இன்னும் சில மணி நேரம் தான்.. மொத்தமாக முடங்கும் அமெரிக்கா? டிரம்ப் பிடிவாதத்தால் ஏற்படும் பேராபத்து
வாஷிங்டன்: அமெரிக்காவில் எப்போதும் செலவினங்கள் தொடர்பான மசோதாக்களில் இரு தரப்பு ஒப்புதலும் தேவை. சமீப காலமாகவே இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுவதில் சிக்கல் நிலவி வருகிறது. இப்போதும் கூட மீண்டும் அதுபோன்ற ஒரு சூழல் தான் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றிரவே அமெரிக்கா ஒட்டுமொத்தமாக ஷட் டவுன் ஆகும் சூழல் ஏற்படலாம்.
அமெரிக்காவில் எப்போதும் செலவினங்கள் தொடர்பான முடிவுகளை அந்நாட்டு நாடாளுமன்றம் தான் எடுக்கும். இதற்கு இரு தரப்பு ஒத்துழைப்பும் அவசியமாக இருக்கும். பெரும்பாலான சூழல்களில் இரு தரப்பும் கடைசி வரை பேசி, ஒரு மாதிரி ஒரு தற்காலிக டீலுக்கு வந்துவிடுவார்கள். ஆனால், சமீப காலங்களாக அதுபோன்ற டீல்களை ஏற்படுத்த முடிவதில் சிரமம் ஏற்படுகிறது.

நிதி கிடைக்காது
இதுபோல செலவினங்கள் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால் அரசுக்குத் தேவையான நிதி கிடைக்காது. இதனால் அமெரிக்கா முடங்கும் சூழலுக்கு (US shutdown) தள்ளப்படும். இப்போதும் கூட மீண்டும் அதுபோன்ற ஒரு சூழல் தான் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை நிறைவேற்றப்பட்ட செலவினங்கள் குறித்த மசோதா இன்று செவ்வாய்க்கிழமை இரவுடன் முடிகிறது. இதனால் இந்த விவகாரத்தில் ஒரு டீல் ஏற்பட வேண்டியது அவசியமாகும்.
இது தொடர்பாக நேற்று திங்கள்கிழமை அமெரிக்க அதிபரைச் சந்தித்து அங்குள்ள எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் ஆலோசனை நடத்தினர். இரு தரப்பும் நீண்ட நேரம் விவாதித்தன. இருப்பினும், அதில் சுமூக உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இன்றிரவுக்குள் டீல் கையெழுத்தாகவில்லை என்றால் நிச்சயம் அமெரிக்கா முடங்கும்.
குற்றச்சாட்டு
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி வான்ஸ், "எதிர்க்கட்சியினர் செய்வது சரி இல்லை. அமெரிக்க மக்களின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து, நாங்கள் சொல்வதுபோல் நடந்து கொள்ள வேண்டும் என ஜனநாயகக் கட்சியினர் மிரட்டுவது போலப் பேசுகிறார்கள். அது சரியான போக்கு இல்லை. அவர்களின் இந்தப் பொறுப்பற்ற நடவடிக்கையால் நாம் ஷட் டவுன் நோக்கிச் செல்கிறோம் என்றே நினைக்கிறேன்" என்றார்.
செலவினங்கள் தொடர்பான மசோதாக்களில் தங்களுக்கும் ஆளும் டிரம்ப் தரப்புக்கும் இடையே மிகப் பெரிய கருத்து வேறுபாடுகள் இருப்பதாக அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர் தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலை குறித்து எந்தவொரு தரப்பும் நம்பிக்கை தரும் வார்த்தைகளைச் சொல்லவில்லை.
டிரம்ப் தரப்பு சொல்வது என்ன
தற்போது டிரம்ப் அரசு ஓவராக செலவு செய்து வரும் நிலையில், இதே செலவின நிலைகளைக் குறுகிய காலத்திற்கு நீட்டிக்க டிரம்ப் தரப்பு விரும்புகிறார்கள். அதாவது தற்போதுள்ள மசோதாவின்படி, செலவினங்கள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் டிரம்ப்பிற்குப் போகிறது. இதனால் இதே நடைமுறை நீடிக்க வேண்டும் என டிரம்ப் தரப்பு விரும்புகிறது. ஆனால், இந்த நடைமுறைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் விரும்புகிறார்கள்.
மறுக்கும் எதிர்க்கட்சிகள்
மறுபுறம் குறைந்த வருமானம் கொண்டோருக்கான ஹெல்த் இன்சூரன்ஸ்களுக்கு அமெரிக்க அரசு காப்பீட்டு மானியங்களை வழங்கும் நிலையில், அவை இந்த ஆண்டின் இறுதியில் காலாவதியாகின்றன. அதை நீடிக்க வேண்டும் என்பதே ஜனநாயகக் கட்சியின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், டிரம்ப் தரப்பு அதை ஏற்க மறுக்கிறதாம். இந்த இரண்டுமே பிரச்சினைக்குப் பிரதானக் காரணமாக இருக்கிறது.
அடுத்து என்னவாகும்?
இன்றிரவுக்குள் இரு தரப்பிற்கும் இடையே இணக்கம் ஏற்படவில்லை என்றால் அமெரிக்கா ஷட் டவுன் ஆகும். இதுபோல அமெரிக்க அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். அவர்கள் வேலை செய்தாலும் ஊதியம் கிடைக்காது. அத்தியாவசியத் துறைகளாகக் கருதப்படும் பாதுகாப்புப் படை உள்ளிட்டவற்றில் வேலை செய்யும் 14 லட்சம் பேர் சம்பளமில்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications