கமலா ஹாரிஸுக்கு பாதுகாப்பை குறைத்த டிரம்ப்.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரும், 2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டவருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு வழங்கி வந்த ரகசிய சேவை பாதுகாப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார். இது அந்நாட்டு அரசியலில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
சாதாரணமாக, துணை அதிபர்கள் பதவி விலகிய பிறகு ஆறு மாதங்களுக்கு பாதுகாப்பு பெறுவது வழக்கம். ஆனால், ஜோ பிடன் அதிபராக இருந்தபோது, கமலா ஹாரிஸிற்கான பாதுகாப்பு ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கூடுதல் பாதுகாப்பு செப்டம்பர் 1 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே பாதுகாப்பை திரும்ப பெறுவதாக அமெரிக்க ரகசிய சேவை அமைப்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து கமலா ஹாரிஸுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

2024 தேர்தலில் டிரம்ப்பிடம் தோல்வியடைந்த கமலா ஹாரிஸ், தனது "107 நாட்கள்" என்ற தலைப்பிலான நினைவுக் குறிப்பு புத்தக வெளியீட்டு சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வருகிறார். ரகசிய சேவையின் அர்ப்பணிப்புக்கு அவர் நன்றி தெரிவிப்பதாக ஹாரிஸின் ஆலோசகர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.
டிரம்ப் இதற்கு முன்னர் தன்னைக் கடுமையாக விமர்சித்தவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கியுள்ளார். முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், அதிபர் பைடனின் குழந்தைகளான ஹண்டர் மற்றும் ஆஷ்லே பைடன் ஆகியோரும் இதில் அடங்குவர். தற்போது இந்த வரிசையில் கமலா ஹாரிஸும் இணைந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications