புரட்டாசி சனிக்கிழமை..திருப்பதியில் கோவிந்தா முழக்கம்.. 36 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவம் முடிந்த நிலையில் புரட்டாசி மாத 2வது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். மலை எங்கும் கோவிந்தா முழக்கம் எதிரொலிக்கிறது. இலவச தரிசன வரிசையில் 36 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நிச்சயம் என்ற காரணத்தினாலேயே தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். புரட்டாசி மாதத்தில் எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அதுவும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு விஷேசமானது.

திருப்பதியில் கடந்த செவ்வாய்கிழமை வரை வருடாந்திர பிரமோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசனம், விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 9 நாட்களில் மட்டும் 26 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பிரமோற்சவம் முடிந்தாலும் புரட்டாசி மாத உற்சவங்கள் நடைபெறுவதால் திருமலையில் சாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் பக்தர்கள் தங்கும் அறைகள் நிரம்பி சாமி தரிசனம் செய்ய 7 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வார விடுமுறை, சனி, ஞாயிறு, திங்கட்கிழமை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் திருமலைக்கு சென்றுள்ளனர். காலாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும் பக்தர்கள் திருமலைக்கு சென்றுள்ளனர். நாளைய தினம் புரட்டாசி 2வது சனிக்கிழமை என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதில் பெரும்பான்மையானவர்கள் தமிழக பக்தர்கள் என கூறப்படுகிறது. இலவச தரிசனத்திற்கு 36 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதையடுத்து பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
செப்டம்பர் மாதம் பிரம்மோற்சவம் நடந்து முடிந்துள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவம் நடைபெறும் பத்து நாட்களும் தினசரியும் காலையும் மாலையும் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்பசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.












Click it and Unblock the Notifications