"20 ஆயிரம் கோடி.." ஆளாக்கி விட்ட அண்ணனை கழற்றிவிட்ட இந்தியர்! குட்டு வைத்த கோர்ட்.. வியந்த அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த பிரபல வைர வியாபாரி மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களான ஐந்து சகோதரர்கள் இடையே கடந்த 21 ஆண்டுகளாக நடந்த சட்ட போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் சமீப காலங்களில் வழங்கப்பட்ட மிக முக்கியமான ஒரு செட்டில்மென்ட் தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது. தீவிர மற்றும் நீண்ட விசாரணைக்குப் பிறகு, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பிரபல தொழிலதிபரான ஹரேஷ் ஜோகானி தனது சகோதரர்களான ஷஷிகாந்த், ராஜேஷ், சேத்தன் மற்றும் ஷைலேஷ் ஜோகானி ஆகியோருக்கு $2.5 பில்லியன் (₹ 20,000 கோடிக்கு அதிகம்) நஷ்டஈடாக வழங்க வேண்டும்.
இது மட்டுமின்றி தெற்கு கலிபோர்னியா பகுதியில் பல பில்லியன் டாலர் மதிப்பில் அவர்களுக்கு சுமார் 17,000 வீடுகள் இருக்கும் நிலையில், அதையும் பிரித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டில் இந்த வழக்கு முதலில் தொடரப்பட்டது. இதுவரை 18 முறையீடுகள், பல வழக்கறிஞர்களை இந்த வழக்கு சந்தித்துள்ளது. இறுதியாக இப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் உயர் நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை எப்போதும் பல ஆயிரம் கோடி நஷ்டஈடு என்பதெல்லாம் பெரும் காப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக மட்டுமே விதிக்கப்படும். ஆனால், இந்த முறை தான் முதல்முறையாகச் சகோதரர்களுக்கு இடையேயான வழக்கில் இவ்வளவு பெரிய நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் சகோதரர்களுக்கான நஷ்டஈடு என்பது ரியல் சந்தை ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து மாறவும் வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்காவில் வட்டி உயர்வு காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் சந்தை டல்லடித்து வருவது குறிப்பிடத்தக்கது
இந்தியாவின் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜோகனி குடும்பம், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்காவில் வைர வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இப்போது வழக்கில் சிக்கிய ஹரேஷ் ஜோகானியின் சகோதரரான ஷஷிகாந்த் ஜோகனி தனது 22 வயதில் 1969இல் கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தார். அங்கே அவர் வைர வியாபாரம் செய்யத் தொடங்கிய நிலையில், அவரது பிஸ்னஸ் நன்கு பிக்அப் ஆனது. அப்படியே ரியல் எஸ்டேட் துறையிலும் நுழைந்தார்.
இருப்பினும், 1990களின் முற்பகுதியில் ஏற்பட்ட மந்தநிலையில் அவர் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டார். இத்துடன் நிலநடுக்கமும் அவருக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஷாஷி ஜோகானி தனது சகோதரர்களை பாட்ர்னர்களாக கொண்டு வந்தார். அவரது பிஸ்னஸில் ஹரேஷ், ராஜேஷ், சேத்தன் மற்றும் ஷைலேஷ் ஜோகானி ஆகியோர் முதலீடு செய்தனர். அதன் பிறகு அவர்களின் பிஸ்னஸ் மெல்ல மீண்டும் டாப் நிலைக்கு வந்தது.
அப்பகுதியில் சுமார் 17,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கிக்குவித்தனர். அப்போது சகோதரர் தொழிலில் முதலீடு செய்ய வந்த ஹரேஷ் தந்திரமாகச் செயல்பட்டு தன்னை தானே தலைவராக ஆக்கிக் கொண்டார். தன்னை இந்த பிஸ்னஸுக்கு அழைத்து வந்த ஷாஷி உட்பட தனது சகோதரர்கள் அனைவரையும் கம்பெனியை நடத்தும் குழுவில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கினார். மேலும், அவர்களுக்குப் பணம் கொடுக்க முடியாது என்றும் மறுத்துள்ளார்.
இதையடுத்தே அவர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.. எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் இல்லாமல், சகோதரர்களிடையே இருந்த ஒப்பந்தத்தை நிரூபிக்க முடியாது என்று ஹரேஷ் ஜோகானி வாதிட்டார். ஆனால் சகோதரர்கள் என்பதால் அக்ரிமெண்ட் போடாமல் வாய்மொழியாக அவர்கள் ஒப்பந்தம் போட்டதையும் அதை ஹரேஷ் மீறியதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதையடுத்து ஒப்பந்தத்தை மீறிய ஹரேஷ் தனது சகோதரர்கள் சேத்தன் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கு 165 மில்லியன் டாலர்கள், ஷஷிக்கு 1.8 பில்லியன் டாலர்கள், சேத்தனுக்கு 234 மில்லியன் டாலர்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. இது தவிர ரியஎல் எஸ்டேட்டில் ஷஷிக்கு 50%, ஹரேஷுக்கு 24%, ராஜேஷுக்கு 10%, ஷைலேஷுக்கு 9.5%, சேத்தனுக்கு 6.5% கிடைக்கும் எனப் பிரித்துக் கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் இது மிக முக்கிய தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications