சொத்து, வீடு நிலம் விவகாரம்.. 3 மாதத்தில் குட் ரிசல்ட்.. தீர்வு காண இந்த கோவிலுக்கு அவசியம் போங்க!
திருச்சி: நிலம்- மண்- பூமி தொடர்பான அனைத்துவிதமான நெருக்கடிகள், சிக்கல்கள்களில் இருந்து நம்மை விடுவித்து அருள்தரவும் ஒரு தெய்வம் இருக்கிறது.. இந்த பிரச்சனைகளுக்காவே பிரத்யேகமான அர்ச்சனை, அபிஷேகம் நடைபெறும் கோவிலும் இருக்கிறது என்பது நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.
திருச்சி மாவட்டம் மண்ணச்சல்லூர் நகரத்தில் இருக்கிறது அருள்மிகு பூமிநாதர் திருக்கோவில். இந்த திருத்தலத்தின் முழுமையான பெயர், " அருள்மிகு அறம் வளர்த்த நாயகி தர்மசம்வர்த்தினி உடனுறை பூமிநாத சுவாமி" ஆலயம். மிக பிரம்மாண்ட பேராலயம் என்பதாக இல்லை.. சாதாரணமாக சிறு நகரத்தில் உள்ள கோவில்தான்.

நிலம்- மண்- பூமி தொடர்பான மொத்தம் 16 பிரச்சனைகளைக் குறிப்பிட்டு அவற்றை நீக்கும் சக்தி படைத்த ஆலயமாக போற்றப்படுவதுதான் அருள்மிகு பூமிநாதர் திருக்கோவில்.
என்ன தோஷங்கள் நீங்கும்?
வீடு கட்டும் யோகம்
வீட்டு எண் யோகம்
வீடு- மனை- நிலம் விற்கும் யோகம்
தோஷம்- பில்லி- சூனியம்- ஏவல்- எந்திரம், தந்திரம்- மந்திரம்- தோஷம்
தென்மூலை உயர சிக்கல்
வடமூலை உயர பிரச்சனை
சொத்து பாகப் பிரச்சனை
ஜன்ம சாப- பாப தோஷம்
வாஸ்து தோஷம்
வீடு-மனை- நிலம் வாங்கும் யோகம்
பழைய வீடு புதுப்பித்தல் யோகம்
வீடு கண் திருஷ்டி தோஷம்
ஆகியவற்றுக்காக இந்த திருத்தலத்துக்கு பக்தர்கள் படையெடுக்கின்றனர்.
மண் வழிபாட்டு முறை: அருள்மிகு பூமிநாதர் திருக்கோவிலில் காலந்தோறும் மண்வழிபாட்டு முறை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த வழிபாட்டு முறை காலந்தோறும் மாறவும் செய்கிறது.
எங்கிருந்து மண் எடுக்க வேண்டும்?
பொதுவாக நாம் வீடு கட்டுகிற- நிலம் வாங்குகிற- சொத்து பிரச்சனைக்குரிய- விடு புதுப்பிக்க வேண்டிய இடத்தின் வடகிழக்கு மூலையில்- ஈசானிய- ஜல- சனி மூலையில் மூன்று கை பிடி மண்ணை ஒரு புதிய மஞ்சள் துணியில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மஞ்சள் துணி மண்ணை அருள்மிகு பூமிநாதர் திருக்கோவிலில் வைத்து வழிபாடு செய்வதுதான் மணி வழிபாட்டு முறை.
வன்னி மரத்தடி மண்
முன்னர், இப்படி கொண்டு வரும் மண்ணை, கோவிலில் பூஜை செய்து அங்கு வன்னிமரத்தடியில் கொட்டிவிட்டு அந்த மண்ணை நாம் வீடு கட்டுகிற- நிலம் வாங்குகிற- பிரச்சனைக்குரிய சொத்து உள்ள இடத்தில் மீண்டும் கொண்டு போய் பூமிக்கு அடியில் புதைத்து வைத்தால் அனைத்தும் சுகமாக நடந்துவிடும் என்கிற நடைமுறை இருந்தது.

மண் அர்ச்சனை முறை
தற்போது, மஞ்சள் துணியில் எடுத்து வரும் மண்ணை அருள்மிகு பூமிநாதர் திருத்தலத்துக்கு கொண்டு வர வேண்டும். இந்த கோவில் முன்பாக உள்ள, தேவஸ்தானத்துக்கு சொந்தமான கடையில் தரப்படுகிற அர்ச்சனை தட்டுடன் மண் உள்ள மஞ்சள் துணியையும் வைத்து கோவிலுக்குள் எடுத்துச் செல்ல வேண்டும். மண் அர்ச்சனைக்கு ரூ100 கட்டணம் செலுத்தி அர்ச்சனை சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பின்னர் அருள்மிகு பூமிநாதர் சன்னிதிக்கு சென்று அங்கு அர்ச்சகரிடம் பூஜிக்க வேண்டிய மண் உள்ள அர்ச்சனை தட்டை கொடுத்து நமது குடும்பத்தாரின் நட்சத்திரங்களை சொல்ல வேண்டும். நாம் கொடுக்கும் மண், அருள்மிகு பூமிநாதரின் காலடியில் வைத்து பூஜிக்கப்பட்டு பின்னர் நம்மிடம் அர்ச்சகர் திருப்பிக் கொடுக்கிறார்.
இந்த மண்ணை கையில் எடுத்துக் கொண்டு பூமிநாதர் திருக்கோவிலை ஒரு முறையும் அங்குள்ள நவக்கிரகங்களை 9 முறையும் சுற்றி வலம் வரவேண்டும் என்கிறார் அர்ச்சகர்.
மண் வழிபாட்டு முறையில் செய்ய வேண்டியது என்ன?
மேலும் இந்த பூஜித்த மண்ணை முதல் நாள் வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும்; இதன் பின்னர் அடுத்த 5 நாட்களுக்குள் எந்த இடத்தில் இருந்து மண்ணை எடுத்தோமோ அந்த இடத்தில் கொண்டு போய் வைக்க வேண்டும். இப்படி வைப்பதற்கும் ஒரு கால நேரம் இருக்கிறது. அதாவது பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரைக்குள் அல்லது அன்றைய நாளின் நல்ல நேரத்தின் போது, பூஜித்த மண்ணை அதே வடகிழக்கு மூலையில் கொட்டி அதன் மீது மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும். மண்ணை கொட்டிய பின்னர் அந்த மஞ்சள் துணியில் ரூ5 முடிந்து பூஜை அறையில் வைத்துவிட வேண்டும். 3 முதல் 7 மாதங்களுக்குள் நமது நிலம் தொடர்பான பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டதாக நினைக்கும் போது, மீண்டும் ரூ5 முடிச்சு போட்ட மஞ்சள் துணியை இதே பூமிநாதர் திருக்கோவிலுக்கு கொண்டு 'அபிஷேகம்' செய்ய வேண்டும். இதற்கு பெயர் 'வெற்றி அபிஷேகம்' என்கின்றனர். இதற்கு ரூ3,500 செலுத்த வேண்டும் என்கின்றனர் அர்ச்சகர்கள்.
நிலம், வீடு வாங்க பிரார்த்தனை
சரி, நிலம் வாங்க வேண்டும்/ வீடு எப்படியாவது கட்டிவிட வேண்டும் என துடிப்பவர் எனில், 3 அமாவாசை அல்லது தாம் பிறந்த அல்லது 3 பவுர்ணமி நாட்கள் அல்லது பிறந்த 3 தேதிகளில் தவறாமல் அருள்மிகு பூமிநாதர் திருத்தல் வந்து, பூமிநாதா! என் வேண்டுதலையே அர்ச்சனை மாலையாக சாத்தி இருக்கிறேன்.. என் பிரார்த்தனையை நிறைவேற்றித் தர வேண்டும் என மனமுருக பிரார்த்தித்து வர வேண்டுமாம். மேலும் அருள்மிகு பூமிநாதரை ஒவ்வொரு முறை செல்லும் போதும் 16 முறை வலம் வரவும் வேண்டுமாம். குறைந்த 10 பேருக்காவது அன்னதானமும் செய்யலாமாம். இந்த திருத்தலத்தின் அம்மனை வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பதும் ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது.
எப்போது செல்லலாம்?
மண்ணச்சநல்லூர் திருத்தலத்துக்கு பவுர்ணமி நாட்களில் சென்று வழிபாடு செய்வது சிறப்புக்குரியதாகும். அருள்மிகு பூமிநாதர் கோவிலின் வைகாசி விசாகத் திருவிழா சிறப்புக்குரியதாகும்.
மண்ணச்சநல்லூர் கோவிலுக்கு எப்படி செல்வது?
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து செல்வதைவிட திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கு சென்றுவிடலாம். அங்கிருந்து மண்ணச்சநல்லூர் பேருந்துகள் செல்கின்றன. மண்ணச்சநல்லூர் நிறுத்தத்தின் அருகேயே அருள்மிகு பூமிநாதர் திருக்கோவில் இருக்கிறது. மேற்கு மாவட்டங்கள், வட மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சமயபுரம் அல்லது நொச்சியம் வழியாக மண்ணச்சநல்லூரை சென்றடைய முடியும்.
சூரிய கதிர்கள் விழும் சிறப்பம்சம்
அருள்மிகு பூமிநாதர் திருக்கோவிலின் சிறப்பம்சங்களில் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 9,10,11 ஆகிய நாட்களில் சூரிய கதிர்கள் நேரடியாக பூமிநாதர் மீது விழுகின்றன. அப்போது சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications