டிரம்புக்கு கை மாற்றப்பட்ட நோபல் பரிசு.. இப்படியெல்லாம் செய்ய முடியுமா? கமிட்டி என்ன சொல்கிறது?
வாஷிங்டன்: வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர், தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை, டிரம்ப்புக்கு கொடுத்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். உண்மையில் இப்படி நோபல் பரிசை கை மாற்ற முடியுமா? இது குறித்து நோபல் பரிசு கமிட்டி விளக்கம் கொடுத்திருக்கிறது.
முதலில் அமைதிக்காக, எதுக்கு வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது? என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி. அங்கு என்ன காசா மாதிரி போர்ச்சூழல் ஏதும் இருக்கிறதா? எதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.

நோபல் பரிசு என்றால் என்ன?
உலகின் மிகப்பெரிய கவுரவமிக்க பரிசாக நோபல் பரிசு இருக்கிறது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஆல்ஃபிரட் நோபல் என்பவரின் உயிலின்படி இது உருவாக்கப்பட்டது. இவர் டைனமைட் போன்ற வெடிப்பொருட்களை கண்டுபிடித்தார். தனது கண்டுபிடிப்புகள் போருக்காக பயன்படுத்தப்படுவதை கண்டு வருந்திய இவர், தனது சொந்தின் பெரும் பகுதியை, யாரெல்லாம் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு கொடுக்க வலியுறுத்தினார்.
அமைதிக்கான நோபல் பரிசு
இதனையடுத்து இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் என 6 துறைகளில் இந்த பரிசு வழங்கப்படுகிறது. ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினமான டிச.10ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்த பரிசு வழங்கப்படுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோம் நகரிலும் வழங்கப்படுகிறது. நார்வே நீண்ட காலமாக சர்வதேச அமைதிக்காக தொடர்ந்து முயன்று வருகிறது. நார்வேயில் வைத்து அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க இதுவும் ஒரு காரணம்.
பரிசு பெறுபவர்களுக்கு என்ன கிடைக்கும்?
நோபல் பரிசை பெறுபவர்களுக்கு, நோபல் பட்டயம்தான் அடையாளம். அதாவது ஒவ்வொரு வெற்றியாளருக்கும் தனித்துவமான சான்றிதழ் வடிவமைக்கப்படும். அதேபோல தங்க பதக்கமும் வழங்கப்படும். இது 18 காரட் தங்கத்தினால் ஆனது. இத்துடன் ரூ.8-9 கோடி மதிப்பிலான பரிசு தொகை வழங்கப்படும். இப்படி பெறப்பட்ட பரிசைதான் வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர், டிரம்புக்கு தானமாக கொடுத்திருக்கிறார்.
நோபல் பரிசு கமிட்டி
சமீப காலமாகவே, தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்பதில் டிரம்ப் கண்ணாக இருக்கிறார். இப்படி இருக்கையில் வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரின் செயல், டிரம்ப் மனதில் பால் வார்த்திருக்கிறது. ஆனால், நோபல் பரிசை இப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்று நோபல் பரிசு கமிட்டி கூறியிருக்கிறது.
நோபல் கமிட்டியின் விளக்கம்
இப்படி நோபல் பரிசு கை மாறிய நிலையில், நோபல் பரிசு கமிட்டி விளக்கமளித்துள்ளது. அதாவது ஜன.11ம் தேதி நோபல் பரிசை டிரம்புக்கு கொடுக்கப்போவதாக மரியா கூறியிருந்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த கமிட்டி, 'நோபல் பரிசை ரத்து செய்யவோ, திரும்ப பெறவோ அல்லது பெயரை மாற்றவோ முடியாது" என்று தெளிவாக கூறியிருந்தது.
நோபல் பரிசு பதக்கம்
ஜன.15ம் தேதி பரிசை மரியா, டிரம்பிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து ஜன.16ம் தேதி கமிட்டி மீண்டும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. அதில், "நோபல் பரிசும் அதை பெற்றவரும் பிரிக்க முடியாதவர்கள். நோபல் பரிசு பதக்கம் என்பது ஒரு பொருள். அதை மரியா, யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், நோபல் பரிசை பெற்றவர் என்கிற பெயர் மரியாவுக்கு மட்டும்தான் இருக்கும். டிரம்புக்கு இருக்காது" என்று தெளிவுபடுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications