பெயர்போன பூமித்தாயும் அடிக்கடி அதிர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறார்.

சீனாவில் ஆயிரம் ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை சில நாட்களில் கொட்டியதால் பெருவெள்ளம் ஏற்பட்டது. அதே போல இந்தியாவில் பருவமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பா கண்டத்தின் ஒரு பகுதியை கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டில் 46 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரீஸ் நாட்டில் உச்சபட்ச வெப்பம் பதிவாகும் என்று கூறப்பட்ட நிலையில் ஸ்பெயின் போர்ச்சுக்கல் நாட்டிலும் வெப்ப அலையின் தாக்கம் தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் வெப்ப அலையின் தாக்கம் மேலும் தீவிரமாகிறது. பூமியின் வெப்பம் கூடினால், மிதமிஞ்சிய மழை பெய்யும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். உலகில் வெப்பம் மிகுந்த மூன்றாவது மாதமாக இந்த ஆண்டின் ஜூலை மாதம் பதிவாகியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றிய விஞ்ஞானிகள் கூறினார்கள். பின்லாந்திலிருந்து அமெரிக்கா வரை வழக்கத்துக்கு மாறாக வெப்பம் மிகுந்திருந்தது. கடந்த மாதத்தில் உலகின் பல நாடுகளில் வானிலை மாற்றத்தால் அழிவு நேர்ந்தது.
அமெரிக்காவிலும் கனடாவிலும் ஜூன் மாதம் கடுமையான வெப்பத்தால் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர். காட்டுத் தீ அதிகமாகப் பரவியது. சீனா, பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கனத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது. ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட சில பகுதிகளில் வழக்கத்தை விட குளிர் அதிகரித்தது.
கடந்த ஒரு வார காலமாகவே கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் தீவுப் பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. பல சுற்றுலாத் தளங்கள் சேதமடைந்துள்ளன. காட்டுப் பகுதியில் பரவிய தீ, தற்போது மக்களின் குடியிருப்புப் பகுதிகளிலும் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளன.
ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் காட்டுத் தீ கிரீஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ், கிரீஸ் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சியில் பேசும்போது, நாட்டு மக்களின் வலியை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தங்களுடைய இடமும், வீடும் நெருப்புக்கு இரையாவதை யார் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் எங்களால் முயன்றதைச் செய்தோம். ஆனால் அது போதவில்லை. தோல்விகள் கண்டறிந்து விரைவில் சரிசெய்யப்படும். காட்டுத் தீயால் ஏற்பட்ட சேதத்தைச் சரி செய்ய 500 மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் தெரிவித்தார்.
கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் பிப்ரவரி மாதம் பெய்த பனியால் சாலைகள் முடங்கின. ஏதென்ஸில் -19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவுக்கு காரணமாக அமைந்தது இந்த நிலையில் தற்போது வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வருகிறது.
அல்ஜீரியா நாட்டில் காட்டுத்தீ பரவி அங்கு பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட 25 ராணுவ வீரர்களும் பொதுமக்களில் 7 பேரும் உயிரிழந்தனர். வடக்கு ஆப்ரிக்கா நாடான அல்ஜீரியாவில் வடக்கு வனப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று இரவு 12க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பற்றியது. வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று எதிரொலியாகக் காட்டுத்தீ மளமளவெனப் பரவி வந்தது. மேலும், கிழக்குப் பகுதியில் உள்ள டிசி ஓசோ மாகாணத்தின் வனத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்தநாட்டு அரசு திணறி வருகிறது. கட்டுக்கடங்காமல் எரியும் நெருப்பினால் வனப்பகுதியை ஒட்டி குடியிருப்பவர்களை ராணுவத்தினர் வெளியேற்றி வருகின்றனர்.
பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்களுடன் அல்ஜீரியா ராணுவம் கைகோர்த்துள்ளது. இந்நிலையில், கபிலை மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளதாக அல்ஜீரியா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 25 ராணுவ வீரர்களும் அடக்கம் என்று அல்ஜீரியா பிரதமர் அய்மான் தெரிவித்துள்ளார். மேலும், காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர நேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் பிரதமர் அய்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சியரா நெவாடா மலைகளில் தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் அங்குள்ள தங்கச் சுரங்கங்களின் மத்தியில் அமைந்துள்ள கீரின் வில்லே நகரம் முற்றிலும் எரிந்து அழிந்துள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட இந்த கிரீன் வில்லே நகரத்தின் மொத்த மக்கள் தொகையே 800 பேர் தான். இந்நிலையில் இந்த மக்கள் அனைவரும் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். டிக்ஸி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த காட்டுத் தீ முன்னதாக 2 லட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்றி எரிந்தது. தற்போது அது மேலும் பரவி 4 லட்சத்து 89 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு எரிந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
பிலிப்பைன்சின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சுனாமியை உருவாக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் சுமார் 49 மைல் தொலைவில் மையம் கொண்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவிக்கிறது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம், பொருட்சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இயற்கையின் கடுமையான சீற்றத்தால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கருகி பலியாகியுள்ளன. லட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இயற்கை சீற்றம் எதை உணர்த்துகிறது என்று மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications