ஆவணி மூலம் திருவிழா.. நரியை பரியாக்கி.. பரியை நரியாக்கி மதுரையில் சிவன் ஆடிய திருவிளையாடல்
மதுரை: ஆவணி மூலம் திருவிழாவின் முக்கிய அம்சமான சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நரியை பரியாக்கிய லீலை, பரியை நரியாக்கிய லீலை, புட்டுக்கு மண் சுமந்த லீலை என மதுரையில் சிவபெருமான் ஆடிய திருவிளையாடல்கள் அடுத்தடுத்து அரங்கேற உள்ளது.
நரியை பரியாக்கிய படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்து ஒன்பதாவது படலமாக அமைந்துள்ளது .மாணிக்கவாசகரின் இறை நம்பிக்கை, வாக்குறுதியை நிறைவேற்ற இறைவனார் நரிகளை பரிகளாக மாற்றி அழைத்து வருதல், அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகருக்கு பரிசளித்தல் ஆகியவற்றை இப்படலம் விளக்கிக் கூறுகிறது.

மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் சிவ பக்தரான வாதவூரர் அமைச்சராக இருந்தபோது மன்னனுக்குக் குதிரை வாங்கக் கீழைக் கடற்கரையை நோக்கித் திருப்பெருந்துறை வழியாகச் சென்று கொண்டிருந்தார். கீழைக் கடற்கரையில் அரேபியர்கள் ஏராளமான குதிரைகளைக் கப்பலில் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
அந்த நேரத்தில் குருந்தமரத்தடியில் குரு ஒருவர் சீடனுக்கு உபதேசம் செய்யும் ஒலி கேட்டு அதில் மயங்கி அங்கு சென்றார். இறைவனே குரு வடிவில் வாதவூரருக்கு உபதேசம் செய்ய வந்த வேலையை முற்றிலும் மறந்து இறைவனுக்கு அடிமையாகிப் போனார். குதிரை வாங்கக் கொண்டு வந்த பணத்தில் இக்கோயிலைக் கட்டி ஆவுடையார் என்று பெயரிட்டாராம். இதனால் மன்னனின் கோபத்திற்கு ஆளான வாதவூரரைக் காப்பாற்ற இறைவன் குதிரையோடு வருவேன் என்று வாக்களித்தார் என்கிறது புராணம்.
சிவபெருமான் குதிரைகளை அழைத்து வருவதாகக் கூறிய வாக்குறுதியை நம்பி மாணிக்கவாசகர் குதிரைகளின் வரவிற்காக மதுரையில் காத்திருந்தார். நாட்கள் நகர்ந்தன. குதிரைகள் வந்தபாடில்லை. அரிமர்த்தன பாண்டியனின் கோபம் அதிகமானது. மாணிக்கவாசகருக்கு தண்டனை தர உத்தரவிட்டான் பாண்டிய மன்னன். தண்டல்காரர்கள் அரச ஆணையை மாணிக்கவாசகரிடம் தெரிவித்தனர். அதற்கு அவர் 'எல்லாம் இறைவனின் விருப்பப்படி நடக்கும் என்று எண்ணி அவர்களுடன் சென்றார்.

அரச தண்டனையை பொருத்துக்கொண்ட மாணிக்கவாசகர் இறைவனிடம், தங்களுடைய திருவாக்கினை பொய்யாக்காமல் விரைவில் குதிரைகளுடன் மதுரைக்கு வாருங்கள் என்று வேண்டினார். ஆடி முடித்து ஆவணி மாதம் பிறந்து விட்டது. இறைவனார் மாணிக்கவாசகருக்கு உதவ நினைத்த சிவபெருமான், நந்தி தேவரிடம் "மாணிக்கவாசகன் குதிரைகளை வாங்கித் தராத குற்றத்திற்காக பாண்டியனின் சிறையில் அவதிப்படுகிறான். அவனுடைய துன்பத்தை போக்குவதற்காக நீயும் நம் பூதகணங்களும் காட்டில் உள்ள நரிகளை பரிகளாக்கி குதிரை வீரர்களாக மதுரையை நோக்கிச் செல்லுங்கள். மதுரைக்கு அருகில் செல்லும்போது யாம் குதிரை வீரனாக வந்து உங்களுடன் கலந்து கொள்வோம் என்று கூறினார்.
இறைவனின் ஆணையை ஏற்று நந்திதேவரும் பூதகணங்களும் நரிகளை குதிரைகளாக மாற்றி அதன்மீது அமர்ந்து மதுரையை நோக்கி விரைந்தனர்.
குதிரைகள் மதுரையை நோக்கி வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை சிறையில் இருந்து விடுவிக்கச் செய்தான். அவருக்கு பரிசுகள் பல வழங்கினான். குதிரைகளின் அணி வகுப்பினைக் காண மணிமண்டபத்திற்கு வந்தான். மக்கள் எல்லோரும் குதிரைகளைக் கண்டு ஆரவாரம் செய்தனர். பாண்டியனின் கண்களுக்கு மட்டும் குதிரைகள் தட்டுப்படவில்லை.
மாணிக்கவாசகர்தான் ஏதோ தந்திரம் செய்கிறார். ஆதலால்தான் தன் கண்களுக்கு குதிரைகள் புலப்படவில்லை என்று பாண்டியன் கருதி மாணிவாசகரை மீண்டும் சிறையில் அடைத்தான். சற்று நேரத்தில் குதிரைக் கொட்டிலுக்குள் ஆயிரக்கணக்கான குதிரைகள் மற்றும் குதிரைவீரர்கள் இருப்பதைக் கண்ட பாண்டியநாட்டு வீரர்கள் அரிமர்த்தனனிடம் தகவலை கூறினர். அங்கு வந்த பாண்டியன், குதிரை வீரனிடம் "உங்கள் குதிரைப் படைக்கு தலைவன் யார்?" என்று கேட்டான். அப்போது குதிரையில் வந்த சிவபெருமானைக் காண்பித்து, இவர்தாம் எம் தலைவர் என்று கூறினான்.
குதிரை மீது இருந்தவரைக் கண்ட மன்னன் தன்னையும் அறியாமல் வணங்கினான். அப்போது சிவபெருமான், குதிரையின் கயிற்றினை பிடித்து பாண்டியனின் கையில் கொடுத்து விட்டு, குதிரைகளை ஒப்படைத்தாகி விட்டது. இனி குதிரைப் பற்றிக் கேட்கக் கூடாது. இதுவே குதிரை பரிமாற்றத்தில் கடைப்பிடிக்கப்படும் வழக்கம் என்று கூறினார்.
குதிரை படைத்தலைவன் கூறியதை ஏற்றுக்கொண்ட அரிமர்த்தன பாண்டியன், சிவபெருமானுக்கு வெண்துண்டினைப் பரிசளித்தான். அதனை தனது தலையில் கட்டிக் கொண்டு அங்கிருந்து தம் பூதகணங்களோடு புறப்பட்டார் சிவபெருமான். குதிரை வாங்கி வந்த மாணிக்கவாசகருக்கு பரிசுகளை அரிமர்த்தன பாண்டியன் வழங்கி அவரை அவருடைய இல்லத்திற்கு வழி அனுப்பி வைத்தான். மாணிக்கவாசகரும் பாண்டியனின் பரிசுகளை தம் சுற்றத்தாருக்கு பகிர்ந்தளித்தார். கடவுளை நம்பினார் கைவிடப்படார் என்பதே நரியை பரியாக்கிய படலம் கூறும் கருத்தாகும்.

அன்றைய தினம் இரவே குதிரைகள் எல்லாம் நரிகளாக மாறி காட்டுக்குள் ஓடிப்போனது. இதைக்கண்ட அரிமர்த்தனன் மாணிக்கவாசகரைத் தண்டித்தான். வெற்று உடம்புடன் நண்பகலில் வைகை ஆற்று மண்ணில் மாணிக்கவாசகரை படுக்க வைத்தனர். மாணிக்கவாசகர் ஆற்றுமண்ணின் சூடு தாங்காமல் அலறித் துடித்தார். "இறைவா, இது என்ன சோதனை?. என்னைக் காப்பாற்றுங்கள்" என்று உருகினார்.
மாணிக்கவாசகரின் குரல் கேட்டு மனம் உருகிய இறைவன் வைகையில் வெள்ளத்தை பெருக வைத்தார். மாணிக்கவாசகர் இருந்த இடத்தில் மட்டும் வெள்ளம் வராமல் தண்ணீராக மட்டும் வைகை ஓடியது. நேரம் செல்லச் செல்ல வைகையில் வெள்ளம் கரையை உடைக்கத் தொடங்கியது. வைகை கரையை அடைக்க இறைவனே கூலி ஆள் போல வந்து புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட லீலையும் தொடர்ந்து நடைபெறுகிறது. தனது பக்தர்களுக்காக மதுரையில் இறைவன் ஆடிய திருவிளையாடல்கள் அற்புதமானவை. இன்றைய தினம் நரியை பரியாக்கிய லீலை நடைபெறுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications