Arani ஜூலை 16ல் ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்! ஆடித் திருவிழா எப்போது?
ஆரணி: ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் மற்றும் 52 ஆவது ஆடி வெள்ளி பெருவிழா ஜூலை 16ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீவேம்புலி அம்மன் திருக்கோயில். இந்த அம்மனை கோட்டை மைதானத்தில் காவலர் விடுதி அருகே வேப்பமரத்தடியில் திரிசூலம் ஏந்தியபடி பல ஆண்டுகளாக வழிப்பட்டு வந்தனர் என வரலாறு சொல்கிறது.

ஆரணி நகர காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த கோவிந்தசாமி, திரிசூலம் உள்ள இடத்தில் பீடம் அமைக்கலாம் என கூறினாராம். இதையடுத்து காவலர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கோயில் கட்ட ஏற்பாடு செய்தனர். இதன் பிறகு, கோவிந்தசாமியின் கனவில் தோன்றிய அம்மன், இந்த கோயிலுக்கு வேம்புலியம்மன் என பெயரிடுமாறு கூறியதாம்.
அன்று முதல் வேம்புலியம்மன் ஆலயம் என பெயரிட்டு 1973 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 1974 ஆம் ஆண்டு விநாயகர், நவக்கிரக சிலைகள் அமைக்கப்பட்டன. கோயிலை கட்டி 12 ஆண்டுகளான நிலையில் 1985 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

ஆரணி வேம்புலியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா கோலாகலமாக நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திற்கு அடுத்தபடியாக இந்த திருவிழா முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஆடி மாதம் வெள்ளிக்கிழமை கமண்டல நாகநதி ஆற்றிலிருந்து வேம்புலியம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பம்பை, ஒயிலாட்டம், கரகாட்டம், நாகஸ்வரம், இசைக் கச்சேரி, தவில், செண்டை மேளம் என முழங்க, வேம்புலியம்மன் ஆரணி முழுவதும் புஷ்பபல்லக்கில் வீதி உலா வருவார்.
மகா கும்பாபிஷேக விழா ஜூலை 16ஆம் தேதி புதன்கிழமை நடைபெறும் நிலையில் ஸ்ரீசக்தி அம்மா, பாலமுருகனடிமை சுவாமிகள், சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது.
வரும் ஜூலை 14 ஆம் தேதி திங்கள்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறும். ஜூலை 15 ஆம் தேதி அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

அது போல் 16ஆம் தேதி காலை 7மணிக்கு விசேஷ ஸந்தி, காலை 9 மணிக்கு விசேஷ திரவிய ஹோமம், காலை 9.30 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, காலை 10 மணிக்கு பரிவாக ஆலயங்கள், விமானங்கள், முகப்பு கோபுரம், ராஜகோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இந்த கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. ஜூலை 17ஆம் தேதி ஸ்ரீவேம்புலியம்மன் திருவிளக்கு 508 பூஜை நடைபெறுகிறது. அது போல் ஜூலை 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் புஷ்பப்பல்லக்கு நிகழும்.
அது போல் அடுத்த நாளான 19 ஆம் தேதி எஸ்பிபி சரண், சியாமளா மகேஷ், கிரிஷாங் ஆகியோரின் இசைக் கச்சேரி நிகழ்கிறது. ஆண்டுதோறும் ஆடி திருவிழாவின் போது இசைக் கச்சேரி நடத்தப்படும். அப்போது பிரபல பாடகர்கள், இசையமைப்பாளர்கள் அழைக்கப்படுவது வழக்கம்.












Click it and Unblock the Notifications