திருப்பதி. திருச்சானூர் கோவில்களில் ரத சப்தமி.. விஐபி பிரேக் தரிசனம்..சேவைகள் ரத்து - முழு விபரம்
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் வசந்த பஞ்சமி, ரத சப்தமி விழாக்களை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சர்வதர்ஷன் டைம் ஸ்லாட் டோக்கன்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக தலைவர் தர்ம ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தினசரியும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். தினசரியும் உண்டியல் காணிக்கை மட்டும் 4 கோடி ரூபாய் வரை கிடைக்கிறது. மாதந்தோறும் ஏழுமலையான் கோவிலுக்கு 100 கோடிக்கும் மேல் உண்டியல் வருமானம் கிடைக்கிறது.

இந்த ஆலயத்தில் புரட்டாசி மாத பிரம்மோற்சவம், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழாவை போல தை மாதத்தில் ரத சப்தமி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படும். மினி பிரமோற்சவ விழா என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. ரதசப்தமி என்பது மகா சப்தமி என்றும் சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது.
சூரிய பகவான் தன்னுடைய ஏழு குதிரைகளையும் தென் திசையிலிருந்து வட திசைக்கு நகர்த்தி செல்லும் காலத்தின் துவக்கமாக இந்த ரத சப்தமி அமைகிறது. சூரிய பகவானின் ஏழு குதிரைகளும் வானவில்லின் ஏழு வண்ணங்களையும் 12 சக்கரங்களும் 12 ராசிகளையும் குறிக்கும் வண்ணம் அமைகிறது.
வைஷ்ணவ ஆலயங்களில் பெருமாளை சூரிய நாராயணராக பாவித்து ரத சப்தமி விழா கொண்டாடுகின்றனர். ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி நாளில் காலை முதல் இரவு வரை 7 வாகன சேவைகளில் மலையப்பசுவாமி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். கோவிலின் நான்கு மாடவீதிகளில் மலையப்பசுவாமி மாட வீதிகளில் உலா வரும் போது வாகன வீதி உலாவுக்கு முன்னால் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடைபெறுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
ரத சப்தமி நாளில் விஐபி பிரேக் தரிசனம் இருக்காது, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கை குழந்தைகளின் பெற்றோருக்கு சிறப்பு தரிசனம் கிடையாது. அன்றைய தினம் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்த மாதம் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சர்வதர்ஷன் டைம் ஸ்லாட் டோக்கன்கள் ரத்து செய்யப்படும் என்றும் இந்த டோக்கன்கள் ஏன் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக தலைவர் தர்ம ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலிலும் ரதசப்தமி உற்சவம் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.பத்மாவதி தாயார் காலை 7.15 மணி முதல் 8.15 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் துவங்கி இரவு வரை ஏழு வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளுவார் பத்மாவதி தாயார்.
காலை 8.45 மணி முதல் 9.45 மணி வரை ஹம்ச வாகனம், தொடர்ந்து அஸ்வ வாகனத்தில் அம்மன் உலா வருவார். 11.45 மணி முதல் 12.45 மணி வரைக்கும் கருட வாகனத்திலும் தொடர்ந்து சின்ன சேஷ வாகனத்திலும் உலா வருவார் பத்மாவதி தாயார். பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்தாபன திருமஞ்சனம் நடைபெறும். மாலை 6 மணி முதல் 7மணி வரை சந்திர பிரபை வாகனத்திலும் 8.30 மணி முதல் 9.30 மணி வரைக்கும் கஜ வாகனத்தில் உலா வந்து அருள்பாலிப்பார் அம்மன்.
ரத சப்தமி விழா நாளில் அம்மன் உலா வருவதால் அன்றைய தினம் வழக்கமாக நடைபெறும் லட்சுமி பூஜை, கல்யாண உற்சவம், குங்கும பூஜை, விஐபி பிரேக் தரிசனம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வரும் 13ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் கோவிலை தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கோவில் கருவறை முதல் பிரசாத தயாரிப்பு கூடங்கள், துணை கோவில்கள் ஆகியவை உள்ளிட்ட கோவிலின் அனைத்து பகுதிகளும் கழுவி சுத்தம் செய்யப்படும். அதனை தொடர்ந்து கோவில் சுவர்களுக்கு நறுமண கலவை பூசப்படும். மூலவருக்கு நைவேத்தியங்கள் படைக்கப்பட்ட பின்னர் பிற்பகலுக்கு மேல் பக்தர்கள் தாயாரை வழிபட அனுமதி அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications