அசரடிக்கும் அண்ணாமலை.. தமிழ்நாட்டில் மலர்கிறது "தாமரை மொட்டுகள்"..10 தலையா? கவனித்த திராவிட கட்சிகள்
சென்னை: அதிமுகவில் கூட்டணி இதுவரை முடிவாகாத நிலையில், பாஜகவின் தேர்தல் வியூகம் வேகமெடுத்துள்ளதாக தெரிகிறது. ஒருபக்கம் கூட்டணி வியூகம் + மறுபக்கம் தொகுதிகளில் வியூகம் என டபுள்ரூட்டை கையில் எடுத்துள்ளது தமிழக பாஜக.. இதையடுத்து, தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த அதிமுக என்ற பேச்சையே கடந்த 2 மாதங்களாகவே பாஜக முன்னெடுக்கவில்லை.. இதுவரை அதிமுகவுடன் சமசரம் என்ற பேச்சையும் எடுக்கவில்லை.. எடப்பாடி பழனிசாமியையும் சமாதானம் செய்யும் முயற்சியிலும் இறங்கவில்லை.. ஆனால், 3வது அணி அமைத்து போட்டியிடவும் மும்முரமாகி கொண்டிருப்பதாக தெரிகிறது.

அண்ணாமலை: முக்கிய பிரமுகர்களை சந்திப்பது, கூட்டணியை வலுப்படுத்துவது போன்ற அஜெண்டாவையும், கையில் எடுத்து வருகிறாராம் மாநில தலைவர் அண்ணாமலை. இதைத்தவிர, அதிமுகவிலிருக்கும், பாஜக ஆதரவாளர்களான முக்கிய தலைவர்களுக்கும், தூண்டில் விரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதேசமயம், விலகிச்சென்ற அதிமுகவை மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான வேலைகளையும் பாஜக தலைமை மேற்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.. ஒருவேளை, எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் தொடரும்பட்சத்தில், அமமுக + ஓபிஎஸ் + சசிகலா + தமாகா + பாரிவேந்தர் + ஜான்பாண்டியன் + பாமக + கிருஷ்ணசாமி + தேமுதிக இவர்களை இணைத்து பாஜக கூட்டணி அமைக்கவும் பாஜக தயாராவதாக தெரிகிறது.
வாக்குகள்: அப்படியே அணி அமைத்து தனித்து போட்டியிட்டாலும், பாஜக இந்த முறை கணிசமான வாக்குகளை பெறுவது உறுதி என்கிறார்கள், அக்கட்சியில் உள்ள சீனியர்கள்.. இதற்கு காரணமே அண்ணாமலைதான் என்றும் அடித்து சொல்கிறார்கள்.
காரணம், அண்ணாமலையின் நடைபயணத்தில், நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு அபரிமிதமாகவே கிடைத்து வருகிறதாம்.. பெண்கள், மாணவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பட்டவர்களும் கலந்துகொண்டு வருவதால், வளர்ச்சியை நோக்கி கட்சி செல்வதாகவே கருதப்படுகிறதாம். போதாக்குறைக்கு, பிரதமர் மோடியின் சாதனைகளையும், பாஜகவின் சித்தாந்தத்தையும், பரவலாக மக்களிடம் கொண்டுபோய் அண்ணாமலை சேர்த்து வருவதும், பிளஸ் பாயிண்ட்டாகிவிட்டதாம்.
பாஜக தொகுதிகள்: அதனால்தான், கடந்த 6 மாதத்துக்கு முன்பிருந்தே, 10 எம்பிக்களை, தமிழகத்திலிருந்து அனுப்ப வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக களமிறங்கியதாம். விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் யாத்திரை எழுச்சி பெற்றுவருவதாக கருதப்படுகிறது. அத்துடன் முக்கிய தொகுதிகளில் தன்னுடைய வியூகத்தை தமிழக பாஜக கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதற்கேற்றபடி, தென் சென்னை, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி தொகுதிகளில் பாஜகவின் களப்பணிகள் வேகம் எடுத்துள்ளதாம். இந்த தொகுதிகள் மட்டுமல்லாமல், திருச்சி, மதுரை, தஞ்சாவூர் தொகுதிகளிலும் பாஜகவின் கண் விழுந்துள்ளதாக சொல்கிறார்கள்.
ஸ்டார் வேட்பாளர்கள்: மற்றொருபக்கம், முக்கிய தொகுதிகளில் ஸ்டார் வேட்பாளர்களை களமிறக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதில், ஏதாவது ஒரு கொங்கு தொகுதியில் அண்ணாமலையும் களமிறங்கலாம் என்கிறார்கள். தமிழக பாஜகவின் இந்த வேகத்தை பார்த்து, மேலிட பாஜக குளிர்ந்து போயுள்ளதாம். சிறப்பான கவனிப்புகள் இருக்கும் என்ற உத்தரவாதம் தரப்பட்டுள்ளதால், இத்தனை நாளும் சோர்ந்து போயிருந்த நிர்வாகிகள் உற்சாகமாகியிருக்கிறார்களாம்.
ஆக மொத்தத்தில், 10 தொகுதிகளிலும் பாஜகவின் எழுச்சி அதிகமாகி உள்ளதால், இதை அதிமுகவும், திமுகவும் உற்றுகவனித்து வருகிறார்களாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications