கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளில் ரூ26,000 கோடி பயிர் கடன்கள் தள்ளுபடி- பாமகவின் வேளாண் நிழல் பட்ஜெட

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நிழல் பட்ஜெட்டை பாட்டாளி மக்கள் இன்று வெளியிட்டது. அதில், கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளில் ரூ26,000 கோடி பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றுள்ளது.

சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று அக்கட்சியின் வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டார். மொத்தம் 9 பக்கங்களைக் கொண்ட இந்த வேளாண் நிழல் நிதி அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்:

1. தமிழ்நாட்டில் வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 13 ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கைகளை பா.ம.க. தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தமிழக வரலாற்றில் முதன்முறையாக நடப்பாண்டு முதல் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்போவதாக தமிழக அரசு ஆளுநர் உரையில் அறிவித்துள்ளது. அதை கருத்தில் கொண்டு தமிழக அரசுக்கு வழிகாட்டும் வகையில் நடப்பாண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை கூடுதல் கவனத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

2. பாட்டாளி மக்கள் கட்சியின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் ஒரு முக்கிய நோக்கத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படுகிறது. 2021- 22ஆம் ஆண்டை வேளாண்மை மற்றும் வேளாண் கல்வி கட்டமைப்பு மேம்பாட்டு சிறப்பாண்டாக அறிவித்து, அதை மையக்கருவாகக் கொண்டு இந்த நிழல் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. வேளாண் கட்டமைப்பு மற்றும் வேளாண் கல்வி கட்டமைப்புக்கான ஏராளமான புதிய திட்டங்கள் இந்த நிழல் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

PMK releases 10th Shadow Agriculture Budget today

3. காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.

4. உழவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமித்து வைக்க உலர்த்தும் வசதியுடன் கூடிய பிரம்மாண்டக் கிடங்குகள் அமைக்கப்படும்.

5. கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் நெல் மூட்டைகளை சேமிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இனி மழையால் நெல் மூட்டைகள் சேதம் என்ற நிலை ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும்.

6. அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

7. உழவர்கள் தங்களின் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கு வசதியாக ஒவ்வொரு பகுதியிலும் விளையும் பொருட்களுக்கு ஏற்ப மதிப்புக் கூட்டுவதற்கான தொழில் நுட்பம் மற்றும் கட்டமைப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

8. மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தித் தரப்படும்.

வேளாண் பல்கலைக் கழகங்கள்- கல்லூரிகள்

9. சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள தமிழக அரசு தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் புதிய தோட்டக்கலை பல்கலைக் கழகம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 4 தோட்டக்கலைக் கல்லூரிகள் அதனுடன் இணைக்கப்படும்.

10. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பட்டுப்புழு வளர்ப்புப் பண்ணையில் புதிய பட்டுப்புழு வளர்ப்புக் கல்லூரி அமைக்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்.

11. தமிழ்நாட்டிலேயே சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் விளையும் மானாவாரி தக்காளி மற்றும் வாழை ரகங்களை மேம்படுத்தி புதிய ரகங்கள் ஆராய்ச்சி மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை போன்றவற்றால் ஈடுபட மேச்சேரியில் மானாவாரி பயிர்களுக்கு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

12. தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும். கோவையில் ஏற்கெனவே வேளாண் பல்கலைக் கழகம் உள்ள நிலையில், தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதியப் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும். திண்டிவனத்தில் வேளாண் கல்லூரி

13. நான்கு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்படும். ஒவ்வொரு பல்கலைக் கழகமும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட வேளாண் கல்லூரிகளுடன் இணைந்து, அப்பகுதிகளில் வேளாண்மை உற்பத்தி மற்றும் உழவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண உதவும்.

14. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் எண்ணெய்வித்து ஆராய்ச்சி மையத்தில் புதிய அரசு வேளாண் கல்லூரி அமைக்கப்படும். இது வடமாவட்டங்களில் அமைக்கப்படும் 2வது வேளாண் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அடுத்த கல்வி ஆண்டில் தொடங்கும்.

15. தஞ்சாவூரில் நெல் உற்பத்தியைப் பெருக்க நெல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்.

ரூ.47,750 கோடி நிதி ஒதுக்கீடு

16. வேளாண் துறைக்கு 2021&22 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.47,750 கோடி நிதி ஒதுக்க அரசு முடிவு செய்திருக்கிறது. இது 2021&22ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.11,982.71 கோடியுடன் ஒப்பிடும் போது, சுமார் 4 மடங்கு அதிகம்

PMK releases 10th Shadow Agriculture Budget today

17. வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,100 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.

18. நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.15,000 கோடி செலவிடப்படும்.

19. வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.7,000 கோடி செலவிடப்படும்.

20-. பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.13,650 கோடி செலவிடப்படும்.

வேலைவாய்ப்புகள்- நிதி உதவி திட்டம்

21. வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

22. கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டதாரிகளை ஒருங்கிணைத்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்படும். அவர்கள் அந்தந்தப் பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் சந்தைப் படுத்துதல் குறித்த ஆலோசனைகளையும், சேவைகளையும் வழங்குவார்கள். இதன் மூலம் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.

23. தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்தை பாதுகாப்பான முறையில் உறைகளில் அடைத்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலமாக, தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 2 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.

24. கிராமப்புற சுயஉதவிக் குழுக்கள் மூலம் ஆடுகள், கோழிகள், வான்கோழிகள், மீன்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும். பட்டதாரி இளைஞர் குழுக்கள் மூலம் முக்கிய நகரங்களிலும், சாலையோரங்களிலும் நவீன உணவகங்கள் அமைக்கப்பட்டு, சுயஉதவிக் குழுக்கள் வளர்க்கும் ஆடுகள், கோழிகள், மீன்கள் ஆகியவை சுவையாக சமைத்து வழங்கப்படும். இதனால், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

25. தமிழ்நாட்டில் சிறு&குறு உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் அதிகபட்சமாக ரூ.30,000மூலதன மானியம் வழங்கப்படும். மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.6 ஆயிரத்தையும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.36,000 வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு ரூ.16,000, இரு ஏக்கருக்கு ரூ.26,000, 3 முதல் 5 ஏக்கர் வைத்திருப்போருக்கு ரூ.36,000 என்ற அளவில் மானியம் கிடைக்கும்.

26. 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்துள்ள உழவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அடையாள உதவியாக ரூ.20,000 வழங்கப்படும்.

கடன் தள்ளுபடிகள்

27. கூட்டுறவு வங்கிகள் தள்ளுபடி செய்த உழவர்களின் பயிர்க்கடனை ஈடுகட்டுவதற்காக ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.5,000 கோடி தவிர மீதமுள்ள ரூ.7,110 கோடியும் நடப்பாண்டுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும். இத்தொகைக்கான வட்டியாக ரூ.248.85 கோடி கூடுதலாக அரசு வழங்கும்.

28. நடப்பாண்டில் ரூ.14,000 கோடி அளவுக்கு பயிர்க்கடன்களை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

29. கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு வட்டி எதுவும் வசூலிக்கப்படாது. அதுமட்டுமின்றி, தவணை தவறாமல் கடனை செலுத்தும் உழவர்களுக்கு 10%, அதிகபட்சமாக ரூ.10,000 மானியம் வழங்கப்படும்.

30. பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில், மூலதனக் கடன்கள் தவிர ரூ.12,000 கோடி பயிர்க்கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். இந்த தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு வட்டியுடன் சேர்த்து 3 சம தவணைகளில் தமிழக அரசு வழங்கும்.

31. தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியும், சர்க்கரை உற்பத்தியும் கடந்த 11 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது. 2020 & 21ஆம் ஆண்டில் தமிழகத்தின் சர்க்கரை உற்பத்தி 6.52 லட்சம் டன்னுக்கும் குறைவு ஆகும். இந்த நிலையை மாற்றி, அடுத்த 3 ஆண்டுகளில் கரும்பு சாகுபடி பரப்பை இருமடங்காக உயர்த்தும் நோக்குடன் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

32. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய ரூ.1,500 கோடி வரும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரு தவணைகளாக வழங்கப்படும். இதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக அரசு ரூ.1,500 கோடியை வட்டியில்லாக் கடனாக வழங்கும்.

33. சர்க்கரை ஆலைகளின் பிற கடன்களை சமாளிப்பதற்காக அவற்றுக்கு மத்திய அரசிடமிருந்து குறைந்த வட்டியில் தமிழக அரசு கடன் பெற்றுத்தரும்.

34. உழவர்களிடம் கொள்முதல் செய்யப்படும் 10% பிழிதிறன் கொண்ட கரும்புக்கு, கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4,500 வழங்கப்படும். சர்க்கரை ஆலைகளின் நிதிநிலை மேம்பட, மேம்பட கரும்புக்கான கொள்முதல் விலையும் உயர்த்தப்படும். இதை அரசு கண்காணிக்கும்.

இவ்வாறு பா.ம.க.வின் வேளாண் நிழல் நிதி அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+