மகா சிவராத்திரி நாளில் பூஜை செய்ய நல்ல நேரம்.. மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்
சென்னை: ஈசனுக்கு உகந்த ராத்திரி மகா சிவராத்திரி. விடிய விடிய கண் விழித்து ஈசனுக்கு குளிர குளிர நடைபெறும் அபிஷேகத்தை கண்ணார தரிசனம் செய்ய வேண்டும். எந்த நேரத்தில் பூஜை செய்யலாம் எத்தனை கால அபிஷேகத்தை தரிசனம் செய்ய வேண்டும். மகாசிவராத்திரி நாளில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
மகா சிவராத்திரி: புரட்டாசி மாதத்தில் அம்பிகையை கொண்டாட 9 நாட்கள் நவராத்திரி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அதே போல சிவபெருமானுக்கு மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாளில் மகா சிவராத்திரி பண்டிகையை கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 8ஆம்தேதி வெள்ளிக்கிழமை பிரதோஷத்துடன் கூடிய சிறப்பான மகா சிவராத்திரியாக கூடி வந்துள்ளது.

கண் விழித்து விரதம்: ஒருநாள் விரதம் என்றாலும் கடுமையான விரதமாக இருக்க வேண்டும். உண்ணாமல் உறங்காமல் இருக்கும் விரதம். மனிதர்களின் விழிப்புணர்வுக்கான விரதம்தான் மகாசிவராத்திரி விரதம். மகா சிவராத்திரி தினத்தில் காலையில் எழுந்து சூரிய உதயத்துக்கு முன்பு குளித்திருக்க வேண்டும். காலை 6 மணிக்கு முன்பு வீட்டு பூஜை அறையில் தீபமேற்றி நெற்றி நிறைய விபூதி பூசி 'ஓம் நமசிவாய' 'சிவாய நம' எனும் மந்திரத்தை உச்சரித்து விரதத்தை தொடங்க வேண்டும்.
என்ன சாப்பிடலாம்: இந்த விரதத்தை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை காலை 6 மணி வரை அதாவது சிவபெருமானின் நான்காம் கால பூஜை நிறைவடையும் வரை கடைப்பிடிக்க வேண்டும். எதுவும் உண்ணாமல் உபவாசம் இருந்து விரதம் முடியும்போது சிவபெருமானுக்கு படைக்கும் பிரசாதத்தை சாப்பிட வேண்டும். இதன்மூலம் விரதத்தை முடித்து கொள்ளலாம். இடைப்பட்ட காலத்தில் தண்ணீர் மட்டும் பருகலாம். உடல்நிலையை பொறுத்து விரதத்தை மேற்கொள்வதை கடைப்பிடிப்பது நல்லது. இதில் எந்த தவறும் இல்லையாம்.
நான்கு கால பூஜை: முதல் கால பூஜை இன்று இரவு 7.30 மணிக்கு துவங்கும். 2ம் கால பூஜை இரவு 10.30, மூன்றாம் கால பூஜை இரவு 12 மணி, நான்காம் கால பூஜை அதிகாலை 4.30 மணிக்கு துவங்கும். இதன்மூலம் முதல் கால பூஜையை இரவு 7.30 மணியிலிருந்து இரவு 10.30 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். இதேபோல்தான் பிற கால பூஜையையும் கணக்கிட்டு செய்யலாம்.
லிங்கோத்பவ காலம்: குறிப்பாக இரவு 11.30 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை சிவபெருமானை வழிபடுவது மிகமிக சிறப்பான காலமாக கூறப்படுகிறது. இதை பக்தர்கள் கடைப்பிடிக்கலாம். ஏனென்றால் இந்த நேரத்தில்தான் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமானை வழிபட கூடிய நேரமாகும். 'லிங்கோத்பவ காலம்' எனும் இந்த நேரத்தை தவற விடக்கூடாது.
வீட்டில் பூஜை செய்வது எப்படி: எல்லோராலும் கோவிலுக்கு செல்ல முடியாது. கோவிலில் சிவனுக்கு நடைபெறும் அபிஷேகத்தை காண முடியாதவர்கள் நம்முடைய வீட்டிலேயே பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து இரவு முழுவதும் சிவபுராணம் படிக்கலாம். நமச்சிவாய மந்திரத்தை சொல்லி வில்வ இலையால் அர்ச்சனை செய்யலாம்.
செய்யக்கூடாத தவறுகள்: மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்பவர்கள் முதல்நாளே பூஜை அறையை சுத்தம் செய்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்க்கக் கூடாது. அசைவ உணவு சாப்பிடக்கூடாது. தாம்பத்ய உறவில் ஈடுபடக்கூடாது. விரதம் இருப்பவர்கள் இறை சிந்தனையோடு சிவ நாமத்தை உச்சரித்து விரதம் இருந்தால் சிவபெருமானின் பரிபூரண அருள் நிச்சயம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications