வரியை தீட்டும் டிரம்ப்.. திடீரென இந்திய வருகையை ஒத்திவைத்த அமெரிக்க குழு! பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இது இருநாடுகள் இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 29ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் விவசாயம் மற்றும் பால் பொருட்கள் தொடர்பான விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கு வர இருந்த அமெரிக்க டீம் திடீரென்று அந்த பயணத்தை ரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். முதற்கட்டமாக கடந்த 7 ம் தேதி 25 சதவீத வரி அமலுக்கு வந்தது. அடுத்தக்கட்டமாக வரும் 27 ம் தேதி 25 சதவீத வரி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் டொனால்ட் டிரம்ப் இந்த வரிகளை விதித்துள்ளார். இதனால் இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவின் வரி விதிப்பால் அந்த நாட்டுக்கு நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு குறையும் அபாயம் உள்ளது.
அமெரிக்கா அழுத்தம்
இது நம் நாட்டின் நிறுவனங்களுக்கு பொருளாதார இழப்பு, ஊழியர்களின் வேலையிழப்புக்கான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்கா தனது விவசாயம் மற்றும் பால்பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி கோரி வருகிறது. இதுதொடர்பாக நம் நாட்டுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதற்கு அனுமதி கொடுத்தால் நம் நாட்டின் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதனால் மத்திய அரசு அனுமதி கொடுக்க மறுத்துள்ளது. இதுவும் நம் நாட்டுக்கு டிரம்ப் வரி போட்டதற்கு முக்கிய காரணமாகும்.
6வது கட்ட பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
இதற்கிடையே இருநாடுகள் இடையேயான வரி பிரச்சனைக்கு நடுவே அமெரிக்க பிரதிநிதிகள் இந்தியா வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 29ம் தேதி வரை அமெரிக்க பிரதிநிதிகள் நம் நாட்டுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது.
ஏற்கனவே இருதரப்பு சார்பில் 5 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இருந்தது. தற்போது 6வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இருநாடுகளும் தயாராகி வந்தன. ஆனால் கடைசி நேரத்தில் அந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பயணம் திடீர் ரத்து
இந்தியா வர இருந்த அமெரிக்க பிரதிநிதிகள் தங்களின் சுற்றுப்பயணத்தை திடீரென்று ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா - இந்தியா இடையே நடக்கம் இருந்த 6ம் கட்ட பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடக்காது. தாமதமாக நடக்கும் என்று கூறப்படுகிறது.
ஒருபக்கம் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு வரியை தீட்டி வருகிறார். மறுபுறம் அமெரிக்க பிரதிநிதிகள் டீம் திடீரென்று நம் நாட்டுக்கான பயணத்தை ரத்து செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் தகவல் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
மோடி சொன்ன வார்த்தை
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் அதனை சமாளிப்பது பற்றி தனது சுதந்திர தின உரையில் மறைமுகமாக பேசியிருந்தார். அந்த உரையில் 'சுதேசி' (இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை) பொருட்களுக்கு மக்கள் மாற வேண்டும். இந்தியாவின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் கொள்கைளை ஏற்கமாட்டோம்.
விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மீனவர்களின் நலன்களை பாதிக்கும் வகையில் எந்த விஷயத்தையும் நாங்கள் ஏற்கமாட்டோம்'' என்று பேசியிருந்தார். இப்படியான சூழலில் தான் விவசாயம் - பால் பொருட்கள் சார்ந்த வர்த்தகம் பற்றி பேச வர இருந்த அமெரிக்க குழு இந்தியாவின் சுற்றுப்பயணத்தை திடீரென்று ரத்து செய்துள்ளது.












Click it and Unblock the Notifications