அரசு வேலை.. கை நிறைய சம்பளம்... வேலையில் புரமோசன்.. கை கொடுக்கும் ஆன்மீக பரிகாரம்
சென்னை: அரசு வேலை வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். குரூப் 4 போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி விட்டது. அரசு வேலையோ, தனியார் நிறுவன வேலையோ கை நிறைய சம்பளத்தில் வேலையும் புரமோசனும் வேண்டும் என்று நினைப்பவர்கள் சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.
வேலை வேண்டும்: படித்து முடித்து விட்டு பலரும் இன்றைக்கு வேலைக்காக காத்திருக்கின்றனர். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். அரசு வேலை வேண்டும் என்று தேர்வு எழுதி விட்டு காத்திருப்பவர்கள் இருக்கின்றனர். போட்டி தேர்வுக்காக படிக்கும் அதே நேரத்தில் நம்முடைய ஜாதகத்தையும் பார்த்து அதற்கேற்ப சில ஆன்மீக பரிகாரங்களையும் செய்ய வேண்டும்.

ஜாதகத்தில் தொழில் ஸ்தானம்: ஜாதகத்தில் கர்மஸ்தானம் எனப்படும் 10ஆம் வீடு தொழில் ஜீவனஸ்தானம் ஆகும். 6ஆம் வீடு என்பது நாம் செய்யும் தொழிலைக் குறிக்கும் வீடாகும். 7ஆம் வீடு என்பது வியாபாரத்தைக் குறிக்கும். 2ஆம் வீடு என்பது தனஸ்தானம் நமக்கு வேலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை குறிக்கும். 11ஆம் வீடென்பது லாபஸ்தானம். ஆக 2, 6, 10, 11ஆம் வீடுகளைக் குறிக்கின்ற தசா, புக்தி, அந்தரத்தில் வேலை கிடைக்கும்.
என்ன வேலை கிடைக்கும்: ஒருவரின் ஜாதகத்தில் 10 ஆம் இடமான ஜீவனஸ்தானத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இருந்தால் சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும். சனி இருந்தால் வேலை கிடைக்கவே தாமதமாகும். வேலை கிடைத்தாலும் செய்யும் வேலைக்கு ஏற்ப சம்பளம் கிடைக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுக்கு மிகவும் காத்திருக்க வேண்டும். செவ்வாயிருப்பின் செய்யும் தொழிலில் பிரச்சனைகள், சண்டை, சச்சரவு போன்றவை இருக்கும்.
சூரிய வழிபாடு: நல்ல வேலை கிடைக்க வேண்டும் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, சூரிய நமஸ்காரம் செய்ய மறந்துவிடாதீர்கள். அரசு வேலையும் நிரந்தர வருமானத்தை நிலையான வேலை வாய்ப்பை தரக்கூடிய சக்தி சூரிய பகவானுக்கு உண்டு. படித்து முடித்து விட்டு வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்படுபவர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.
அரசு வேலை நிச்சயம்: சூரிய பகவானை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு நிச்சயமாக நல்ல வருமானத்தில் வேலை கிடைக்கும். தேவைக்கு ஏற்ப மாதம்தோறும் நிலையான வருமானம் கைக்கு வந்து கொண்டே இருக்கும். பணப்பற்றாக்குறை என்ற வார்த்தைக்கு இடம் இல்லை. நல்ல வேலை கிடைக்கவும், அரசு வேலை குறிப்பாக காவல்துறை, ராணுவம், தீயணைப்புத்துறையில் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்கிழமை விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கலாம்.
நிரந்தர வேலை: அரசு வேலையும் கிடைத்த வேலை நிரந்தரமாக தங்கவும், வேலையில் இருக்கும் பிரச்சினைகள் தீரவும் முருகப்பெருமானை வழிபடலாம். அதே போல நல்ல வேலை கிடைக்க அம்மன் கோவிலுக்கு சென்று மனம் உருகி அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம். புதன்கிழமை, வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாட்டிற்கு உரிய நாள்.
அம்மன் கோவில் வழிபாடு: மதுரை மீனாட்சி அம்மன் பச்சைப்புடவைக்காரி. அதுபோல ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று பச்சை புடவை சாற்றி வழிபட வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். தகுதிக்கேற்ற வேலை இல்லையே ஏதோ கிடைத்த வேலையை செய்கிறோமே என்று மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு அம்மனின் அருளினால் நல்ல வேலை கிடைக்கும் கை நிறைய சம்பளமும் கிடைக்கும்.
அனுமன் வழிபாடு: அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அனுமனை தொடர்ந்து வழிபடுவதோடு அனுமன் சாலிசாவையும் தொடர்ந்து படிக்க வேண்டும். அனுமன் வால் வரைந்து அதில் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபட அரசு வேலைக்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
கிரக தோஷங்கள்: ஒரு சிலரது ஜாதகத்தில் அரச கிரகங்கள் சூரியன், செவ்வாய் மறைவு ஸ்தானத்தில் இருக்கும். இந்த தோஷம் இருந்தாலும் வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படும். அதற்கு ஆன்மீக பரிகாரம் உள்ளது. சிறிய துண்டு படிகார கல், மூன்று மிளகு, இரண்டு சிறிய துண்டு பட்டை எடுத்து வலது கையில் வைத்து மூடிக் கொள்ளவும். பின்னர் உங்கள் தலையை சுற்றி 21 முறை சுற்றி கொள்ளுங்கள். பிறகு அந்த பொருளை கால் படாத இடத்தில் அல்லது ஓடும் நேரில் போடவும்.
பறவைகளுக்கு உணவு: காகங்கள், புறா, கிளி போன்ற பறவைகளுக்கு தினமும் தானியங்களை கொடுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் அரசு வேலை வாய்ப்புகள் உங்களுக்கு விரைவில் கைக் கூடும். இறைவனின் ஆசிர்வாதமும் ஜீவராசிகளுக்கு நீங்கள் செய்யும் தானமும் அரசு வேலைக்கான வாய்ப்பை உங்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும்.
நம்பிக்கை அவசியம்: போட்டித் தேர்வுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளது எனவே நம்பிக்கையுடன் இதில் ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்யவும். ஒருவாரம் மட்டும் செய்து விட்டு விட்டு விட வேண்டாம் குறைந்தது 5 வாரங்கள், 7 வாரங்கள் பரிகாரம் செய்வது நல்லது.












Click it and Unblock the Notifications