காதலிக்கு திருமணமான கோபம்: போட்டோக்களை முகநூலில் வெளியிட்ட இளைஞர்: உயர் நீதிமன்றம் அபராதம்
மைனர் பெண்ணை மணமுடித்து, அதனால் போக்சோ சட்டத்தில் கைதான இளைஞர் அந்தப்பெண் மேஜரானவுடன் வேறு ஒருவருக்கு மணமுடிக்கப்பட்ட நிலையில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்த நிலையில் அப்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டதாக புகாரின் பேரில் இளைஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

சிறுமியுடன் காதல்- திருமணம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். வீட்டில் எதிர்ப்பு எழுந்ததால் 18 வயது பூர்த்தியாகாத பெண்ணை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துள்ளார்.

தாயாரின் புகாரால் போக்சோ சட்டத்தில் கைதான இளைஞர்
மைனர் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக பெண்ணின் தாயார் குன்னம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சுரேஷ் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதாகி, பின்னர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.

சிறையில் இளைஞர் மேஜரான காதலிக்கு வேறு இடத்தில் திருமணம்
சுரேஷ் சிறையில் இருந்தபோது, அந்த பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியானதால் வேறு ஒருவருக்கு அவரது பெற்றோர் மணமுடித்தனர். இந்நிலையில் தனது மனைவி சட்டவிரோத காவலில் இருப்பதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஹேபியஸ் கார்பஸ் வழக்கு போட்ட இளைஞர்
இளைஞர் இன்னொருவர் மனைவியான பெண் தனது காதலி அவர் விருப்பம் இல்லாமல் அடைத்து வைத்திருப்பதாக போட்ட வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண்ணுக்கு வேறு ஒருவருடன் மணமாகிவிட்டதால், வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ள நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஆனால் குடும்பத்தினரின் சட்டவிரோத காவலில் இருக்கும் மனைவியை நேரில் ஆஜர்படுத்தி விசாரித்தால், தன்னுடன் வருவதற்கே விருப்பப்படுவார் எனவும், வழக்கை வாபஸ் பெற முடியாது எனவும் சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விருப்பப்பட்டே திருமணம் பெண் வாக்குமூலம்
பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்தப் பெண், தாயார், கணவன் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது நீதிபதிகளிடம், தனது சொந்த விருப்பத்தில், பெற்றோரின் சம்மதத்துடன் தான், வேல்முருகனை மணமுடித்ததாக அந்தப் பெண் தெரிவித்தார். மேலும், சுரேஷ் ஏற்கனவே இரண்டு பெண்களுடன் தொடர்பிலிருப்பதாகவும், சுரேஷின் நடத்தை சரியில்லாததால் அவரை விட்டு பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதால் அபராதம்
அப்போது, தன் மகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சுரேஷ் முகநூலில் வெளியிட்டுள்ளதாக தாய் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இவற்றை பதிவு செய்த நீதிபதிகள், அந்த பெண்ணை மீட்க கோரிய சுரேசின் வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், சுரேஷுக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அந்த தொகையை 8 வாரத்தில் பெண்ணின் தாயாருக்கு கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications