"அணு ஆயுதங்கள்.." சீனாவுடன் சேர்ந்து பாகிஸ்தான் செய்யும் காரியம்.. அமெரிக்கா பகீர் ரிப்போர்ட்
வாஷிங்டன்: பாகிஸ்தான் தனது ஆயுதங்களை எந்தளவுக்கு நவீனமயமாக்கி வருகிறது.. இதற்காக யாரைச் சார்ந்து இருக்கிறது.. அவர்களின் திட்டம் இப்போது என்னவாக இருக்கிறது என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை அமெரிக்காவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள சில பாயிண்டுகள் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியா பாகிஸ்தான் இடையே இம்மாத தொடக்கத்தில் மோதல் வெடித்திருந்தது. இதில் இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் தோல்வியை அடைந்தது அனைவருக்கும் தெரியும். அதேநேரம் பாகிஸ்தான் திரைமறைவில் பல்வேறு வேலைகளைச் செய்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் குறித்து சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்கா அறிக்கை
அதாவது பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களைச் சீன உதவியுடன் நவீனமயமாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாகிஸ்தான் இன்னுமே இந்தியாவை ஒரு அச்சுறுத்தலாகவே தொடர்ந்து பார்ப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் உலக அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளுடனான எல்லை தாண்டிய மோதல்களே பாகிஸ்தான் ராணுவத்திற்கு அடுத்த சில ஆண்டுகள் பெரிய பிரச்சினையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் தனது அணு ஆயுதக் களஞ்சியத்தைத் தொடர்ந்து நவீனமயமாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன உதவியுடன்
அதில் மேலும், "பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி வருகிறது.. அதன் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்கிறது. மேலும், பாகிஸ்தான் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை அதன் அண்டை நாடுகளிடம் இருந்து தொடர்ந்து வாங்கி வருவது கிட்டதட்ட உறுதியாகத் தெரிகிறது. குறிப்பாகப் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை உருவாக்கும் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தைச் சீனாவிடமிருந்து பாகிஸ்தான் பெற்று வருகிறது. அதில் சில ஹாங்காங், சிங்கப்பூர், துருக்கி மற்றும் ஐக்கிய அமீரகம் வழியாகவும் பாகிஸ்தானுக்குச் செல்கிறது.
பாகிஸ்தானுக்கு ராணுவ உபகரணங்களை வழங்கும் முக்கிய நாடாகச் சீனா தொடர்ந்து இருந்தாலும், பாகிஸ்தானில் வேலை செய்யும் சீன ஊழியர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களால் அந்த உறவு சீர்குலைந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் சீனா இடையேயான உறவும் கூட பதற்றத்தில் இருக்கிறது.
இந்தியாவை அச்சுறுத்தலாகப் பார்க்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதுகிறது.. இதன் காரணமாகவே இந்தியாவுக்கு இணையாகப் பாகிஸ்தானும் தனது ராணுவத்தை வலுப்படுத்தவும் அணு ஆயுதங்களைத் தயாராக வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இம்மாத தொடக்கத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாகவும் சில பாயிண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, "மே 7 முதல் 10 வரை இரு நாடுகளும் தொடர்ச்சியாக ஏவுகணை, ட்ரோன் மற்றும் கனரக பீரங்கி மூலம் மாற்றி மாற்றித் தாக்கிக் கொண்டன. மே 10ம் தேதி இரு தரப்பும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொண்டன" எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியா சீனா
இந்தியா சீனா உறவு குறித்து அதில், "கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும் வீரர்களைக் குறைக்கவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. இருப்பினும், எல்லை விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் தொடர்கிறது. மேலும், இந்தியா தனது பாதுகாப்புத் துறையில் உள்நாட்டில் உற்பத்தியைத் தொடர்ந்து ஊக்குவிக்கும். ராணுவத்தை நவீனமயமாக்கவும் தனது மேட் இன் இந்தியா திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அக்னி-I, அக்னி-V சோதனைகள் மற்றும் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் உள்ளிட்டவை குறித்தும் அதில் சில கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா இப்போது ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் ஆயுதங்களைக் குறைத்திருந்தாலும், இந்தியா ரஷ்யா இடையேயான நல்லுறவு தொடரவே செய்யும் என அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications