ஆடிப்பெருக்கு விழாவும் அபிஜித் நட்சத்திரமும்.. வெற்றியை பெருக்கும் நன்னாளை கொண்டாடி மகிழ்ந்த மக்கள்
சென்னை: ஆடிப்பெருக்கு நன்னாள் இன்று அற்புதமாக கொண்டாடப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் புனித நீராடி காவிரி, வைகை, தாமிரபரணி, பவானி, நதிகளை மக்கள் வழிபட்டுள்ளனர். நதிகளை கொண்டாடும் இந்த விழா பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகமாகிப் பெருக் கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பிக் காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியைப் பெண்ணாக - தாயாகப் பாவித்து வணங்கிப் போற்றும் ஆடிப்பெருக்கு எனும் மங்களவிழா தொன்று தொட்டு நிகழ்த்தப்படும் விழாவாகும். அனைவரையும் வாழ வைக்கும் அந்தக் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவே, "ஆடி பதினெட்டாம் விழா' கொண்டாடப்படுகிறது.

ஆடியின் மற்றொரு பெயர் ஆஷாட மாதம். இது மகர ராசி மண்டலத்திலுள்ள ஒரு நட்சத்திர மண்டல பெயர். ஒவ்வொரு மாத பெயரும் ஒரு நட்சத்திர மண்டல பெயரே ஆகும். அந்தந்த மாத பெயருக்கேற்ற நட்சத்திர மண்டலம் நமக்கு வானில் கண்ணுக்கு தெரியும்.
ஆடி 18 அன்று சூரியன் கடகத்தில் 18 பாகை கடந்திருக்கும். அதாவது கடக ராசியில் பூச நட்சத்திரத்தில் இருக்கும். எப்பொழுதும் சூரியனுக்கு ஏழாம் இடத்திலேயே பூமி இருக்கும் என்ற கூற்றின்படி, கடகத்தின் ஏழாமிடமான மகரத்தில் பூமி சுழலன்று கொண்டிருக்கும். அதாவது மகர ராசி மண்டலம், ஆடி மாதத்தில் நமது மேல் வானில் தெரியும்.
ஆடி 18 அன்று நமக்கு ஆஷாட நட்சத்திர மண்டலம் கண்களுக்கு தெரியும். ஆஷாட நட்சத்திர மண்டலத்தில்தான் அபிஜித் என்ற நட்சத்திரம் உள்ளது. அபிஜித் என்பது உத்திராடம் நான்காம் பாதமும், திருவோணம் முதல் பாதமும் இணைந்து உருவான நட்சத்திர மண்டலம். இது பார்ப்பதற்கு அம்பு போல காட்சி தரும். இதன் அறிவியல் பெயர் VEGA.
அபி - விருத்தி அல்லது பெருக்குதல், ஜித் - வெற்றி எனவே அபிஜித் என்றால் வெற்றியை பெருக்குவது எனப்பொருள். ஆதாவது அபிஜித் நட்சத்திர மண்டலம் நமக்கு கண்ணுக்கு மேல்வானத்தில் தோன்றும் கடைசி நாளே ஆடிப்பெருக்கு அல்லது ஆஷாட அபிஜித் ஆகும். இதன் பொருள் வெற்றியை பெருக்கும் நாள் ஆகும். சூரியன் இருக்கும் மாதம் கடகம் என்பதாலும் அது நீர் ராசி என்பதாலும், நீர்நிலைகளுக்கு அருகில் சூரியனை மையப்படுத்தி இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஜோதிடத்தில் அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் அனைவருக்கும் தெரியும். ஜோதிடத்தின் ஆரம்ப காலத்தில் 28 நட்சத்திரங்கள் வழக்கத்தில் இருந்து இருக்கிறது. விம்சோத்திரி தேசா கணிதத்திற்கு பிறகு 27 நட்சத்திரங்களாக சுருக்கப்பட்டு விட்டது. அபிஜித் நட்சத்திரம் மகர ராசியில் அதாவது உச்சிராசியில் உத்திராடம் நட்சத்திரத்தின் கடைசி நான்கில் ஒருபங்கும் திருவோணம் நட்சத்திரத்தின் முதல் பதினைந்தில் ஒரு பங்கும் அபிஜித் நட்சத்திரம் ஆகும்.
அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டம் மிக்கவர்கள். அன்பும், கண்டிப்பும் மிக்கவர். தலைமை பண்பும் சேவை மனமும் கொண்டவர்கள். தொழில் கெளரவம் மிக்கவர்கள், செய்யும் தொழில் மீது பற்றுக்கொண்டவர்கள். சுகமும் மகிழ்ச்சியும் மிக்கவர்கள். தாய், தந்தை இருவருக்கும் பிடித்த பிள்ளை. தாய், தந்தை இருவரின் குணமும் ஒருங்கே உள்ளவர். தாய், தந்தை இருவருவரின் சாயலும் உள்ளவர். கல்வி விசயத்தில் கவனம் தேவை, தடைபட வாய்ப்பு உண்டு. தொழிற்கல்வி சிறப்பு தரும். தர்ம குணம் உள்ளவர்கள். மருத்துவ துறையில் பணிபுரியும் வாய்ப்பு உண்டு.
தொடர் முயர்ச்சியாளர். அறிவாளிகளை உடன் வைத்து இருப்பவர். திருமணத்திற்கு பிறகு தந்தை அன்பு தடைபடும் வாய்ப்பு உண்டு. ஆய்வு மனபன்மை உள்ளவர். சுய தொழில் நன்மை தரும். உத்திராடம் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தை குறிக்கும். அதிக நட்பு வட்டாரம் இருக்கும். ஆன்மீக பற்றும் தன்னம்பிக்கையும் ஒருங்கே கொண்டவர்கள்.
நண்பகல் உச்சி நேரம் பகல் 11.45 முதல் 12.15 மணி வரையுள்ள நேரம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும். அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும். திங்கட்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் நல்ல வேலை கிடைக்கவும்,மேலதிகாரிகளின் தொந்தரவு தீரவும் வேண்டிக்கொள்ளலாம். அதே போல வீடு யோகம் அமையவும் கடன் தீரவும் செவ்வாய்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக்கொள்ளலாம். குழந்தை பாக்கியம் பெறவும், இழந்ததை மீட்கவும் புதன்கிழமை வேண்டிக்கொள்ளலாம். வியாழக்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டினால் வெளிநாடு செல்லும் யோகமும் கல்வியில் மேன்மையும் கிடைக்கும்.
திருமணம் நடைபெறவும் விரும்பியவரை திருமணம் செய்யவும் வெள்ளிக்கிழமைகளில் அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக்கொள்ளலாம். சனிக்கிழமை வேண்டினால் வம்பு வழக்குகளில் இருந்து வெற்றி கிடைக்கும். ஞாயிறு அபிஜித் முகூர்த்த வழிபாடு வினைகள் அகலவும் உடல் நலம் மேம்படவும் வேண்டிக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications