ப்ளூ பிரிண்ட் ரெடி.. கோதாவில் குதித்த அமெரிக்கா! சீனாவை பழிவாங்க டிரம்ப் போட்ட பலே பிளான்!
வாஷிங்டன்: ஏஐ எனப்படும் செயற்கை தொழில்நுட்ப உலகில் இப்போதைக்கு டாப்பில் இருப்பது சீனாதான். இந்நிலையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு சவால்விட, அமெரிக்காவுக்கு என விரிவான செயற்கை நுண்ணறிவு செயல் திட்டத்தை அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
ஏஐ டெக்னாலஜியில் உலக அளவில் முன்னணி இடத்தை பெற வேண்டும், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த செயல் திட்டத்தை அமெரிக்கா உருவாக்கியிருக்கிறது.

எங்கு அமெரிக்கா கோட்டை விட்டது?
என்னதான் சாட் ஜிபிடி ஏஐ உலகில் கொடி கட்டி பறந்தாலும், அதற்கு போட்டியே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அந்த போட்டியை உருவாக்கியது 'டீப் சீக்' எனும் சீன ஏஐதான். இத்தனைக்கும் கூகுள் ஏஐ ஜெமினி கூட லேட்டாகத்தான் களத்திற்கு வந்தது. ஆனால் டீப் சீக் செய்த சேட்டைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. சாட் ஜிபிடிக்கு தண்ணி காட்டியது. ஏஐ தொழில்நுட்பத்திற்கு தேவையான, ஹார்டுவேர் சமாச்சாரங்கள் ஏதும் இல்லாமல் டீப் சீக் சக்கை போடு போட்டது. இதுதான் அமெரிக்கா கோட்டைவிட்ட இடம்.
எனவே இந்த பிரச்சனையிலிருந்து அமெரிக்க ஏஐ துறையை காப்பாற்ற டிரம்ப் நேரடியாக களத்தில் குதித்திருக்கிறார். இப்படி குதித்த அவர் கையில் எடுத்து வந்திருக்கும் புது சமாச்சாரம்தான் 'செயற்கை நுண்ணறிவு செயல்திட்டம்'. ஏஐ துறையில் ஆதிக்கம் செலுத்துவது மற்றும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுவத்துவதுதான் இதன் நோக்கம்.
ஏஐ கண்டுபிடிப்புகளை அதிகப்படுத்துவது, அதை வணிகத்தில் பயன்படுத்துவது, இதற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்குவது, டேட்டா சென்டர்கள் மற்றும் அதற்கான மின்சார தேவைக்கான கட்டுமானங்களுக்கான அனுமதியை உடனடியாக கொடுப்பது போன்றவற்றை இந்த திட்டம் முன்மொழிகிறது.
மட்டுமல்லாது வோக்-ஏஐ குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தது. முற்போக்கு கொள்கைகளை பேசும் ஏஐ-க்களைதான் வோக் ஏஐ என்று குறிப்பிடுகிறார்கள். இம்மாதிரியான ஏஐக்களை டிரம்ப் விரும்பவில்லை. எனவே, இதற்கான கட்டுப்பாடுகள், தடை குறித்தும் தனது திட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏஐ அதிகம் தேவை எனில் அதற்கான டேட்டா சென்டர்கள் வேண்டும். டேட்டா சென்டர்கள் அதிக அளவில் கரன்ட்டை பயன்படுத்தும். அதற்கு இடைநில்லா மின்சாரம் அவசியமாகும். இதற்காக நிலக்கரி, எரிவாயு மற்றும் அணு சக்தியை கொண்டு இயங்கும் மின் நிலையங்களை கட்டிக்கொள்ள டிரம்ப் அனுமதி அளித்துள்ளார்.
இது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அணு சக்தி மின்சாரம் பாதுகாப்பானதாக இருந்தாலும், அதை ஊருக்கு நடுவே அமைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மற்ற இரண்டு மின்சார உற்பத்தி முறைகளை ஒழிக்க மொத்த உலகமே முயன்று வருகிறது. ஆனால், டிரம்ப் அதை ஊக்குவிக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதேபோல வோக் ஏஐ என்று முத்திரை குத்தி, முற்போக்கு சிந்தனைகளை டிரம்ப் முடக்குகிறார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
இதையெல்லாம் தாண்டி அமெரிக்கா எப்படி தனது சொந்த ஏஐ வளர்ச்சியில் கவனம் செலுத்தப் போகிறது என்பது முக்கியம். டிரம்பின் திட்டத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி பற்றியும், சைபர் செக்யூரிட்டியை அதிகரிப்பது தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும் இதெல்லாம், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் எப்படி சாத்தியமாகும்? என்று கேள்வி எழுந்திருக்கிறது. டிரம்ப் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications