குட்டி நாடு "மால்டோவா.." 1100 கோடியை தூக்கிக் கொடுக்கும் அமெரிக்கா.. மிரள வைக்கும் சர்வதேச அரசியல்
வாஷிங்டன்: தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள குட்டி நாடான மால்டோவாவிற்கு அமெரிக்கா 135 மில்லியன் டாலர், அதாவது சுமார் 1,100 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுத்துள்ளது. சம்பந்தமே இல்லாமல் ஐரோப்பிய நாட்டுக்கு அமெரிக்கா ஏன் நிதியளிக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இதன் பின்னணியில் இருக்கும் சர்வதேச அரசியல் குறித்துப் பார்க்கலாம்.
கிழக்கு ஐரோப்பியப் பகுதியில் அமைந்துள்ள குட்டி நாடான மால்டோவா.. இந்த நாட்டின் மொத்த பரப்பளவே 33,846 சதுர கிலோமீட்டர் தான். மேலும், இதன் மக்கள்தொகையும் வெறும் 25 லட்சம் தான்.

ஐரோப்பாவில் அமைந்துள்ள இந்தக் குட்டி நாட்டிற்கு 135 மில்லியன் டாலர், அதாவது சுமார் 1,100 கோடி ரூபாயை அமெரிக்கா தூக்கிக் கொடுத்துள்ளது. இதற்குப் பின்னணியில் இருக்கும் சர்வதேச அரசியல் என்னவென்று நாம் பார்க்கலாம்.
நிதியுதவி: ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும் போலி தகவல்களை எதிர்த்துப் போராடவும் அமெரிக்கா 135 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்கும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உறுதியளித்தார்.
ஆண்டனி பிளிங்கன் மால்டோவாவின் தலைநகரான சிசினாவுக்கு சென்றிருந்த நிலையில், அங்கிருந்தபடியே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதில் எரிசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்த 85 மில்லியன் டாலர் அளிக்கப்படும் நிலையில், எனர்ஜி மற்றும் விவசாய துறை மறுசீரமைப்பதற்கும், இணையத்தில் பரவும் போலி தகவல்களைத் தடுப்பதற்கும் $50 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்: உக்ரைன் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து ரஷ்யா மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் தலையிடலாம் எனக் கூறப்படும் நிலையில், ரஷ்ய ஆதிக்கத்தைத் தடுக்கவே அமெரிக்கா இந்த குட்டி நாட்டிற்கு இவ்வளவு பெரிய தொகையைத் தூக்கிக் கொடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிளிங்கன் மேலும் பேசுகையில், "இது ரஷ்யத் தலையீட்டை எதிர்ப்பதற்கும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கும், மால்டா தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மேற்கத்திய நாடுகளின் பாதையில் பயணிக்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இது மால்டோவில் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும்" என்றார்.
குறிப்பாக பல்வேறு உலக நாடுகளிலும் ரஷ்யா போலி செய்திகளைப் பரப்பி அதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகக் குற்றஞ்சாட்டிய பிளிங்கன், அதை சமாளிக்க இந்த தொகை பயன்படும் என்று அவர் தெரிவித்தார்.
உக்ரைன் போர்: உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே இந்த மால்டோவுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகிறது. கடந்த 2022 பிப்ரவரிக்குப் பிறகு, இதுவரை அமெரிக்கா $774 மில்லியன், அதாவது சுமார் 6,000 கோடி ரூபாய் நிதி உதவியை வழங்கியுள்ளது. அதில் சுமார் 300 மில்லியன் டாலர் எனர்ஜி பாதுகாப்பிற்கு மட்டும் சென்றுள்ளது.
பின்னணி: மால்டோவா இதற்கு முன்பு இயற்கை எரிவாயுவுக்கு முழுக்க முழுக்க ரஷ்யாவையே சார்ந்திருந்தது. இருப்பினும் உக்ரைன் போருக்குப் பிறகு நிலைமை மொத்தமாக மாறியது. மால்டோவாவுக்கு தரும் இயற்கை எரிவாயு சப்ளைவை திடீரென ரஷ்யா குறைத்தது. மேலும் வேறு சில வகையிலும் மால்டோவா அழுத்தத்தை எதிர்கொண்டது. அதன் பிறகே ரஷ்யாவில் இருந்து விலகி வர மால்டோவா முடிவு செய்தது. அதன் பிறகே அமெரிக்கா தொடர்ந்து மால்டோவாவுக்கு நிதியுதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications