இந்தியாவுக்கு மிக அருகே "மாற்றம்.." பேரழிவு ஏற்படும்! அலறும் ஆய்வாளர்கள்! கலக்கத்தில் பொதுமக்கள்
வாஷிங்டன்: வளர்ச்சி என்ற பெயரில் நாம் செய்யும் பல காரியங்கள் உலகை மேலும் மேலும் ஆபத்தான சூழலில் தள்ளி வரும் நிலையில், இது குறித்து ஆய்வாளர்கள் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
உலகமயமாக்கல், அதிகரிக்கும் தொழிற்துறை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் மிக வேகமாகச் சூடாகி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது.

இதனால் ஒட்டுமொத்த உலகமும் இப்போது மிகப் பெரிய ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே உலகம் எந்தளவுக்கு மோசமாகச் சூடாகி வருகிறது என்பதை விளக்கும் வகையிலான சம்பவம் குறித்த தகவல்களை ஆய்வாளர்கள் பகிர்ந்துள்ளனர்.
பருவநிலை மாற்றம்: இமய மலைத்தொடரில் இருக்கும் பனிப்பாறைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக உருகி வருகிறது. பசுமை இல்ல வாயுக்களை நாம் உடனடியாக குறைக்கவில்லை என்றால் இந்த நூற்றாண்டின் இறுதியில் பனிப்பாறைகளில் 80% வரை இழக்க நேரிடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காத்மாண்டுவை சேர்ந்த சர்வதேச மலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் மற்றும் K2 ஆகிய சிகரங்களின் தாயகமான இப்பகுதியில் பனி வேகமாக உருகி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் வரும் ஆண்டுகளில் திடீர் வெள்ளம் மற்றும் பனிச்சரிவுகள் அதிகம் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது. மேலும், இந்த மலைகளில் இருந்து உருவாகும் 12 ஆறுகளை நம்பி பல லட்சம் மக்கள் இருக்கும் நிலையில், அவர்களின் வாழ்க்கையும் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது.
பல கோடி மக்கள்: ஏனென்றால் இந்து குஷ் இமயமலையில் உள்ள பனிப் பாறைகள் தான் இங்கே உருவாகும் ஆறுகளின் முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ளன. இவை மொத்தம் 16 ஆசிய நாடுகள் வழியாகப் பாய்கிறது இதனால் பல கோடி மக்கள் பயன் பெறுகிறார்கள்.
இது குறித்து ஆய்வாளர் அமினா மஹர்ஜன் கூறுகையில், "புவி வெப்பமடைதலுக்கு மலைவாழ் சமூகத்தினர் காரணம் இல்லை. ஆனால், இதனால் ஏற்படும் பாதிப்புகளால் பெரிதும் அவதிப்படுவது என்னவோ இந்த மலைவாழ் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தான். இப்போது பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்ப மயமாதலைத் தடுக்க போதிய முயற்சி இல்லை என்பதே உண்மை" என்று அவர் தெரிவித்தார்.
பாதிப்பு அதிகம்: காலநிலை மாற்றத்தால் பனி மற்றும் பனியால் மூடப்பட்ட கிரையோஸ்பியர் பகுதிகளில் தான் பாதிப்பு மோசமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள பனிப்பாறைகள் 2,000 ஆண்டுகளுக்கு இணையான பனியை இழந்துள்ளது.
முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் 2010க்கு பிறகு இமயமலைப் பனிப்பாறைகள் 65% வேகமாக உருகி வருகிறது. புவி வெப்பமடைதல் காரணமாகப் பனி குறைந்து வருவதால் நீண்ட கால நோக்கில் இது அந்த பகுதிகளில் கிடைக்கும் நன்னீரையும் குறைக்கும். இதனால் இங்கே இருக்கும் 200 பனிப்பாறை ஏரிகள் ஆபத்தான சூழலில் தள்ளப்பட்டுள்ளது. மேலும், இதனால் கடல்மட்டம் அதிகரித்து உலகின் பல பகுதிகளில் கடலில் மூழ்கிப் போகும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் நாம் என்ன மாதிரியான பாதிப்புகளை எதிர்கொள்கிறோம் என்பதனை தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை. முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் ஜோஷிமத் நகரம் அப்படியே நகருக்குள் புதைந்தது. இதனால் அங்கிருந்த மக்கள் அவசரமாக இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. வரும் காலங்களில் இதுபோல பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications