இது முடியாது போலயே.. ஈரான் மீது குண்டு போட்ட இஸ்ரேல்.. திடீரென உள்ளே வந்த அமெரிக்கா.. பகீர் வார்னிங்
வாஷிங்டன்: ஈரான் மீது இஸ்ரேல் நேற்று யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென தாக்குதல் நடத்தியது. ஈரான் ராணுவ தளங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி தருவோம் என ஈரான் கூறியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் திடீரென உள்ளே வந்த அமெரிக்கா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே தொடங்கிய மோதல் ஓராண்டில் பிராந்திய போராக வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து இஸ்ரேல் மீது கடந்த அக். 1ம் தேதி ஈரான் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலுக்குப் பல வாரங்களுக்குப் பிறகு இஸ்ரேல் நேற்று பதிலடி கொடுத்தது.
எப்படி நடந்தது: இந்தத் தாக்குதலுக்காக F-35 ஸ்டெல்த் போர் விமானங்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட இஸ்ரேல் போர் விமானங்கள் விடியற்காலையிலேயே புறப்பட்டன. அவர்கள் 1,000 கிலோமீட்டர்கள் பறந்து, ஈரானின் ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்கி முதலில் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து ராணுவ இலக்குகள் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவ இலக்குகள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவர் உயிரிழப்பு: முதலில் ஈரான் தனது தலைநகர் தெஹ்ரான் மீது எந்தவொரு தாக்குதலும் நடக்கவில்லை என்றும் தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு தங்களைப் பாதுகாத்ததாகவும் தெரிவித்தது. இருப்பினும், அதன் பிறகு இராணுவ தளங்கள் தாக்கப்பட்டதை ஈரான் ஒப்புக்கொண்டது. மேலும், இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி தரத் தயாராக இருப்பதாக ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இஸ்ரேல் இந்த நடவடிக்கைக்கு நிச்சயம் எதிர்வினையை எதிர்கொண்டே தீர வேண்டும்" என்றார். மறுபுறம், தங்கள் தாக்குதலை முடித்துக் கொண்டதாகச் சொன்ன இஸ்ரேல், ஈரான் எதாவது தாக்குதலை நடத்தினால் அதற்கு மிகப் பெரிய விலையைத் தர வேண்டும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
உள்ளே வந்த அமெரிக்கா: இப்படி இரு நாடுகளும் எச்சரித்து வரும் சூழலில், நிலைமை மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுகிறதது.. இதற்கிடையில் இந்த விவகாரத்தில் அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் தலைவர் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஜே ஆஸ்டின் எச்சரித்தார்.
மேலும் அவர், "ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது. எனவே, எனவே இதற்குப் பதிலடி தருகிறேன் என்று ஈரான் இறங்கக்கூடாது... ஈரான் தவறு செய்யக்கூடாது. இரு தரப்பும் தாக்குதலும் முடிந்துவிட்டது. இந்த நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதில் தரக்கூடாது" என்றார்.
ஹமாஸ், ஈராக், பாகிஸ்தான், சிரியா, சவுதி ஆகிய நாடுகள் இஸ்ரேல் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. துருக்கி ஒருபடி மேலே சென்று இந்த பயங்கரவாத தாக்குதல் என்று கூட குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா மறுபுறம் பேரழிவு தாக்குதலை நடத்தாமல் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications