Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறுப்பு உமிழும் பேச்சுகள்... வேர் பரப்பாமல் வெந்நீர் ஊற்றி அழிக்கும் வழி எது? - பா. கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

ஒரு கிறிஸ்தவ பாதிரியாரின் வெறுப்பு உமிழும் பேச்சு தற்போது பேசுபொருளாகிவிட்டது. பிற மதத்தவரின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதை அடுத்து உரிய நடவடிக்கைக்கு அவர் ஆளாகியுள்ளார். இது போன்ற வெறுப்புகளைத் தவிர்க்க என்ன வழி என்பதே சமூக ஆர்வலர்களின் தேடலாக உள்ளது.

ஒரு ஜென் துறவியிடம் வந்த இளைஞன், "குருவே! என் மனத்தில் பல தீய அழுக்கான எண்ணங்களே நிரம்பியுள்ளன. அதை நீக்க தியானம் செய்வது எப்படி?" என்று கேட்டான். அதற்கு அவர் பதில் பேசவில்லை. அவனுக்கு ஒரு கோப்பை தேநீர் அளித்தார். இருவரும் தேநீர் அருந்திய பின் இன்னொரு கோப்பையில் தேநீர் ஊற்றிவிட்டு, "இதில் என்ன இருக்கிறது?" என்று கேட்டார். "தேநீர்தான்!" என்று பதிலளித்தான்.

பின்னர் அவனிடம் பெரிய ஜாடி தண்ணீரைக் கொடுத்து, தேநீர்க் கோப்பையில் நீரை இடை விடாமல் ஊற்றிக் கொண்டே இருக்கச் சொன்னார். அவனுக்குப் புரியவில்லை, ஒரு கோப்பையில் தேநீரை ஊற்றி, அதை வீணாக்குகிறாரே என்று நினைத்தபடியே நீரைத் தொடர்ந்து ஊற்றினான். பெரிய ஜாடி முழுவதும் இருந்த நீரை அந்தக் கோப்பையில் ஊற்றி முடித்தான். கோப்பையைக் காட்டி, "இதில் தேநீர் இருக்கிறதா?" என்று கேட்டார் குரு. "இல்லை, தண்ணீர்தான்" என்றான். அதிகம் பேசாத குரு, "கோப்பை உன் மனம், தேநீர் உன் சிந்தனைகள். தண்ணீர் நல்ல எண்ணம். அவ்வளவுதான் பதில். நீ போய் வா" என்று தன் அறைக்குச் சென்றுவிட்டார்.

கொஞ்ச நேரம் யோசித்த இளைஞனுக்கு இப்போது விளங்கியது, மனத்தில் இருக்கும் எண்ணங்களை அகற்றுவதற்கு, நல்ல எண்ணங்களையே செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டான்.

Paa Krishnans Article on Communal hate speeches

கடந்த சில நாட்களாக ஒரு கிறிஸ்தவ பாதிரியார் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு பெரிய பேசுபொருளாகிவிட்டது. இதைப் போல் கடந்த காலங்களில் திருப்புகழ் பற்றியும், மனு தர்மம் குறித்தும் சர்ச்சைகள் எழுந்ததுண்டு.

இத்தகைய வெறுப்புப் பேச்சுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க ஒரே வழி ஜென் துறவியின் வழிதான்! அதாவது வெறுப்பான சம்பவங்களையே அசை போடுவதற்கு மாறாக, ஆரோக்கியமான பேச்சு, செயல், எண்ணம் எந்த இடத்திலிருந்து வந்தாலும் அதை இந்த சமூகம் அதிகரிக்கச் செய்வதே சரியான வழி.

அண்மையில் ராஷ்ட்ரீய ஸ்வம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், "இஸ்லாமியர்களின் மரபணுவும் இந்துக்களின் மரபணுவும் ஒன்றுதான். இருவரும் சகோதரர்கள்தான்" என்று பேசியிருக்கிறார். இது வரவேற்கத் தக்கது. அதைப் போல் கிறிஸ்தவ பாதிரியாரின் பேச்சை சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கண்டித்திருக்கிறார். கிறிஸ்தவ சமுதாயத்தினரே சாடியுள்ளனர்.

அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டியது இத்தகைய சர்ச்சைகள் எந்த தரப்பிலிருந்து வருகிறதோ, அந்த தரப்பினரே முதலில் கண்டிக்க வேண்டும். அது நல்ல ஆரோக்கியமானது. முப்பது ஆண்டுகளுக்கு முன் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஹிந்துக்களே கண்டித்ததன் மூலம் இந்தியாவின் மதச்சார்பின்மை எத்தகைய வலிமை உடையது என நிரூபிக்கப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க, ஏராளமான ஆரோக்கிய நிகழ்வுகள் பரப்பப்படவேண்டும். உதாரணத்திற்கு, சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த நிகழ்வு. கொரோனா தொற்றினால், மருத்துவமனையில் தாய் தந்தை இருவரையும் அடுத்தடுத்து இழந்தார் இளம் இந்துப் பெண். உற்றார் உறவினர் யாரும் இல்லாமல் செய்வதறியாது தவித்த அந்தப் பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டி, உரிய சான்றிதழ்களைப் பெறுவதற்கும், பெற்றோரின் சடலங்களை மருத்துவமனையில் பெற்று, இந்து முறைப்படி தகனம் செய்வதற்கும் பேருதவி புரிந்திருக்கிறார் முகமது அலி ஜின்னா என்ற இஸ்லாமிய இளைஞர். அந்தப் பெண்ணுக்கு ஒரு சகோதரன் கிடைத்துவிட்டார்.

கேரளத்தைச் சேர்ந்த அப்துல்லா - கதீஜா என்ற இஸ்லாமிய தம்பதி தஞ்சையில் பிறந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணைத் தத்து எடுத்து வளர்த்தனர். பத்தாண்டுகளுக்கு முன் அந்தப் பெண் திருமண வயதை எட்டியபோது, அவளுக்கு இந்து முறைப்படி புரோகிதரை ஏற்பாடு செய்து ஓர் இந்து இளைஞனுக்கே திருமணம் செய்து அனுப்பியுள்ளனர்.

உடுப்பியைச் சேர்ந்த தொழிலதிபர் நாசரத் கடந்த ஜூன் மாதம் ரூ. 2 கோடியில் சித்தி விநாயகர் ஆலயம் அமைத்து ஹிந்துக்கள் வழிபடச் செய்துள்ளார். அதில் பணியாற்றும் அர்ச்சகர் தங்குவதற்காகத் தனியாக வீட்டையும் கட்டித் தந்துள்ளார்.

திருவனந்தபுரம் அருகே பாளையம் என்ற இடத்தில் 1962ம் ஆண்டு கிறிஸ்தவர்கள் அளித்த நன்கொடையில் கோபாலகிருஷ்ணன் என்ற இந்து இஸ்லாமியர்களுக்காகப் பள்ளிவாசலைக் கட்டித் தந்திருக்கிறார்.

பெரம்பூரில் வசித்த எலிசபெத் தாமஸ் என்ற பெண்மணி 30 ஆண்டுகளுக்கு முன் தனது இல்லத்தில் கர்த்தருக்கும் கண்ணனுக்கும் கோயில் எழுப்பினார்.

இத்தகைய நிகழ்வுகள் தமிழகத்திற்குப் புதிதல்ல. திருவரங்கன் சிலை மீது காதல் கொண்ட தில்லி பாதுஷாவின் மகள் திருவரங்கம் தேடி வந்ததும், அவரை வைணவர்கள் போற்றிய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. அதன் அடையாளமாகத்தான் திருவரங்கத்தில் துலுக்க நாச்சியார் என்ற தனி சந்நிதியே உள்ளது.

வட ஆர்க்காட்டுப் பகுதியில் திப்பு சுல்தான் ஆட்சியின்போது, நடராஜர் உருவம் பதித்த நாணயங்களை வடித்து புழக்கத்தில் விடப்பட்டன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வெள்ளம் சூழ்ந்தபோது, பாதிக்கப்பட்ட விநாயகர் கோயிலை இஸ்லாமிய இளைஞர்கள் சுத்தம் செய்தது வெளியானது.

இப்படி மத நல்லிணக்கம் சார்ந்த பல சம்பவங்கள் நாளுக்கு நாள் வேகமாக அதிகரிக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வெறுப்புப் பேச்சு, செயல், எண்ணமே முற்றிலும் ஒழிந்து போய்விடும். மதங்களை வெறுப்பது மாய்ந்து போய் நேசிப்பது அதிகரிக்கும்.

தேநீர்க் கோப்பையை தண்ணீர்க் கோப்பையாக மாற்றும் வழியை ஜென் குரு இளைஞனுக்கு உணர்த்திய வழியே சரியாகும்.

பாரதி வரிகளில் சொன்னால், "தீமையெலாம் ஒழிந்து போம்... திரும்பி வாரா"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+