திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் 29,30: ஆண்டாளின் பாசுரத்தை தினமும் படித்தால் என்ன பலன்?
திருப்பாவை - பாடல் 29
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்குவதற்காகவே வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தை கேள் கண்ணா! பசுக்களை மேய்த்து அதன் மூலம் பால் கறந்து பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ எங்களது இந்த சிறு விரதத்தை கண்டுக்காமல் இருந்துவிடாதே! நீ தரும் பொருட்களுக்காக நாங்கள் இந்த விரதத்தை இருக்கவில்லை. ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உனக்கு சேவை செய்யும் பாக்கியத்தை எங்களுக்கு கொடு கண்ணா!

திருப்பாவை பாடல் 30
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
பாடல் பொருள்: அலைகள் அதிகமாக காணப்படும் பாற்கடலைக் கடைந்த மாதவனும் கேசி என்ற அரக்கனை கொன்ற கேசவனுமான கண்ணனை அழகு முகம் கொண்ட பெண்கள் சிரமப்பட்டு தரிசிக்கிறார்கள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் 30 பாடல்களை பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதை படித்தால் திருமாலின் ஆசி கிடைக்கும்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் - 9
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!
வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பாடல் பொருள்: விண்ணுலகில் உள்ள தேவர்கள் உன்னை நெருங்க முடியாத சிவபெருமானே! உன்னை வணங்கும் அடியவர்களுக்கா நீ இந்த மண்ணுலகிற்கு வந்து அருள் செய்தாய்! பரம்பரை பரம்பரையாக உனக்கு பணி செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் புலப்படுகிறாய்! நீ கண் விழித்தால் இந்த உலகம் வாழும்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் 10
புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பாடல் பொருள்: பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்கிறாய், இது யாருக்குமே கிடைக்காத அமுதம்! நீ தூக்கத்தில் இருந்து எழுவாயாக!
-முற்றும்












Click it and Unblock the Notifications