கந்த சஷ்டி நடந்து முடிந்தது! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் மூலம் 4.26 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் தங்கம், வெள்ளி பொருட்கள் எவ்வளவு என்பது குறித்தும் கோயில் நிர்வாகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோயிலுக்குள் இருக்கும் உண்டியலில் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி, பொருட்களை செலுத்துவார்கள். பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணம், பொருட்கள் மாதம் தோறும் எண்ணப்படும்.

இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று, இன்று என 2 நாட்கள் நடந்தன.
கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ராமு முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் உழவாரப் பணி குழுவினர், மற்றும் கோவில் பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இரண்டு நாள் எண்ணப்பட்ட நிரந்தர உண்டியலில் இருந்து 4 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 507 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.
மேலும் 1279 கிராம் தங்கமும், 30857 கிராம் வெள்ளியும், 1421 வெளிநாட்டு பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
இந்த கோயிலில் அண்மையில்தான் கந்த சஷ்டி விழா நடந்து முடிந்தது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் சேயோன் என குறிப்பிடப்படுகிறது.
முருகனுக்கு கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கோயில்களில் இதுவாகும். இந்த கோயில் அமைந்துள்ள இடம் "திருச்சீரலைவாய்" என அழைக்கப்பட்டது. அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையில் உள்ள நிலையில் மற்ற 5 கோயில்களும் மலைக்கோயில்களாக உள்ளது. 157 அடி உயரம் கொண்ட இந்த கோயிலின் கோபுரம் கி.பி.17ஆம் நூற்றாண்டில் வீரபாண்டிய கட்டபொம்மனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஓர் இலிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்குத் தீபாராதனை நடக்கும்.
இப்படி சிறப்புகள் வாய்ந்த இந்த கோயிலில் பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி உள்ளிட்ட விழாக்கள் நடைபெறுகின்றன. திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலின் மேற்கு திசை ராஜகோபுரம், கந்த சஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அந்த வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாதாம்.












Click it and Unblock the Notifications