மிகமோசமான உச்சம் - யு.எஸ்-ல் ஒரே நாளில் 55,251 பேருக்கு கொரோனா! தென்னாப்பிரிக்காவில் விஸ்வரூபம்
வாஷிங்டன்: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மிக மிக மோசமான உச்சத்தை எட்டி வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 55,251 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,19,41,592 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 5,45,651 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 68,44,973 ஆகவும் உள்ளது. உலக நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில்தான் கொரோனா பாதிப்பு மிகமிக மோசமாக உள்ளது.

அமெரிக்காவில் உச்சம்
அமெரிக்காவில் ஒரே நாளில் 55,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,96,893 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 133,971 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

பிரேசிலில் அதிக பாதிப்பு
பிரேசிலில் ஒரேநாளில் 48,584 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அங்கு கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கையானது 16,74,655 ஆக உயர்ந்திருக்கிறது. பிரேசிலில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 66,868 ஆக அதிகரித்துவிட்டது. அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் 3-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

இந்தியாவுக்கு 3-வது இடம்
இந்தியாவில் ஒரே நாளில் 23,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,43,481 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 479. இந்தியாவில் கொரோனா மரணங்கள் மொத்த எண்ணிக்கை 20,653 ஆகும்.

தென்னாப்பிரிக்காவில் விஸ்வரூபம்
இதுவரை இல்லாத வகையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஓரேநாளில் 10,134 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,15,855 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,502 ஆகவும் இருக்கிறது. இதனையடுத்து ரஷ்யாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,368 ஆக இருந்தது.












Click it and Unblock the Notifications