Mahalaya Amavasya 2025: மகாளய அமாவாசை என்றால் என்ன? புரட்டாசி மாதத்தில் வருவதற்கு என்ன சிறப்பு?
சென்னை: இன்று மகாளய அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை மிகவும் விசேஷமானதாகும். இந்த அமாவாசை காலங்களில் தர்ப்பணம் செய்தால் நமது முன்னோர்களின் ஆசியை பெறலாம். இப்படிப்பட்ட மகாளய அமாவாசை என்றால் என்ன என்பதை பார்க்கலாம்.
ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் தொடங்கி அடுத்து வரும் 15 நாட்களும் "மகாளய பட்சம்" என அழைக்கப்படுகிறது. இந்த மகாளய பட்ச காலத்தின் நிறைவாக வருவதே மகாளய அமாவாசையாகும். சூரியன் கன்னி ராசிக்கு செல்லும் புரட்டாசி மாதம், எமதர்மராஜன் நமது முன்னோர்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்ச்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள்.

இந்த 15 நாட்களில் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தினரை காண பூமிக்கு வருவதாக சொல்வதுண்டு.
எனவேதான் ஒவ்வொரு ஆண்டும் முன்னோர் இறந்த திதி நாளை கணக்கில் கொண்டு திதி கொடுத்து வருகிறோம். இந்த 15 நாட்களும் முன்னோர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களை செய்ய வேண்டும்.
மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் அதில் முக்கியமானது ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசைதான். இந்த மகாளய பட்சமான 15 நாட்களில் நம் முன்னோர்கள் திதி வந்தால் அன்றைய தினம் காக்கைக்கு உணவு வைப்பது நல்லது. எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம். அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திபடுத்தியதாகவும் கருதுகிறார்கள்.
ஆண்டுதோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், மறந்தவர்கள், இந்த மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். இந்த அமாவாசையில் காலை 6 மணி முதல் 12.30 மணி வரை திதி கொடுக்கலாம்.
பொதுவாக திதி, தர்ப்பணம் என்றாலே காலை வேளைகளில் கொடுப்பது சரியாக இருக்கும். இறந்தவர்களின் படங்களை துடைத்து, மஞ்சள் குங்குமமிட்டு, பூமாலை போட்டு படையலிட்டு வழிபடலாம்.
பித்ருக்கள் வழிபாடு என்றாலே கருப்பு எள்ளும் தர்ப்பையும்தான் முக்கியம். அவர்களுக்கு எள்ளும் தண்ணீரையும் இரைத்து வழிபடுவதுண்டு. நீர் நிலைகளிலோ அல்லது வீடுகளிலோ திதி கொடுக்கலாம். உணவு தானம் செய்வது நல்லது. பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பதும் பசு வழிபாடும் முக்கியமானதாகும்.
மகாளய அமாவாசை வழிபாட்டால் தலைமுறை தலைமுறையாக இருந்த அனைத்து தடைகளும் நீங்கும். இதனால் திருமண தடை நீங்கி, குழந்தை பாக்கியம், தொட்ட காரியங்கள் நிறைவேறுவது என அனைத்தும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications