விஷத்தன்மை கொண்ட எருக்க இலையில் தயிர் சாதம் பிரசாதம்.. பிராணம் காக்கும் பிராணநாதேஸ்வரர்
தஞ்சை: தஞ்சை மாவட்டம் பிராணநாதேஸ்வரர் கோயிலில் எருக்க இலையில் தயிர் சாத பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. இந்த இலை அதிக விஷத்தன்மை கொண்டது என சொல்லப்படுகிறது. ஆனால் இதில் கொடுக்கப்படும் பிரசாதத்தை உண்பதால் எந்த பிரச்சினைகளும் ஏற்படுவதில்லை.
தஞ்சை மாவட்டம் திருமங்கலக்குடியில் பிராணநாதேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் தாயார் பெயர் மங்களாம்பிகை, இங்குள்ள தல தீர்த்தம் மங்களதீர்த்தம். இங்குள்ள விநாயகர் மங்கல விநாயகர் என அழைக்கப்படுகிறது.

எனவே இந்த தலமே மங்கல ஷேத்திரம் ஆகும். இங்கு சிவப்பெருமான் சுயம்புவாக காட்சியளிக்கிறார். இங்குள்ள நடராஜர் சன்னதியில் மரகத லிங்கம் உள்ளது. இந்த கோயிலில் திருக்கல்யாணமே இரவு நேரத்தில்தான் நடைபெறுகிறது. இது சோழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும்.
சிவப்பெருமானை குளிர்விக்க சந்திரனும் சூரியனும் தீர்த்தங்களாக இருக்கிறார்கள். சூரியனார் கோயிலுக்கு செல்லும் முன்பு இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும். இதனால் நவகிரக தோஷம் நிவர்த்தியாகிறது. திருமணமான பெண்கள் அம்பாள் கையிலிருந்தே திருமாங்கல்ய கயிறு வாங்கி அணிந்து கொள்வது விசேஷம்.
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், மாங்கல்ய தோஷம், எதிரிகளின் பயம், திருட்டு பயம் உள்ளிட்டவைகளுக்காகவும் பக்தர்கள் இந்த தலத்தில் வழிபாடு நடத்துகிறார்கள். தொடர்ந்து 11 ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கும் 12.30 மணிக்குள்ளும் வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.
பொதுவாக எருக்க இலை அதிக விஷத்தன்மை கொண்டது என்பார்கள், அதன் பால் கண்களில் பட்டால் கூட பார்வையே பறிபோகும் அபாயம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட எருக்க இலையில் தயிர் சாதம் கொடுத்து அதை பக்தர்கள் சாப்பிடும் போது அவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. பித்ரு தோஷம் நீங்க இந்த தயிர் சாதம் நைவேத்யம் செய்யப்படுகிறது.
மரகதலிங்கத்திற்கு செய்யப்படும் அபிஷேக நீரை குடித்தால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். தீர்க்க சுமங்கலி வரம் தரும் மங்களாம்பிகைக்கு தனிச் சன்னதி உள்ளது. அம்பாளின் வலது கையில் எப்போது தாலி கயிறு இருந்து கொண்டே இருக்கும். நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இங்கு வணங்கும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாக வேண்டும் என கோயிலை கட்டிய குலோத்துங்க சோழனின் மனைவியும் மந்திரியும் வேண்டிக் கொண்டார்கள் என்பது நம்பிக்கை.












Click it and Unblock the Notifications