டிரம்ப் உடன் பிஸ்னஸ் செய்ய ரெடியான பாக்.. இந்தியா உறவை துண்டிக்க இதுதான் காரணம்! மாஜி பாதுகாப்பு ஆலோசகர் பகீர்
வாஷிங்டன்: டிரம்ப் குடும்பத்துடன் பாகிஸ்தான் பிஸ்னஸ் செய்ய முன்வந்ததாகவும் இதன் காரணமாகவே டிரம்ப் அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கியதாகவும் அமெரிக்காவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்தியா உடனான உறவைக் காலி செய்துள்ளது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய தீங்கை விளைவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா அமெரிக்கா இடையேயான உறவை டிரம்ப் நிர்வாகம் மிக மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டது. இந்தியா மீது டிரம்ப் அரசு போட்டுள்ள வரிகளால் இரு நாட்டு வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் சரக்கு சுமார் 40% வரை பாதிக்கப்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஜேக் சல்லிவன்
இதற்கிடையே அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் சில பகீர் கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது தனது குடும்பத்தின் பிஸ்னஸ்களுக்காகவே இந்தியா உடனான உறவுகளை டிரம்ப் காலி செய்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்கா இந்தியா உறவுகளை டிரம்ப் காலி செய்துள்ளது, அமெரிக்காவுக்கு மிகப் பெரிய தீங்கையே விளைவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அங்குள்ள பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், "கடந்த 20, 30 ஆண்டுகளாகக் கட்சி பாகுபாடுகளைத் தாண்டி உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் அமெரிக்கா நல்லுறவை வளர்த்துள்ளது. தொழில்நுட்பம், திறமை, பொருளாதாரம் எனப் பல விஷயங்களில் இந்தியாவுடன் நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.. மேலும் சீனாவிடமிருந்து வரும் அச்சுறுத்தலைச் சமாளிக்கவும் ஒன்றிணைய வேண்டும்.
குடும்பத்திற்காகப் போட்ட ஒப்பந்தம்
டிரம்ப் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படுவதற்கு முன்பு, இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் உறவுகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டன.. ஆனால், டிரம்ப் நிலைமையை மோசமாக்கிவிட்டார். டிரம்ப்பின் குடும்பத்துடன் வணிக ஒப்பந்தம் போட பாகிஸ்தான் ரெடியாக இருந்தது. இதன் காரணமாகவே டிரம்ப் இந்திய உறவுகளைப் புறக்கணித்தார்" என்றார்.
பின்னணி
ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கியதாக இந்தியாவை டிரம்ப் குறிவைக்கத் தொடங்கினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட இதுவே முக்கிய காரணமாக இருந்தது. டிரம்ப் நிர்வாகம் இதற்காக இந்தியா மீது 50% வரியை விதித்தது. அதன் பிறகே சமீப மாதங்களில் இந்தியா-அமெரிக்கா உறவுகள் மோசமடைந்தன. சீனாவும் ஐரோப்பிய நாடுகளும் கூட ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் எரிபொருளை இறக்குமதி செய்யும் போதிலும், அவர்கள் மீது அமெரிக்கா இதேபோன்ற விமர்சனங்களை முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வலுவான உறவு
ஜேக் சல்லிவன் மேலும் பேசுகையில், "அமெரிக்கா இந்தியா இடையேயான உறவு வலுவாக இருந்தது. ஆனால், அதற்கு எதிராக டிரம்ப் அரசு செயல்பட்டுள்ளது. இப்போது உலகின் எந்த நாடும் அமெரிக்காவை நம்ப முடியாத நிலைக்குப் போய்விட்டோம். நாளை இது நமக்கும் நடக்கலாம் என்றே பல நாடுகளும் நினைக்கத் தொடங்கிவிட்டன. இதனால் மற்ற நாடுகளும் அமெரிக்காவுடன் வலுவான உறவை ஏற்படுத்தத் தயங்குகின்றன.
நமது வார்த்தையே நமது பிணைப்பாக இருக்க வேண்டும். எங்கள் நண்பர்களால் எங்களை நம்ப முடிய வேண்டும். கடந்த காலங்களில் இதுவே நமது பலமாக இருந்துள்ளது. ஆனால், இந்தியாவுடன் இப்போது நடப்பது மிக பெரிய தாக்கங்களை எதிர்கொண்டு இருக்கிறது. இது இந்தியா உடனான உறவு மட்டுமின்றி பிற நாட்டு உறவுகளையும் கூட பாதிக்கிறது" என்றார்.
பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம்
இந்தியாவை அமெரிக்கா புறக்கணிக்கும் அதேநேரம் மறுபுறம் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. பல ஆண்டு புறக்கணிப்புக்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீரை டிரம்ப் நிர்வாகம் வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து வைத்தது. இப்படி அமெரிக்கா பாகிஸ்தான் உறவுகள் புதுப் பொலிவைக் கண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications