"3 பஸ் அளவுக்கு பெருசு.." சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தாமல் இருப்பது ஏன் தெரியுமா! பரபர
அமெரிக்கா மீது சீன பலூன் பறக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்கா மீது சீன பலூன் பறக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமெரிக்கா இதைச் சுட்டு வீழ்த்தாமல் தொடர்ந்து கண்காணித்தே வருகிறது.
Recommended Video
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. தைவான், ஜப்பான், ஹாங்காங் என்று பல்வேறு விவகாரங்களிலும் சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா முழுமையாக எதிர்த்தே வருகிறது.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. இந்தச் சூழலில் அமெரிக்கா மீது சீன பலூன் பறப்பதாக எழுந்த புகார் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் இப்போது சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன பலூன்
நேற்றைய தினம் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து இருந்தது. அதாவது, சீனாவில் உளவு பலூன் ஒன்று அமெரிக்கா மேல் பறந்து வருவதாகவும் இதைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த பலூன் தங்கள் நாட்டு அணு ஆயுத தளங்களை அமெரிக்கா கண்காணிக்க முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்காவில் வானில் தெரியும் அந்த வெள்ளை நிற பலூன் படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

பயணம் ரத்து
அமெரிக்கா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நேற்றிரவு சீனா செல்லவிருந்தார். இந்தச் சூழலில் பலூன் விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அவர் தனது சீன பயணத்தைத் தள்ளி வைத்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க டாப் அமைச்சர் ஒருவர் சீனா செல்லவிருந்தார். இது இரு நாடுகளுக்கும் இடையே இருந்த மோதல் போக்கைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் பலூன் விவகாரத்தால் அமைச்சரின் அந்த பயணமே ரத்தாகியுள்ளது.

சீனா விளக்கம்
இந்த விவகாரத்தில் சீனாவும் விளக்கமளித்திருந்தது. அதாவது அது வானிலை தகவல்களைச் சேகரிக்கும் பலூன் என்றும் வழி தவறி அங்குச் சென்றுவிட்டதாகவும் கூறினர். இருப்பினும், அமெரிக்கா இதை நம்புவதாக இல்லை.. உளவு பார்க்கவே சீன பலூன் வந்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. அந்த பலூனில் அதிகப்படியான பொருட்கள் இருப்பதாகவும் அந்த பலூனுக்கு கண்காணிப்பு திறன் இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், கீழே இருந்து பார்க்கச் சிறிய பலூன் போலத் தெரிந்தாலும் கூட.. அந்த பலூன் மூன்று பஸ் அளவுக்கு பெரியதாம். இதைத் தான் அமெரிக்கா இப்போது தீவிரமாகக் கண்காணித்து வருகிறது

சுட்டு வீழ்த்தாதது ஏன்
அமெரிக்க வான்வழியில் அனுமதி இல்லாமல் இந்த பலூன் நுழைந்துள்ளது. அப்படியென்றால் அதை எளிதாக சுட்டு வீழ்த்தி விடலாமே என்று பலருக்கும் தோன்றலாம். இதையும் அதிபர் பைடன் வேண்டுகோள்படி, அமெரிக்க ராணுவம் பரிசீலனை செய்துள்ளனர். இருப்பினும், அதுபோல ஏதாவது செய்தால், அவ்வளவு பெரிய பலூன் விழும்போது கீழே உள்ளவர்களுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதையெல்லாம் கருதியே சுட்டு வீழ்த்தும் முடிவை அமெரிக்கா கைவிட்டு, அந்த பலூனை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

பாதுகாப்புத் துறை
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் பைடனிடம் அதிகாரிகள் விளக்கியுள்ளனர். இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை சார்பில் கூறுகையில், "இந்த பலூனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கடந்த சில நாட்களாகவே அது அமெரிக்கா மீது பறந்து வருகிறது. எங்கள் முன்பு இருக்கும் அனைத்து ஆப்ஷன்களையும் பரிசீலனை செய்து வருகிறோம். இந்த விவகாரத்தில் சரியான நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுப்போம். அந்த பலூனில் உளவு பார்க்கும் திறன் இருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம்" என்றார்.

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை தரப்பிலும் இதேபோன்ற கருத்துகள் கூறப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை தரப்பில் கூறுகையில், "இந்த பலூன் காரணமாக இப்போது அமெரிக்க மக்களுக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை. இது தொடர்பாக அதிபர் பைடனிடம் முழுமையாக விளக்கமளிக்கப்பட்டது. அவர் ராணுவத்திடம் நம் முன் இருக்கும் ஆப்ஷன்களை தரச் சொல்லிக் கேட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் இப்போது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். அந்த பலூனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications