திருப்பதியில் அங்கப்பிரதட்சிணம் செய்ய வேண்டுதலா? சரியா 10 மணிக்கு ரெடியா இருங்க!
திருப்பதி: திருமலை திருப்பதியில் டிசம்பர் மாதம் அங்கப்பிரதட்சிணம் செய்ய வேண்டுமானால் அதற்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டிக்கெட்டுகளை பெற்று கொண்டு நீங்கள் ஏழுமலையானுக்கு அங்கப்பிரதட்சிணம் எனும் வேண்டுதலை நிறைவேற்றி கொள்ளலாம்.
திருப்பதியில் பல்வேறு சேவைகள், தரிசனங்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பே முன் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயம். அந்த வகையில் நேற்றைய தினம் ஆன்லைனில் பல்வேறு சேவைகளை கண்டு களிப்பதற்கான முன்பதிவு நடந்தது.

அது போல் இன்றைய தினம் ஸ்ரீவாரி கோயிலில் அங்கப்பிரதட்சிணம் செய்ய வேண்டுவோர் அதற்கான முன்பதிவு டிக்கெட்டை காலை 10 மணிக்கு பெறலாம். இது டிசம்பர் மாதம் அங்கப்பிரதட்சிணம் செய்வதற்கான டிக்கெட்டாகும்.
பணக்கார கடவுளான ஏழுமலையான் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களும் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த கோயில் செல்வ செழிப்பிலும் எந்த குறையும் இல்லாமல் கணக்கே தெரியாத அளவுக்கு சொத்துகளை கொண்டுள்ளன.
இந்த கோவிலுக்கு நாள்தோறும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருமானமாக கிடைக்கிறது. மேலும் வைர, தங்க, வெள்ளி நகைகளும் காணிக்கையாக கிடைக்கின்றன. பல பக்தர்கள் தங்களின் சொத்துக்களையும் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்து விடுகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. அதன்படி ஜூலை 18ஆம் தேதி காலை 10 மணி முதல் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டது. அன்று மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டனர்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஜூலை 22ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதே சேவைகளுக்கு நேரடியாக பங்கேற்காமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் 22 ஆம் தேதி மாலை 3 மணிக்கு டிக்கெட் வெளியிடப்பட்டது. கல்யாணோத்சவத்திற்கு 2 பேருக்கு ரூ 1000 டிக்கெட்டாகும்.
டிசம்பர் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் ஜூலை 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அது போல் வாணி அறக்கட்டளைக்கு ரூ 10 ஆயிரம் நன்கொடை செலுத்தி விஐபி தரிசன டிக்கெட்டுகள் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான டிக்கெட்டுகள் 23ம் தேதி மாலை 3 மணிக்கும், டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசன ரூ.300 டிக்கெட்டுகள் செப்டம்பர் 24-ம்தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்படும்.
திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் முன்பதிவு 24ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். எனவே பக்தர்கள் தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகள், அறைகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை 3 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டியது அவசியமானது.












Click it and Unblock the Notifications