டிரம்ப் - புதின் ஆக.15ல் சந்திப்பு! 10 ஆண்டுக்கு பின் அமெரிக்கா செல்லும் ரஷ்ய அதிபர்.. பின்னணி
வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 3 ஆண்டுகளாக போர் புரிந்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயன்று வருகிறார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பலமுறை பேசிய நிலையில் ஆகஸ்ட் 15ல் இருவரும் நேரில் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பு அமெரிக்காவின் அலஸ்காவில் நடைபெற உள்ளது.
உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போரை தொடங்கியது. இந்த போர் 3 ஆண்டுகளை கடந்தும் நடந்து வருகிறது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தம் செய்ய முயன்று வருகிறார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் நேரடியாகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி வழியாகவும் டிரம்ப் பேசினார்.

அதுமட்டுமின்றி ரஷ்ய நாட்டின் பிரதிநிதிகளுடன், அமெரிக்கா நாட்டின் பிரதிநிதிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. விளாடிமிர் புதின் - டிரம்ப் ஆகியோர் வரும் 15ம் தேதி நேரில் சந்தித்த பேச உள்ளனர். இதனை டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளார்.
இதுபற்றி டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில், ‛‛அமெரிக்க அதிபரான எனக்கும், ரஷ்ய அதிபராரான புதின் இடையேயான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு அடுத்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) அலஸ்காவில் நடைபெற உள்ளது. பிற விவரங்கள் அடுத்தடுத்து தெரிவிக்கப்படும். இதுபற்றிய உங்களின் கவனத்துக்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது ரஷ்யா தரப்பில் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை புதின், டிரம்பிடம் முன்வைப்பார். அதன்பிறகு அதுபற்றி டிரம்ப் தரப்பில் உக்ரைனிடம் எடுத்து கூறி போர் நிறுத்தம் கொண்டு வரப்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும் தற்போது ரஷ்யா - அமெரிக்கா இடையே பிரச்சனை உள்ளது.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்துள்ளது. இந்த விஷயத்தில் ரஷ்யா - அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமின்றி விளாடிமிர் புதின் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா செல்கிறார். இதற்கு முன்பு கடந்த 2015 செப்டம்பர் மாதம் ஐநா பொது தேர்தல் சமயத்தில் நியூயார்க் சென்றார். அப்போது அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா செயல்பட்டார். அதன்பிறகு புதின் அமெரிக்கா செல்லவில்லை. இப்போது தான் முதல் முதலாக அமெரிக்காவில் உள்ள அலஸ்காவிற்கு டிரம்பை சந்திக்க செல்கிறார். இதனால் டிரம்ப் - புதின் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications