அப்படியே கொரோனா மாதிரி! உலகையே முடக்க போகும் அடுத்த பெருந்தொற்று.. சீக்கிரமே தாக்கலாம்! பகீர் தகவல்
வாஷிங்டன்: கொரோனா காரணமாக ஒட்டுமொத்த உலகமும் பல ஆண்டுகள் முடங்கி இருந்ததை நாம் மறந்துவிட முடியாது. இதற்கிடையே அதுபோன்ற ஒரு பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து கொண்ட ஒரு வகை வைரஸ் பாதிப்பு மனிதர்களிடையே பரவ ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த பெருந்தொற்றாக இது ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள்.
உலகின் அனைத்து நாடுகளையும் கொரோனா எப்படிப் புரட்டிப் போட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வரவே நமக்குப் பல காலம் தேவைப்பட்டது. வேக்சின் முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரை பல எடுக்கப்பட்டன. அதன் பிறகே வைரஸ் பாதிப்பு கணிசமாகக் குறைந்தது.

கொரோனா மாதிரி
பெருந்தொற்றில் இருந்து நாம் மீண்டு சில காலம் மட்டுமே ஆகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் ஒருவருக்கு அச்சுறுத்தும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாம். அந்த நபருக்கு H5N5 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த வகைப் பறவைக் காய்ச்சல் மனிதர்களிடம் இதற்கு முன் கண்டறியப்பட்டதே இல்லை.. இதனால் இந்தச் சம்பவம் நாடு உலகெங்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள கிரேஸ் ஹார்பர் கவுண்டியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சில உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டவர் என்றும், இம்மாதத் தொடக்கத்திலிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவருக்கு இந்த வைரஸ் எப்படிப் பரவியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் மூலமாகப் பரவியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட விலங்குகளின் எச்சில், சளி, கழிவுகள் மூலம் பரவும்.. ஆடு, மாடுகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால்.. அதன் பால் மூலம் இந்தக் காய்ச்சல் பரவலாம். பொதுவாக, இலையுதிர் மற்றும் குளிர்காலங்களில் இடம்பெயரும் பறவைகள் வீட்டுப் பறவைகளுடன் தொடர்பு கொள்ளும்போது இது பரவும் வாய்ப்புகள் அதிகம்.
பறவைக் காய்ச்சல் நீண்ட காலமாகவே உலகெங்கிலும் உள்ள பறவைகளிடையே பரவி வருகிறது. இருப்பினும், அது சமீபத்தில் தான் மனிதர்களிடையேயும் பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து பறவைக் காய்ச்சல் ஏற்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மனிதர்களுக்குப் பரவுமா?
ஒரே நல்ல விஷயமாக இந்த வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு நபருக்குப் பரவுவதற்கான ஆதாரம் இதுவரை கண்டறியப்படவில்லை. கொரோனா இதுபோல மனிதர்களிடம் இருந்து எளிதாக மனிதர்களுக்குப் பரவியதே வைரஸ் பாதிப்பை மோசமாக்கியது. இருப்பினும், இந்த வைரஸ் எதிர்காலத்தில் உருமாற்றம் அடையும்போது அது பெருந்தொற்றாக மாறும் ஆபத்து இருப்பதாக டாக்டர் ரிச்சர்ட் வெப்பி எச்சரிக்கிறார்.
பெருந்தொற்றாக வெடிக்கும்
இது தொடர்பாக டாக்டர் ரிச்சர்ட் வெப்பி மேலும் கூறுகையில், "இந்த வைரஸ் உருமாற்றம் அடையும்போது அது பெருந்தொற்றாக மாறும் சாத்தியம் இருக்கிறது. இருப்பினும், நிச்சயம் அதுபோல நடக்கும் எனச் சொல்ல முடியாது. அதற்குப் பல்வேறு விஷயங்கள் சரியாக நடக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு குறைவு என்றாலும் அது நடந்தால் பாதிப்பு மிக மோசமாக இருக்கும்" என்றார்.
இப்போது வரை அமெரிக்காவில் 70 பேருக்குப் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே உடல்நலக் கோளாறுகள் கொண்ட ஒரு வயதான நோயாளி கடந்த ஜனவரியில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டபோது உயிரிழந்தார். பெரும்பாலான நோயாளிகளுக்குக் கண்கள் சிவத்தல் அல்லது காய்ச்சல் போன்ற லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தன. ஒரு சிலருக்குக் கடுமையான நோய்த் தொற்று ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விலங்குகளுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள்.
அறிவுறுத்தல்
இதனால் விலங்குகளைத் தொடர்ந்து கையாள்பவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், விலங்குக் கழிவுகளைக் கையாளும்போது எச்சரிக்கையாக இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. விலங்குகள் அல்லது பறவைகள் வாழும் இடங்கள் அல்லது அதன் கழிவுகளைச் சுத்தம் செய்யும்போது கையுறைகளை அணியவும், ஹேண்ட் வாஷ் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த வனவிலங்குகளை நெருங்குவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications