ஆடி சுவாதி.. அங்கே பாருங்க வெள்ளை யானை.. திருச்செந்தூரில் பக்தர்கள் ஆச்சரியம்.. புராண கதை தெரியுமா?
திருச்செந்தூர்: சுப்ரமணியசுவாமி கோவிலில் வெள்ளை யானை உலா வந்ததை பக்தர்கள் ஆச்சரியத்துடன் தரிசனம் செய்தனர். இன்று மட்டும் ஏன் யானை வெள்ளையாக இருக்கிறது என்று பக்தர்கள் பேசிக்கொண்டனர். ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கயிலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். அந்த விழா திருச்செந்தூரில் கொண்டாடப்படுகிறது.
ஆடி சுவாதி: ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்களில் சேரமான் நாயனார், சுந்தரர் ஆகியோரின் குருபூஜை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சேரமான் நாயனார், தான் இயற்றிய 'திருக்கயிலாய ஞான உலா' எனும் நூலை எழுதினார் என்றும் தன்னுடைய நண்பரான சுந்தரமூர்த்தி நாயன்மாருடன் யானையிலேறி திருக்கயிலாயம் சென்று ஆடி சுவாதியில் சிவனாரின் திருப்பாதங்களை இருவரும் சரணடைந்தனர் என்றும் சொல்கிறது புராணம்.

குருபூஜை விழா: ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் சேரமான் நாயனாருக்கும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கயிலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் உருவத்தில் காட்சி கொடுத்தார் என்றும் புராணம் சொல்கிறது. இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் ஆடி சுவாதியில் சுந்தரர், சேரமான் நாயனார் குருபூஜை விமரிசையாக நடைபெறும். திருப்பட்டூர் திருத்தலத்தில்தான் நம் தலையெழுத்தையே திருத்தி அருளும் பிரம்மா கோயில் அமைந்துள்ளது. வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோரது திருச்சமாதிகள் இங்கு இருக்கின்றன.
சிவனிடம் சரணடைந்த நாயன்மார்கள்: பிரம்மா குடிகொண்டிருக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகில், அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இங்கேதான் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சேரமான் நாயனார், தான் இயற்றிய 'திருக்கயிலாய ஞான உலா' எனும் நூலை எழுதினார். சேரமான் நாயனார் எழுதிய 'திருக்கயிலாய ஞான உலா'வைக் கண்டு சொக்கிப் போன சுந்தரர், அவரை அழைத்துக்கொண்டு திருக்கயிலாயம் சென்ற நிகழ்வுடன் தொடர்பு கொண்ட திருத்தலம் என்று திருப்பட்டூர் அய்யனார் கோயில் ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.
சிவதரிசனம்: தட்சிணயன புண்ணிய காலத்தின் முதல் மாதமான ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திர நாளில், சேரமான் நாயனாரும் சுந்தரரும் சிவ தரிசனம் செய்தார்கள். அப்போது சிவனார் இருவரையும் தன் திருவடியில் சேர்த்துக்கொண்டார் என சிவ புராணங்கள் விவரிக்கின்றன. எனவே, சேரமான் நாயனார், சுந்தரர் ஆகியோரின் குருபூஜை நாளாக ஆடி சுவாதி அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று ஜூலை 26ஆம் தேதி புதன்கிழமை, சேரமான் நாயனார், சுந்தரர் பெருமான் ஆகியோர் யானை வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இதேபோல், தமிழகத்தில் உள்ள பல சிவாலயங்களிலும் சுந்தரர் குருபூஜையும் சேரமான் நாயனார் குருபூஜையும் கோலாகலமாக நடைபெறும்.

திருச்செந்தூரில் வெள்ளை யானை: இதைப் போற்றும் விதமாக, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி சுவாதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் முடிந்த பிறகு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. கோயில் யானையின் உடல் முழுவதும் திருநீறு பூசி வெள்ளை நிறத்தில் யானையும், தங்கச் சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் கோவிலில் இருந்து புறப்பட்டு சன்னதி தெரு, உள் மாடவீதி மற்றும் ரதவீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் கோவிலை அடைவார்கள். இதன் பிறகு தொடர்ந்து கோவில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளை நிற யானை முன் சேரமான் நாயனாரும் மாணிக்கவாசகரும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.
கீழப்பாவூர் நரசிம்மர்: கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் கல்யாணத்தடை, கடன் தொல்லை, கோர்ட் வழக்கு, கடுமையான நோய் ஆகியவற்றுக்கான மிகச் சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகிறது. சுவாதி நட்சத்திரக்காரர்களுக்குரிய ஸ்தலமாகவும் திகழ்கிறது. நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும். திருவோணம், பிரதோஷம், வளர்பிறை சதுர்தசி தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. இன்றைய தினம் ஆடி சுவாதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.












Click it and Unblock the Notifications