மாற்றி பேசும் டிரம்ப்.. ரஷ்யா அதிபர் புதின் சொல்வது சரி தானாம்.. அப்போ உக்ரைன்? ஆஹா பெரிய ட்விஸ்ட்
வாஷிங்டன்: ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் விவகாரத்தில் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். அதிபர் புதினுடனான சந்திப்பைத் தொடர்ந்து டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறார். இது புதினுக்கு சாதமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நாளை உக்ரைன் அதிபர் மற்றும் ஐரோப்பிய தலைவர்களை டிரம்ப் சந்திக்கும் நிலையில், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் நீண்ட காலமாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர இதுவரை பல்வேறு தரப்பினரும் முயன்றனர். ஆனாலும், மோதல் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ரஷ்யா உக்ரைன் இடையே உடன்பாடு எட்டுவதில் சிக்கல்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

டோனை மாற்றிய டிரம்ப்
அமெரிக்க அதிபரான டிரம்பும் கூட மோதலை முடிவுக்குக் கொண்டு வரத் தீவிரமாக முயன்று வந்தார். உக்ரைனில் உடனடியாகச் சண்டையை நிறுத்த வேண்டும் என்பதையே டிரம்ப் இத்தனை காலம் சொல்லி வந்தார். உக்ரைனில் மோதலை நிறுத்தவில்லை என்றால் ரஷ்யாவுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம் டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்தச் சூழலில் தான அவர் திடீரெனத் தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறார்.
ரஷ்யாவுக்கு சாதகம்
தற்காலிக நிறுத்தமாவது உடனடியாக வேண்டும் எனச் சொன்ன டிரம்ப், இப்போது அமைதி ஒப்பந்தம் மூலம் போரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் சொல்லியிருக்கிறார். இது ரஷ்ய அதிபர் புதினுக்கு சாதகமான ஒன்றாகவே கருதப்படுகிறது. ஏனென்றால், புதின் நீண்ட காலமாகவே முழுமையான அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை வலியுறுத்தி வந்தார். இருப்பினும், போரைத் தொடர ரஷ்யா இதை ஒரு போர் தந்திரமாகப் பயன்படுத்துவதாகவே பலரும் விமர்சித்து வந்தன. ஆனால், இப்போது டிரம்ப் கூட அந்த நிலைப்பாட்டிற்கு மாறியிருக்கிறார்.
அலாஸ்காவில் புதின் உடனான சந்திப்பை முடித்துவிட்டு வாஷிங்டனுக்கு திரும்பும் போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் டிரம்ப் பேசினார். பின்னர் அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இந்தப் பயங்கரமான போரை முடிவுக்குக் கொண்டுவர, நேரடி அமைதி ஒப்பந்தமே சிறந்த வழி என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டோம். சண்டையை நிறுத்தும் தற்காலிக ஒப்பந்தங்கள் பெரும்பாலும் நிலைப்பதில்லை" என்றார். மேலும், அமெரிக்கா உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
புதின் சொல்லும் ஐடியா
டிரம்ப் புதின் சந்திப்பில் மோதலைப் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன. குறிப்பாக ரஷ்யாவிடம் உள்ள உக்ரைன் பகுதிகள் இரண்டையும் முழுமையாக ரஷ்யாவுக்கு ஒப்படைக்க வேண்டும் என புதின் சொன்ன நிலையில், அதை டிரம்ப் ஆதரித்தார். அதற்குப் பதிலாக கெர்சன் மற்றும் சபோரிஜியா பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதலை நிறுத்துமாம். கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியை உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று புதின் கோருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் அதிபர் சொல்வது என்ன
உக்ரைன் மோதல் தொடங்கிய பிறகு அந்நாட்டிற்குச் சொந்தமான 4 பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டதாக ரஷ்யா அறிவித்தது. ஆனால், எந்தப் பகுதியையும் ரஷ்யா முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை. இந்தச் சூழலில் தான் புதின் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. டிரம்ப் இதற்கு ஓகே சொன்னாலும் கூட உக்ரைன் அதிபர் நிச்சயம் டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மாட்டார் என்றே தெரிகிறது.
இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நாளை திங்கள்கிழமை டிரம்ப் சந்திக்கிறார். பல ஐரோப்பியத் தலைவர்களும் இதில் கலந்து கொள்ளும் நிலையில், இது முக்கியத்துவம் பெறுகிறது. கலந்து கொள்கிறார்கள். முன்பு ஜெலன்ஸ்கி- டிரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கூட்டம் சண்டையில் முடிந்த நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. இதைப் பொறுத்தே உக்ரைன் ரஷ்யா மோதல் முடிவுகள் இருக்கும்.












Click it and Unblock the Notifications