இன்று கார்த்திகை 1: சபரிமலைக்கு மாலை அணிவதற்கான நல்ல நேரம் என்ன?
சென்னை: கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ள நிலையில் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்க நல்ல நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கார்த்திகை மாதம் முதல் தேதி இன்று தொடங்கி விட்டது. இந்த நாளில் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து மகர விளக்கு பூஜைக்காக ஐயனை தரிசிக்க சபரிமலைக்கு செல்வர். இதையொட்டி நேற்றைய தினமே மண்டல பூஜை மற்றும் மகர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுவிட்டது.

அதாவது கார்த்திகை முதல் தேதியான இன்று அதிகாலை 3 மணிக்கே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சபரிமலைக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கார்த்திகை 1 ஆம் தேதியே மாலை அணிய தொடங்கிவிடுகிறார்கள. அது போல் சிலர் இன்றைய தினம் மாலை அணியாவிட்டாலும், இந்த மாதம் முழுவதும் இறைச்சி சாப்பிட மாட்டார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் கார்த்திகை 1 பிறப்பையொட்டி அதிகாலையிலேயே குளித்துவிட்டு கோயில்களுக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருகிறார்கள். கருப்பு, காவி, நீலம் உள்ளிட்ட நிறங்களில் உடை அணிந்து விரதம் இருக்க வேண்டும்.
சபரிமலைக்கு மாலை அணிவதற்கு எந்த நல்ல நேரமும் பார்க்க வேண்டியதில்லை. முருகப் பெருமானின் கிருத்திகை நட்சத்திரம் இன்றே தொடங்குவதால் இன்று மாலை அணிய நல்ல நேரமும் பார்க்க வேண்டியதில்லை. குருசாமியிடம் மாலை அணிவது குறித்து ஆலோசனை செய்து அவர் சொல்லும் நேரத்தில் போய் மாலை அணிந்து கொள்ளலாம்.
இதற்காக குளித்துவிட்டு நெற்றியில் சந்தனம், குங்குமம், விபூதி வைத்துக் கொண்டு, முதல் முறையாக மாலை போடுவோர் கருப்பு ஆடை அணிந்தும் பல முறை இருமுடி கட்டிச் சென்றவர்கள் நீலம், கருப்பு ஆடையை அணிந்து கொண்டும் துளசி மாலையை எடுத்துக் கொண்டு குருசாமி சொல்லும் இடத்திற்கு செல்லலாம். கோயிலாக இருந்தால் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து குருசாமி முன்பு மண்டியிட வேண்டும்.
பின்னர் மனமுருக குலதெய்வத்தையும், விநாயகரையும் பிரார்த்தனை செய்து ஐயனையும் எண்ணி மாலை அணிந்து கொள்ளலாம். அப்போது சரண கோஷம் சொல்ல வேண்டும். மாலை அணிந்துவிட்டால் சபரிமலைக்கு போய்விட்டு திரும்பும் வரை அதை கழற்றவே கூடாது. நடுவில் வீட்டில் அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால் மட்டுமே மாலையை கழற்றுவது பற்றி யோசிக்க வேண்டும். அதுகூட குருசாமியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த விரத நாட்களில் இரு வேளையும் குளித்தல் நல்லது. உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் ஒருவேளை குளித்தால் நல்லது. குழந்தைகள் வெந்நீரில் குளிக்கலாம். சைவ உணவு மட்டுமே எடுக்க வேண்டும். முட்டையை கூட தவிர்த்து விடலாம். ஒரு வேளை மாலை போட்டவர் கசாப்பு கடைகளில் பணியாற்றுபவர்கள் என்றாலும் அவரது தொழிலை செய்யலாம். மாலை வந்ததும் மீண்டும் ஒரு முறை குளித்துவிட வேண்டும்.
இரு வேளையும் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும். இலைகளில்தான் சாப்பிட வேண்டும். ஏற்கெனவே சாப்பிட்ட எச்சில் தட்டில் சாப்பிடக் கூடாது. மாலை அணிந்து கொண்டு சிகரெட் பிடிப்பது, பான் போடுவது, புகையிலை போடுவது, மது குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. அது போல் மனைவியிடம் இருந்து தள்ளியே இருத்தல் வேண்டும்.












Click it and Unblock the Notifications