3ம் உலகப்போருக்கு அச்சாரம் போட்ட அமெரிக்கா! கரீபியன் கடலில் பதற்றம்.. உலக நாடுகள் உஷார்!
வாஷிங்டன்: வெனிசுலா மீது தொடர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்த அமெரிக்கா, தற்போது தாக்குதலை தொடங்க திட்டமிட்டிருக்கிறது. இதற்காக தன் வசம் இருக்கும் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த போர் கப்பலை வெனிசுலா நோக்கி அனுப்பியுள்ளது. இந்த கப்பல் கரீபியன் கடலில் நுழைந்திருப்பதால் உலக நாடுகள் அச்சம் அடைந்திருக்கின்றன.
"எங்கள் நாட்டிற்கு வரும் போதை பொருட்கள் அனைத்திற்கும் காரணம் வெனிசுலாதான். அங்கிருந்துதான் போதை பொருட்கள் வருகின்றன. அமெரிக்காவில் குற்ற சம்பவங்களை நடத்துபவர்களும் வெனிசுலா நாட்டை சேர்ந்தவர்கள்தான். எனவே இதை தடுக்க நாங்கள் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறோம்" என்று டிரம்ப் கூறியிருந்தார்.

வெனிசுலா நாட்டின் கடல் எல்லைக்கு அருகே அமெரிக்க போர் கப்பல்களை நிலை நிறுத்துவது, அந்நாட்டு மீனவர்களின் படகுகள் மீது தாக்குதல் நடத்துவது ஆகியவைதான் டிரம்ப் சொன்ன 'உரிய நடவடிக்கை' என்கிற வார்த்தைக்கான அர்த்தம். அந்த வகையில் தற்போது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த போர் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் கப்பலை, கரீபியன் கடல் பகுதிக்கு டிரம்ப் அனுப்பி வைத்திருக்கிறார். இதுவரை அமெரிக்க கடற்படையினர் 19 படகுகளை தாக்கியிருக்கின்றனர். இந்த தாக்குதலில் 76 பேர் வரை கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்று அமெரிக்கா சொல்கிறது. ஆனால், அப்படி கிடையாது. உயிரிழந்தவர்கள் அனைவரும் மீனவர்கள். அவர்களிடம் எந்த ஆயுதங்களும் கிடையாது. டிரம்ப் சொல்வதை போல, போதைப்பொருள் கடத்தலில் சிலர் ஈடுபட்டிருந்தார்கள் என்று சொன்னாலும் கூட அவர்களின் படகை வழிமறிக்கதான் போர் கப்பல்கள் பயன்படுத்தப்பட வேண்டும். தவிர, யாரையும் கொல்ல போர் கப்பல்கள் பயன்படுத்தப்பட கூடாது என சர்வதேச விதி இருக்கிறது. இந்த விதியை அமெரிக்கா மீறியிருக்கிறது என்று வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கூறியிருக்கிறார்.
வெனிசுலா அதிபர் மட்டும் கிடையாது, கொலம்பியா அதிபர் கூட அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். லத்தீன் அமெரிக்க மக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இது டிரம்பை உசுப்பி இருக்கிறது. ஏற்கெனவே வெனிசுலாவுக்கு எதிராக டிரம்ப் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். குறிப்பாக வெனிசுலாவுடன் வர்த்தக உறவை மேற்கொள்ளும் நாடுகள் மீது 25% பொருளாதார தடை விதிக்கப்படும் என்று கூறியிருந்தார். இப்படி இருக்கையில் வெனிசுலாவை தாக்கும் நோக்கில் போர் கப்பலை அனுப்பியிருப்பது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கப்பலில் 75 விமானங்கள் வரை எடுத்து செல்ல முடியும். வழக்கமாக விமானம் தாங்கி போர் கப்பலில், அதிக எடை கொண்ட விமானங்களை கொண்டு செல்ல முடியாது. ஆனால், யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் கப்பலுக்கு இந்த விதியெல்லாம் பொருந்தாது.
அணு குண்டை வீசும் திறன் கொண்ட போர் விமானங்களை கூட சுமந்து செல்லும் வகையில் நவீன அம்சங்களுடன் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் இது போன்ற கப்பல் இரண்டுதான் இருக்கின்றன. ஒன்று அமெரிக்காவிடம், இன்னொன்று சீனாவிடம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications