சீனாவை முடித்துவிடும் டிரம்ப்.. ரஷ்யாவை, அமெரிக்கா அரவணைப்பது ஏன் தெரியுமா? பின்னணி அரசியல் இதுதான்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மாறியதுமே உலக அரசியல் மாற தொடங்கி உள்ளது. எதிரியாக இருந்த ரஷ்யாவை அரவணைக்க வியூகம் வகுத்துள்ள டொனால்ட் டிரம்ப் மறுபுறம் தைவான் விஷயத்தை வைத்து இன்னொரு வல்லரசான சீனாவை சீண்ட தொடங்கி உள்ளார். இதன் பின்னணி என்ன? ரஷ்யாவை அமெரிக்கா நட்பாக்க துடிப்பதும், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா செயல்பட தொடங்கியது ஏன்? அமெரிக்காவின் இந்த செயலால் நம் நாட்டுக்கு கிடைக்கும் பலன் என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
2025 ஜனவரி 20.. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அன்று முதல் உலக அரசியல் என்பது பெரிய மாற்றத்தை நோக்கி புறப்பட தொடங்கி உள்ளது. உக்ரைன் மீது கடந்த 3 ஆண்டுகளாக போர் புரிந்து வரும் ரஷ்யாவை அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஜோ பைடன் வெறுத்தார். அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தார். ரஷ்யாவை சமாளிக்க உக்ரைனுக்கு நிதி உதவி, ஆயுத உதவிகளை வழங்கினார்.

ஆனால் டொனால்ட் டிரம்ப் அதிபரானதும் நிலைமை மாற தொடங்கி உள்ளது. ரஷ்யாவிடம் உக்ரைன் மோதியதே தவறு எனக்கூறி வரும் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை கண்டபடி திட்டி தீர்த்து வருகிறார். அதேபோல் உக்ரைனுக்கு அளித்த ராணுவ உதவிகளுக்கு கைமாறாக அந்த நாட்டில் உள்ள அரியவகை கனிமங்களின் 50 சதவீதத்தை அபகரிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
ரஷ்யா பக்கம் டிரம்ப்
உக்ரைன் போரால் அமெரிக்காவின் பணம் தேவையின்றி செலவிடப்படுவதாக டொனால்ட் டிரம்ப் நினைக்கிறார். இதனால்
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தும் பணியை தீவிரமாக தொடங்கி உள்ளார் டொனால்ட் டிரம்ப். எதிரி நாடாக என்றாலும் கூட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் டொனால்ட் டிரம்ப்பே பேசினார். அதன்பிறகு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உள்ளிட்டவர்கள் சவுதி அரேபியாவில் சந்தித்து போர் நிறுத்தம் பற்றி பேசியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் போரில் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அழைப்பு என்பது விடுக்கப்படவில்லை. இதன்மூலம் உக்ரைனை மொத்தமாக புறக்கணித்துள்ளார் டிரம்ப். மேலும் டிரம்ப் முயற்சியால் விரைவில் ரஷ்யா - உக்ரைன் போர் என்பது முடிவுக்கு வரும் நிலை உள்ளது.
ரஷ்யாவை அரவணைக்கும் டிரம்ப்
இது நடக்கும் பட்சத்தில் உக்ரைனில் ரஷ்ய படைகள் பிடித்த பகுதிகள் அந்த நாட்டுக்கே வழங்கப்படலாம். இதனை முன்வைத்து தான் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிடம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வார்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ஜனவரி 20ம் தேதி காலை வரை ஜோ பைடன் தான் இருந்தார். அப்போது வரை ரஷ்யாவும், அமெரிக்காவும் எலியும், பூனையுமாக இருந்த நிலையில் தற்போது ஒரே மாதத்தில் இருநாடுகளும் நட்பாக மாறிவிட்டன. இதற்கு டொனால்ட் டிரம்ப் தான் முக்கிய காரணம். சரி இது இருக்கட்டும். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் பெரும் எதிரியாக இருந்த ரஷ்யாவை தற்போது அமெரிக்கா அரவணைக்க தொடங்கி உள்ள அதேவேளையில் இன்னொரு சம்பவத்தையை டிரம்ப் தொடங்கி உள்ளார்.
தைவானை வைத்து சீனாவுக்கு குடைச்சல்
அதுதான் இன்னொரு வல்லரசு நாடான சீனாவை எதிர்ப்பது. இந்த வேலையையும் சைலன்ட்டாக தொடங்கி உள்ளார் டொனால்ட் டிரம்ப். அதாவது சீனாவின் ஒரு பகுதியாக தைவான் இருந்தது. தற்போது தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. இதனை சீனா இன்னும் அங்கீகரிக்கவில்லை. தைவான் என்பது சீனாவின் ஒரு பகுதி என்று அந்த நாடு உரிமை கொண்டாடி வருகிறது. அதேபோல் இன்னும் பல நாடுகள் தைவானை தனி நாடாக அங்கீகரிக்காத நிலையில் சில நாடுகள் தைவானை அங்கீகரித்துள்ளன. தைவான் விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு இப்போது மாறி உள்ளது.
ஜோபைடன் அதிபராக இருந்த வரை தைவானை சீனாவின் ஒரு பகுதியாக ஏற்கவில்லை. அதேவேளையில் தனி நாடாகவும் அங்கீகரிக்கவில்லை. தைவான் என்பது சீனாவுக்கு அப்பாற்பட்ட பிராந்தியம் என்றே அமெரிக்கா வரையறுத்து வந்தது. ஜோ பைடன் அதிபராக இருந்தவரை அமெரிக்காவின் நிலைப்பாடு இதுவாக தான் இருந்தது. ஆனால் இப்போது டொனால்ட் டிரம்ப் அந்த நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். தைவான் விடுதலையை அமெரிக்கா ஆதரிக்காமல் இருந்தது. ஆனால் தற்போது தைவான் விடுதலையை அமெரிக்கா ஆதரிக்கவில்லை என்ற வாசகம் இருக்கும் நிலையில் இந்த கொள்கையில் இருந்து பின்வாங்கி உள்ளது அமெரிக்கா. சீனா குறித்த நிலைப்பாட்டு அறிக்கையில், "தைவானின் சுதந்திர போராட்டத்தை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்" என்கிற வரியை அமெரிக்கா நீக்கியிருக்கிறது. இதன்மூலம் சீனாவை சீண்ட தொடங்கி உள்ளார் டிரம்ப்.
அமெரிக்காவை எதிர்க்கும் சீனா
இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே டிரம்ப் வந்த பிறகு சீனா மீது அமெரிக்க 25 சதவீத விதிகளை விதித்தது. தற்போது அந்த வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தைவான் விஷயத்தில் அமெரிக்கா தனது நிலையை மாற்றி உள்ளது. இதன்மூலம் சீனாவை எதிர்க்க அமெரிக்க முடிவு செய்துள்ளதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். பொதுவாக அமெரிக்காவை பொறுத்தவரை தங்களுக்கான எதிரி நாடுகள் என்றால் அந்த நாட்டுக்கு அடுத்த இடத்தில் வல்லரசுகளாக இருக்கும் ரஷ்யா மற்றும் சீனா என்று தான் சொல்ல வேண்டும். அமெரிக்காவிடம் மல்லுக்கட்டும் வகையில் ரஷ்யா, சீனாவிடம் படைபலம், ஆயுத பலம் உள்ளது. இந்த 2 நாடுகளும் தான் அமெரிக்காவை எட்டிப் பிடிக்கும் வகையில் வளர்ந்து வருகின்றன.
எதிரி எண்ணிக்கையை குறைக்க..
ஆனால் டொனால்ட் டிரம்போ, உலகிலேயே சக்தி படைத்த நாடாக அமெரிக்கா தான் இருக்க வேண்டும். அமெரிக்கா தான் மொத்த உலகத்தையும் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். மேலும் அமெரிக்காவுக்கு எதிரியாக இருக்கும் நாடுகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கிறார். இதனால் தான் ரஷ்யாவை அரவணைத்து சீனாவை எதிர்க்க தொடங்கி உள்ளார். இதுவரை ரஷ்யாவுக்கும், சீனாவும் அமெரிக்காவுக்கு எதிரியாக உள்ளது. இதனால் அமெரிக்கா விஷயத்தில் ரஷ்யாவும், சீனாவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ரஷ்யாவை அமெரிக்கா எதிர்த்தால் சீனாவும், சீனாவை அமெரிக்கா எதிர்த்தால் ரஷ்யாவும் குரல் கொடுக்க தொடங்கி உள்ளன.
இருநாடுகளையும் அமெரிக்காவால் சமாளிக்க முடியவில்லை. இப்படியான சூழலில் தான் ரஷ்யா - சீனாவை பிரிக்க நினைக்கிறார் டிரம்ப். அதன் முதற்படி தான் ரஷ்யாவை ஆதரிப்பதும், சீனாவை எதிர்ப்பதும் ஆகும்.
ரஷ்யாவை தன்பக்கம் இழுத்து சீனாவுக்கு கட்டம் கட்ட நினைக்கிறார் டொனால்ட் டிரம்ப். இன்னும் சொல்லப்போனால் இந்த நிலைப்பாட்டை டொனால்ட் டிரம்ப் மட்டுமின்றி அவரது குடியரசு கட்சியின் தலைவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தின்போதே வெளிப்படுத்தி இருந்தனர். உதாரணமாக சில தலைவர்களை இங்கே குறிப்பிட்டு சொல்லலாம்.
விவேக் ராமசாமி
அதாவது இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்க முயற்சித்தார். அதன்பிறகு அவர் டொனால்ட் டிரம்புக்கு வழிவிட்டு விலகினார். விவேக் ராமசாமி தனது தேர்தல் பிரசாரத்தின்போது ‛‛அமெரிக்கா சீனாவையும், ரஷ்யாவையும் எதிர்க்கிறது. ஒரே நேரத்தில் 2 வல்லரசுகளை எதிர்ப்பது நல்ல அணுகுமுறையாக இல்லை. அமெரிக்காவின் வெளியுறவு துறை இதனை மாற்ற வேண்டும். சீனா தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ரஷ்யா , உக்ரைன் மீதான போர், பொருளாதார தடைகளை எதிர்க்கொண்டும் பலம் குறைந்து வருகிறது. இப்படியான சூழலில் இருவரையும் எதிர்த்தால் அவர்கள் இணைந்து விடுகின்றன.
இதனால் பலம் குன்றும் ரஷ்யாவை நம் பக்கம் கொண்டு வந்து சீனாவை எதிர்ப்பது தான் அமெரிக்காவுக்கு நல்லது. இதுதான் சரியான யுக்தியாக இருக்கும். நான் மட்டும் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் இதுபற்றி விளாடிமிர் புதினிடம் பேசுவேன். ரஷ்யா உடனான ராணுவ பந்தத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என்று நேரடியாக சொல்வேன். இது ஒன்றும் அமெரிக்காவுக்கு புதிது அல்ல. 1972 ல் அமெரிக்க அதிபராக இருந்த நிக்சன் சீனாவை அரவணைத்து ரஷ்யாவை தோற்கடித்தர். இப்போது அதனை நான் ரிவர்ஸ் முறையில் செய்வேன். '' என்றார். இதன்மூலம் சீனாவை அவர் டார்க்கெட் செய்திருந்தார்.
துணை அதிபர் - பாதுகாப்புத்துறை அமைச்சர்
அதேபோல் தற்போது அமெரிக்க துணை அதிபராக இருக்கும் ஜேடி வான்ஸ் கூட தேர்தல் பிரசாரத்தின்போது, ‛‛அமெரிக்காவின் முதன்மையான எதிரி சீனா தான். அதன்பிறகு தான் ரஷ்யா'' என்று கூறியிருந்தார். அதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள பீட் ஹெக்செத் ‛‛நமது கவனத்தை மாற்றம் செய்ய வேண்டும். ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பில் நாம் அதிகமாக கவனம் செலுத்தி வர முடியாது. இன்று இந்தோ - பசிபிக்கில் சீனாவை எதிர்கொள்ளும் வகையில் நமது இலக்கு இருக்க வேண்டும். இதுதான் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியம்'' என்று கூறியிருந்தார்.
வெளியே காட்டாத டிரம்ப்
இதன்மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டுமின்றி அவரது நிர்வாகத்தில் உள்ள துணை அதிபர் ஜேடி வான்ஸ், பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத், குடியரசு கட்சியில் வளர்ந்து வரும் இளம் தலைவராக அறியப்படும் விவேக் ராமசாமி உள்ளிட்டவர்களின் பிரதான நோக்கம் என்பது ரஷ்யாவை விட சீனாவை எதிர்க்க வேண்டும் என்பதாக தான் உள்ளது. இதுபற்றி டொனால்ட் டிரம்ப் இன்னும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காவிட்டாலும் அவரது செயல்பாடு என்பது ரஷ்யாவை அரவணைத்து சீனாவை வீழ்த்துவது என்பதாக தான் உள்ளது. அமெரிக்கா இப்படியான யுக்தியை கையில் எடுப்பது இது முதல் முறையல்ல.
பனிப்போர் டெக்னிக்
இதற்கு முன்பு பனிப்போர் சமயத்தில் ஒரு பக்கம் அமெரிக்காவும், இன்னொரு பக்கம் கம்யூனிச நாடுகளும் இருந்தன. அதில் ரஷ்யா(அப்போது சோவியத் ரஷ்யா), சீனாவும் அடங்கும். அப்போது ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் இடையே சிறுசிறு விஷயங்களில் உரசல் போக்கு இருந்தது. அப்போது சீனாவை தன்பக்கம் கொண்டு வந்த அமெரிக்கா, ரஷ்யாவின் கதையை முடித்தது. பனிப்போரில் அமெரிக்கா வென்றது. இந்த யுக்தியை இப்போதும் அமெரிக்கா கையில் எடுக்கிறது. ஆனால் இந்த முறை அமெரிக்கா ரஷ்யாவை அரவணைத்து சீனாவை வீழ்த்த துடிக்கிறது.
இந்தியாவுக்கு என்ன லாபம்?
இது நடக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு நன்மையே கிடைக்கும். ஏனென்றால் சீனா நமது அண்டை நாடாக இருந்து நமக்கு குடைச்சல் கொடுக்கிறது. எல்லையில் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. மறுபுறம் ரஷ்யா நமது நட்பு நாடாக உள்ளது. நம் நாட்டுக்கு தேவையான போர் விமானங்கள், ராணுவ தளவாடங்களை ரஷ்யா தான் அதிகமாக வழங்கி வருகிறது. அதேபோல் அமெரிக்கா, சீனாவை எதிர்க்க வேண்டும் என்றால் நம் நாட்டின் உதவியும் தேவைப்படும். இப்படியான சூழலில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியாவும் ஒன்றிணைய வாய்ப்புள்ளது. இதனால் டொனால்ட் டிரம்பின் இந்த செயல்பாடு என்பது நம் நாட்டுக்கு சாதகமாகவே பார்க்கலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications