இந்தியாவின் தடையால் முண்டியடித்த மக்கள்! USல் அரிசி இருக்குதா? இல்லையா? களத்தில் இருந்து நேரடி தகவல்
வாஷிங்டன்: பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு இந்தியா தடை விதித்ததன் காரணமாக அமெரிக்காவில் கடைகளில் முண்டியடித்துக் கொண்டு அரிசி வாங்கும் வீடியோக்கள் வெளியாகின. அமெரிக்காவில் உண்மையில் நிலை என்ன? என்பது குறித்த நேரடி தகவலை பார்க்கலாம்.
எல் நினோ பருவ கால மாற்றத்தின் காரணமாக சீரற்ற வானிலை நிலவி வருகிறது. இதனால் அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மறுபக்கம் உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலால் உலகளவில் சரக்கு போக்குவரத்து விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு கோதுமை விலை 10 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது.

இந்தியாவின் பிரதான உணவாக இருக்கும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு திடீரென தடை விதித்து உத்தரவிட்டது. அதன்படி பாசுமதி அரிசியை தவிர்த்து வேறு எந்த அரிசி வகையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாத நிலை ஏற்பட்டது.
இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என மத்திய அரசின் வர்த்தகத் துறையின் கீழ் உள்ள வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இயக்கம் அறிவித்தது. உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40% பங்கு வகிக்கும் நிலையில் இந்த தடை சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. உலகளவில் 300 கோடிக்கும் அதிகமானோருக்கு பிரதான உணவாக அரிசிதான் உள்ளது.
இந்தியா அரிசி ஏற்றுமதிக்குக் விதித்த தடையின் காரணமாக சர்வதேச அளவில் அரிசியின் விலை பன்மடங்கு உயரும் என்று அஞ்சப்படுகிறது. ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக வெளிநாடுகளில் அரிசி வாங்க அங்கு வசிக்கும் இந்தியர்கள் அலைமோதுவதாக செய்திகள் வெளியானது. குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவிலும் இந்தியர்கள் சூப்பர் மார்க்கெட் வாயிலில் அரிசி வாங்க நீண்ட வரிசை காத்திருக்கும் வீடியோ வெளியாகியது.
பல மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று மூட்டை மூட்டையாக அவர்கள் அரிசி வாங்கிச் செல்வது அந்த வீடியோவில் இடம்பிடித்து உள்ளது. அமெரிக்காவில் உண்மையில் நிலை எப்படி இருக்கிறது.. அங்கு அரிசி தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறதா? என்பதை ஒன் இந்தியா நேரடியாக களத்தில் சென்று பார்த்தது. அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் உள்ள கடையில் சென்று பார்த்த போது, உண்மையில் அங்கு பொன்னி அரிசி, இட்லி அரிசி, சொர்ணமசூரி அரிசி வாங்குவதற்கான தட்டுப்பாடு அதிக அளவில் இருக்கவே செய்கிறது என்பதை பார்க்க முடிந்தது.
குறிப்பாக இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்ததுமே, மக்கள் அதிக அளவில் அரிசியை வாங்கியதை பார்க்க முடிந்தது. அது மட்டும் இல்லாமல் ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசிதான் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளையும் சில கடைகள் விதித்து இருக்கின்றன.மிசௌரி மாகாணத்தில் உள்ள கடைகளில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பை பொன்னி அரிசி அல்லது சொர்ணமசூரி என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் காரணமாக அங்குள்ள மக்கள் பல்வேறு கடைகளுக்கு சென்று அரிசியை வாங்குவதை பார்க்க முடிந்தது.
இந்தியர்கள் விரும்பி வாங்கும் சொர்ணமசூரி அரிசி காஸ்கோவில் உள்ள மொத்த விற்பனைக் கடையில் முற்றிலும் தீர்ந்து போயிருந்தது. எனவே அதற்கு பதிலாக மற்ற அரிசிகளையே இந்தியர்கள் பெரும்பாலும் வாங்குகின்றனர். இந்திய அரசு கடந்த ஆண்டு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து இருந்த போது கோதுமைக்கு இப்படியான ஒரு தட்டுப்பாடு நிலவியது. தற்போது அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரிசி தட்டுப்பாடு எப்போது நீங்கும்? விலை எப்போது குறையும் என்பது அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications