ஒரு விமானமே ரூ.1,000 கோடி.. இந்தியா வரும் அமெரிக்க அரக்கன்.. F35 ரக போர் விமானத்தின் ஸ்பெஷல் என்ன?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை, பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இந்த சந்திப்பின்போது நம் நாட்டுக்கு அமெரிக்கா அதிநவீன எஃப் 35 ரக போர் விமானங்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த விமானம் நம் நாட்டுக்கு ஏன் முக்கியம்? இந்த விமானத்தில் அப்படி என்ன சிறப்புகள் உள்ளன? விலை என்ன?என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
2வது முறையாக அமெரிக்க அதிபராகி உள்ள டொனால்ட் டிரம்பை, பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பை ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் மட்டுமின்றி நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் உற்று கவனித்தன.

சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகள் எல்லையில் நம்மை சீண்டி பார்க்கின்றன. இதனால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு அடுத்தக்கட்டத்துக்கு செல்கிறதா? அப்படி செல்கிறது என்றால் இருநாடுகளும் எந்த மாதிரியான ஒப்பந்தத்தை எடுக்கின்றன? அதனால் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு வருகிறதா? என்று அந்த 3 நாடுகளும் சிந்திக்க தொடங்கின.
அதேபோல் மறுபுறம் நம் நட்டு நாடான ரஷ்யாவும், மோடி - டிரம்ப் சந்திப்பின் ஒவ்வொரு நிமிடத்தையும் உன்னிப்பாக கவனித்தது. இதற்கு முக்கிய காரணம் நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே காலம் காலமாக நல்லுறவு என்பது உள்ளது. இப்படியான சூழலில் தான் கடந்த மாதம் மோடியிடம் பேசிய டிரம்ப், அமெரிக்காவில் சந்திப்பு நடக்கும்போது அதிகமான ராணுவ தளவாடங்களை இந்தியா தங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்று கூறியிருந்தார். நம் நாடு தற்போது ரஷ்யாவிடம் இருந்து தான் ராணுவ தளவாடங்களை வாங்கி வரும் நிலையில் அமெரிக்கா அதற்கு செக் வைக்கும் வகையில் மோடியிடம் கட்டளையிட்டது.
அதன்படியே நேற்று நினைத்ததை சாதித்தார் டொனால்ட் டிரம்ப். வெள்ளை மாளிகையில் மோடியுடனான சந்திப்பின்போது டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு அதிநவீன போர் விமானங்களை வழங்குவதாக அறிவித்தார். அந்த போர் விமானத்தின் பெயர் எஃப் 35 ஸ்டெல்த் பைட்டர் ஜெட். இந்தியா, இந்த போர் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் போர் விமானங்களை தருவதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதன் மூலம் அதனை வாங்க வைக்க இந்தியாவுக்கு டொனால்ட் டிரம்ப் நிர்பந்தம் கொடுத்துள்ளது.
இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து போர் விமானங்களை வாங்கும் பட்சத்தில் ரஷ்யாவிடம் இருந்து நாம் வாங்கும் ராணுவ தளவாடங்களின் மதிப்பு என்பது குறையும். இது இந்தியா - ரஷ்யா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தலாம். இதனால் தான் மோடி - டிரம்ப் சந்திப்பை ரஷ்யாவும் கூர்ந்து கவனித்தது. இந்நிலையில் தான் அமெரிக்கா நமக்கு தருவதாக கூறியுள்ள எப்ஃ35 ரக போர் விமானங்களின் சிறப்புகள் பற்றிய பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
5ம் தலைமுறை விமானம்
அதாவது அமெரிக்காவின் எப்ஃப் 35 ரக போர் விமானங்கள் என்பது அதிநவீன 5ம் தலைமுறை விமானமாகும். இதில் மொத்தம் 3 வகைகள் உள்ளன. ஒன்று எஃப் 35 ஏ, 2வது எஃப் 35பி, 3வது எஃப் 35 சி. இதில் எஃப் 35 ஏ என்பது Conventional Takeoff and landing அம்சத்தை கொண்டது. இது பிற விமானங்களை போல் வழக்கமான டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் முறையில் இயங்கும். 2வது ரகமான எஃப் 35 பி என்பது Short takeoff/vertical landing அம்சத்தை கொண்டது. இந்த விமானம் குறுகிய ஓடிபாதையிலேயே செங்குத்தாக மேலெழும்பி பறக்கும் தன்மை கொண்டது. 3வது ரகமான எஃப் 35 சி என்பது Carrier Aircraft. அதாவது விமானம் தாங்கிய போர் கப்பலில் இருந்து கூட இந்த விமானத்தை இயக்க முடியும்.
விலை எவ்வளவு?
இந்த விமானங்களை உளவு பார்க்கவும், கண்காணிப்பு மற்றும் போர் களத்தில் தாக்குதல் நடத்தவும் பயன்படுத்த முடியும். இந்த விமானம் ஒவ்வொன்றும் சுமார் 80 மில்லியன் அமெரிக்க டாலர் முதல் 115 மில்லியன் அமெரிக்க டாலர் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் பார்த்தால் ஒரு எஃப் 35 ரக விமானத்தின் விலை என்பது ரூ.694 கோடி முதல் ரூ.1,303 கோடி வரை இருக்கும். அதாவது 3 வகையான எப்ஃ35 ரக விமானங்கள் உள்ள நிலையில் ஒவ்வொன்றின் விலையும் மாறுபடும். எஃப் 35 ஏ ரக போர் விமானத்தனி் விலை என்பது ரூ.694 கோடியாகும். அதன்பிறகு எஃப் 35 பி ரக விமானத்தின் விலை என்பது ரூ. 998 கோடியாகும். இது ஏறக்குறைய ரூ.1000 கோடியாகும். மேலும் எஃப் 35 சி ரக விமானத்தின் விலை என்பது ரூ.955 கோடியாக உள்ளது.
ஒரு மணிநேர செலவு என்ன?
டிரம்பை பொறுத்தவரை நம் நாட்டுக்கு 3 வகையான எஃப் 35 ரக விமானங்களையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியா இன்னும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. மேலும் இந்த விமானம் ஒரு மணிநேரம் வானில் பறக்க வேண்டும் என்றால் 33 ஆயிரம் அமெரிக்க டாலர் முதல் 42 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். அதாவது இந்திய மதிப்பில் எப்ஃ35 ரக போர் விமானங்கள் ஒரு மணிநேரம் பறக்க ரூ.28 லட்சம் முதல் 36.41 லட்சம் வரை செலவு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
ரேடாரில் சிக்காது
இந்த எஃப் 35 ரக 3 விமானங்களையும் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தான் தயாரித்து வழங்கி வருகிறது.
விமானங்கள் Stealth வகையை சேர்ந்தவையாகும். அதாவது எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் இந்த விமானத்தால் தாக்குதல் செய்ய முடியும். இந்த போர் விமானம் அனைத்து காலநிலைகளிலும் பிரச்சனையின்றி இயங்கும் தன்மை கொண்டது. இதன்மூலம் வெயில், புயல், மழை என்று எந்த காலநிலை சூழலிலும் வானில் பறந்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கும்.
ஏவுகணை தாக்குதல்
மேலும் இந்த போர் விமானத்தால் 8,160 கிலோ வெடிபொருட்களை சுமந்து சென்று எதிரிகளின் முகாம்களை சுக்குநூறாக்க முடியும். ஒரே நேரத்தில் 4 ஏவுகணைகளை தூக்கி சென்று வீசும். குறிப்பாக 2 guided ஏவுகணைகளை பயன்படுத்தலாம். அதாவது, ரோடார் வசதியுடன் துல்லியமாக இலக்கை தகர்க்கும் சக்தி கொண்ட 2 ஏவுகணைகளையும் இந்த போர் விமானத்தால் வீச முடியும். இதுதவிர 25 mm rotary Cannon 4 barrels பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு ராட்சத இயந்திர துப்பாக்கி. இதை வைத்து ஒரே நிமிடத்தில் 180 ரவுண்ட் வரை சுட முடியும்.
நிற்காமல் 2,200 கிமீ பறக்கும்
இந்த எஃப் 35 ரக போர் விமானம் 54.4 அடி நீளம் கொண்டது. 14.4 அடி உயரம் கொண்டது. இறக்கைகள் 35 அடி நீளம் கொண்டது.
இயல்பாக இதன் எடை 13.3 டன். அதுவே எரிபொருள், ஆயுதங்கள், இதர பொருட்களை ஏற்றிய பிறகு 70 டன் வரை இருக்கும்.
இந்த போர் விமானம் அதிவேகத்தில் வேகத்தில் சீறிப்பாயும். மணிக்கு 1976 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் வல்லமை கொண்டது.
இடை நிற்காமல் 2,200 கிலோ மீட்டர் தூரம் பறக்க முடியும். வானத்தில் அதிகபட்சமாக 50 ஆயிரம் அடி உயரம் வரை இந்த விமானத்தால் பறக்க முடியும். வானத்திலேயே எரிபொருள் நிரப்பும் வசதியும் உண்டு.ஒரே நேரத்தில் 8,278 கிலோ எரிபொருள் நிரப்பலாம். இவ்வளவு சக்தி வாய்ந்த ரக போர் விமானத்தை தான் இந்தியாவுக்கு அமெரிக்கா தருவதாக உறுதி அளித்துள்ளது.
இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?
நம் நாட்டை பொறுத்தவரை ரபேல் போர் விமானங்கள் தான் அதிநவீன போர் விமானமாக உள்ளது. இந்த ரபேல் போர் விமானம் 4.5ம் தலைமுறை விமானமாகும். அண்டை நாடான சீனா 6ம் தலைமுறை விமானத்தை கண்டுபிடித்து சோதனை ஓட்டம் நடத்திவிட்டது. சீனாவுக்கும் நமக்கும் இடையே பிரச்சனை உள்ள நிலையில் அதிநவீன போர் விமானங்கள் நமக்கு தேவை. இதனால் தான் அமெரிக்காவில் எப்ஃ35 ரக போர் விமானங்கள் நம் நாட்டுக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications