"சாதி பாகுபாடு.." முக்கிய சட்டம் கொண்டு வரும் அமெரிக்க மாகாணம்.. திடீர் நடவடிக்கைக்கு என்ன காரணம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சாதி ரீதியான பாகுபாட்டைத் தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அங்கு எதற்காக இதுபோன்ற சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெக் துறையில் கலிபோர்னியா மாகாணம் டாப்பில் இருக்கும் நிலையில், அங்கே இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.
இந்தச் சூழலில் தான், கலிபோர்னியா மாகாணத்தில் சாதிய பாகுபாட்டிற்குத் தடை விதிக்கும் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.. கலிபோர்னியா உறுப்பினர் ஆயிஷா வஹாப் என்பவர் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். அமெரிக்காவில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்குத் தடை விதித்துள்ள முதல் மாகாணம் இதுவாகும்.

அமெரிக்கா: இந்தியத் துணைக்கண்டத்தில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ள சாதி என்பது இந்து மதத்தில் பின்பற்றப்படும் வழக்கமாகும். இந்தியாவில் சாதி ரீதியான பாகுபாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், வெளிநாடுகளில் இதுபோன்ற தடை மசோதா எதுவும் இல்லை. அங்கே சில குறிப்பிட்ட பிரிவுகள் ஒதுக்கிவைக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
அமெரிக்காவில் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.. 2018ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஈக்விட்டி லேப்ஸ் நடத்திய ஆய்வில் மூன்று தொழிலாளர்களில் இருவர் அமெரிக்காவில் தங்கள் பணியிடத்தில் சாதிய பாரபட்சங்களை எதிர்கொள்வதாகக் கூறியுள்ளனர். தலித் மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், அதிக தெற்காசிய ஊழியர்களைக் கொண்ட கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள தலித் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
சட்டங்கள்: முன்னதாக கடந்த பிப்ரவரியில், அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதேபோல 2020ஆம் ஆண்டில், பிராண்டீஸ் பல்கலைக்கழகம் ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்த அமெரிக்காவின் முதல் பல்கலைக்கழகமாக மாறியது,
அதைத் தொடர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், டேவிஸ் மற்றும் பிரவுன் பல்கலைக்கழகம் எனப் பல பல்கலைக்கழகங்களில் சாதிய பாகுபாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாதிய பாகுபாடு: இது குறித்து பிரபல ஆங்கில ஊடகத்திற்கு ஆயிஷா வஹாப் அளித்த பேட்டியில், "சாதி மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்கள் குடும்பத்தினர் ஏற்கவில்லை என இங்கே வருகிறார்கள். ஆனால், இங்கும் அவர்கள் பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள். உண்மையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு மக்கள் நினைப்பதை விடவும் அதிகமாக நடக்கிறது.. குறிப்பாகச் சாதி அமைப்பு 3,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது.. பலரும் இது குறித்து என்னிடம் பேசியுள்ளனர்.
அமெரிக்காவிலும் சாதிய பாகுபாடு இருப்பதாகவும் அதை தாங்களே உணர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.. அமெரிக்கா இப்போது மாறி வருகிறது. பல பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இங்கே வருகிறார்கள். இங்கே சாதிப் பாகுபாடு ஒரு விஷயம் இல்லை என்று சொல்வது தவறானது. நாடு எவ்வளவு பன்முகத்தன்மை கொண்டதாக மாறுகிறதோ, நாம் அவ்வளவு தூரம் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வோம்.
பிரச்சினை இருக்கிறது: சியாட்டிலில் சாதிப் பாகுபாடு தடை செய்யப்பட்டுள்ளது. கனடாவின் டொராண்டோவிலும் இதைத் தடை செய்யப்பட்டுள்ளது. இதை ஏன் அவர்கள் செய்கிறார்கள் என நினைக்கிறீர்கள். அங்கே சாதிய பாகுபாடு இருந்துள்ளது. அதை உணர்ந்தே அவர்கள் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். தினசரி என்னிடம் இது குறித்து 100க்கும் மேற்பட்டோர் பேசுவார்கள். பலரும் இதுபோன்ற மசோதா தேவை என்பதையே வலியுறுத்தி என்னிடம் பேசுவார்கள்.
இந்த மசோதா சாதி, குடும்பம் அல்லது வம்சாவளி என எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் வாழ்க்கையை வாழ அனுமதிக்கிறது. ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள மதம், இனம் மற்றும் பாலின பாகுபாடுகளும் இதில் உள்ளன. இந்த மசோதா நமது சட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், பலதரப்பட்ட மக்களைப் பாதுகாக்கவும் உதவும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications